வடமராட்சி வாழ்க்கையின் முன்னிலைப் புனைகதை ஆசிரியர்

Nov 7th, 2010 | எழுத்தாளர்: | பகுப்பு: இதழ் 33, கட்டுரைகள்

குறிப்பிட்ட ஒருவரது வரலாற்றுநிலைச் சாதனையையப் புரிந்து கொள்வதற்குச் சுலபமான, அதேவேளையில் சிக்கல்கள் நிறைந்த, ஒரு முறைவழி உண்டு. அந்த அணுகுமுறை நடைமுறைச் சாத்தியமானதல்லவெனினும் ‘ஆய்வு நோக்கு அணுகு’ முறையெனுமளவில் வலுவுடையதென்பதை மறுக்க முடியாது.

அதாவது ஒருவரைப் பற்றிய கணிப் பொன்று வேண்டுமெனில் அவரது ஆக்கங்களை எடுத்துவிட்டு, அந்தக் காலத்து இலக்கியத் தொகுதியினை நோக்கும் பொழுது அந்தக் காலத்துக்குரிய இலக்கிய வரலாற்றுச் செழுமை எந்த அளவுக்குப் பாதிப்படைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ளலாகும்.

இதனை எடுகோள் நிலையில் பல் வேறு மட்டங்களிலே கண்டறிந்து கொள்ளலாம். உதாரணமாக, உலக நாடக நிலையில் நாளைக் காலை திடீரென சேக்ஸ்பியருடைய நாடகங்கள் இல்லாமல் போய்விடின் உலக நாடகச் செழுமை எந்த அளவுக்குப் பாதிக்கப்படுமென்று உய்த்தறிந்து கொள்ளலாம்.

இதனைப் பல மட்டங்களிலே செய்து பார்க்கலாம். புதுமைப்பித்தன் அல்லது கல்கி இல்லாத தமிழ்ப் புனைகதை, பேராசிரியரர் கணபதிப்பிள்ளை அன்றேல் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடக எழுத்துருக்கள் இல்லாத ஈழத்து நாடகம், டானியலின் நாவல்கள் இல்லாத ஈழத்துப் புனைகதைகள் நிலை எவ்வாறு இருக்கும் என்பது பற்றிச் சிந்திப்பதையே இங்கு குறிப்பிடுகிறேன்.

இந்த அணுகுமுறையினைத் தெணியான் நிலையிலே பிரயோகித்துப் பார்க்க விரும்புகிறேன். அதாவது தெணியானது எழுத்துகள் இல்லையென்றால் இன்றைய ஈழத்து இலக்கியத்தின் செழுமை எந்த அளவிலாவது, எந்த மட்டத்திலாவது வெற்றிடமொன்றினை ஏற்படுத்துமா என்பதைத் திருஷ்டாந்தமாக நோக்குதல் வேண்டும்.

தெணியானின் புனைகதைகள் இல்லையெனின், நிச்சயமாக வடமராட்சியினது சமூக வμலாற்றில் ஒரு மிக முக்கியமான பகுதி தெரியாமலே போய்விடும். ‘மாத்து வேட்டி,’ “பொற்சிறையில் வாடும் புனிதர்கள்,’ “மரக்கொக்கு’ என வரும் எழுத்துக்கள் இல்லையெனின் நிச்சயமாக வடமராட்சி வாழ்க்கையின் முழுமையை நாம் அறிந்துகொள்ள முடியாது. அந்த வகையில், தெணியானது நாவல்கள் மிக முக்கியமானவையாகும்.

தெணியானின் எழுத்துகள் இன்னு மொரு வகையிலே முக்கியமாகின்றன. 1950, 60களில் முற்போக்குத்துறை ஆக்க இலக்கியம், அடிநிலைச் சமூக எழுத்தாளர்கள் பலர், தங்கள் சமூகத்தைத் தாங்களே பார்க்கின்ற முறைமையிலே அமைந்திருந்தது. இது, தமிழிலக்கியத்துக்கு முன்னர் எக்காலத்திலும் காணப்படாத ஒரு பார்வையைத் தந்தது. அதாவது ஒடுக்கப்பட்டவர்கள் தாங்களே அந்த ஒடுக்குமுறையின் அவலங்களைக் கூறுவதாகும்.

