முந்திரிமரத்தில் மழைத்துளிகள்

Nov 7th, 2010 | எழுத்தாளர்: | பகுப்பு: இதழ் 33, கவிதைகள்

அது
காதலுக்கு அருகில் இருந்தது.
மிக அருகில்.
உக்கிரமிக்க யுத்த நிலத்தில் நீயும்
கண்காணிப்பும் அச்சமுமான பயணத்தில் நானும்
வாழ்வை எழுதிக் கொண்டிருந்தோம்
இழப்புகள் உயிரில்
கனவுகள் கண்களில் சேர்ந்திருந்தன

முதுவேனிற்கால வல்லூறுகள் சத்தமிடும்
மின்சாரமற்ற இரவில்
உன்னைச் சுட்டுக்கொன்றனர்
செம்மணலில் உன்னுடைய இரத்தம்
உன்னுடைய இறுதிக்கவிதையை எழுதியது
மனைவி, மகன்களின் கண்முன்னே
புறாவின் ஒடுக்கமாய் நீ இறந்தாய்
குமுறி வெடித்த அவர்கள் சப்தங்கள்
இந்தப் பாழும் உலகை மோதிய போது
உணர்வு மிக்க கவிஞனைப் பறிகொடுத்தேன்

காதலுக்கு மிக அருகில் இருந்தது
கடலை ஊமையாக்கிவிடும் துயரம்

நாய்கள் ஊளையிடும் நடுநிசியில்
நீ எனக்கெழுதிய கடிதங்களில்
அந்நியமான காலடி ஓசைகளும்
பயங்கரமான நடுக்கங்களுமிருந்தன
இப்போது உன் எழுத்துகள் என்னோடு கிசுகிசுப்பதை
எதையோ விசும்புவதை
படுக்கையில் வியர்வை வழிய துணுக்குற்றுணர்கிறேன்
உன் பிரிவிலிருக்கின்ற அகற்றமுடியாத இருட்டு
மலை முகடுகளில் திரும்பத் திரும்ப உறைகின்றது

பனிக்காற்றில் சாந்தம் கொள்ளும்
எளிமையான உனது கல்லறையில் வைப்பதற்கு
உண்மைகள் பற்றிய கவிதையை
மௌனங்களால் எழுதிவருவேன்
விடுபடமுடியாத வலியுடனிருப்பவளுக்கு
உனது மென்மையான இதயத்தைப்போன்ற பூச்செண்டை
குழந்தைகளுக்கு முத்தங்களையும் கொண்டுவருவேன்
மழைத்துளிகள் சொட்டுகின்ற
முந்திரி மரத்தை கடந்து செல்லும்
புகைமூட்டமான காற்றில்
பறந்துகொண்டே இருக்கின்ற உன் விழிகள்
எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருக்கும்
(சந்திரபோஸ் சுதாகருக்கு)

Tags:

Comments are closed.