ஆனால் யாழ்ப்பாண வμலாற்றை நோக்கும்பெழுது சமூக மட்டத்தில் முக்கிய மாற்றங்கள் பல 1930கள் முதல் குறிப்பாக 1950களிலிருந்து ஏற்படத் தொடங்கின. அது காரணமாக சமூக இயலாமைகள் குறையத் தொடங்கின. சமூக நிலையில் சமவாய்ப்புகள் கிடைக்கும் ஒரு நிலை ஏற்பட்டது. இதனால் அடிநிலைச் சமூகத்தினரென்று கருதப்பட்டவர்கள், சமூகத்தின் மற்றைய குழுமங்களை மதிப்பிடும் ஒரு பண்பு வளரத் தொடங்கிற்று. இதன் காரணமாக சமூக யதார்த்த நோக்கமுடைய எழுத்துகள் இடம் பெறத் தொடங்கின. கே. டானியல் இதற்கான நல்ல உதாμணம்.

இந்நோக்கு படிப்படியாக வளரத் தொடங்கிய பொழுது, அரசியல் நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக யாழ்ப்பணத் தமிழர் சமூகத்தைப் பொதுநிலையில் பிரித்துப் பார்க்கின்ற முறைமை குறையத் தொடங்கிற்று.

உண்மையில் இந்தக் கட்டத்தில் சாதியும் வர்க்கமும் (Caste and Class) அமைப்பு நிலையில் முன்னர் இருந்தது போல இணைந்திருக்கவில்லை. இதனால் மத்தியதர வர்க்க வளர்ச்சி ((Middle Class) ஏற்பட்டது. அது சாதி வேறு பாட்டை ஊடறுத்துக் கொண்டு முக்கியப் படத் தொடங்கிற்று. தொழின்மை வர்க்கத்தினர் ((Professional) பலர், பெரும் பாலும் (ஆசிரியர்கள், லிகிதர்கள்) மேற் கிளம்பினர். அவர்களை சமூகமும் உரிய முறையிலே மிகுந்த கௌரவத்துடன் நடத்தத் தொடங்கிற்று. இப்படி வளர்ந்த அந்த மட்டத்தில் ஒரு வர்க்க உணர்வு காணப்படத் தொடங்கிற்று. வடமராட்சியைப் பொறுத்தவரையில், இந்த வர்க்க வளர்ச்சியை வதிரி தேவராயாளிச் சமூகமென நான் குறிப்பிடும் சமூகத்தின் வரலாற்றிலே காணலாம்.

தெணியானை இந்த வளர்ச்சியின் உதாராணமாகப் பார்த்தல் வேண்டும். மேலே சொன்னபடி இலங்கையின் இனக்குழுமப் பிரச்சினையில் தமிழர்கள் என்ற இனக்குழுமம் முக்கியமான தனி அரசியற் கூறாகக் கொள்ளப்படும் நிலைமையும் சாதி முரண்பாடும் வளர்ந்து சென்றுகொண்டிருக்க, மேற்சென்ன வர்க்க வளர்ச்சியும் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இந்தப் புதுத் தலைமுறை எழுத்தாளர்கள் தம்மைச் சூழவுள்ள, “உயர் சாதியினரென்று’ எடுத்துக் கூறப்படும் மக்கள் குழவினரை மனி தாயதக் கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினர். இவர்களிடத்து தம் மைச் சூழவுள்ள வர்க்க நிலையிற் குறைந்த மக்களின் இன்பதுன்பங்களைத் தமது எழுத்துகளின் விடயப் பொருளாக்கினர்.

உண்மையில் தெணியான் இந்த வளர்ச்சி கட்டத்தினை உருவகித்து நிற்கிறாரென்றே கருதுகிறேன். உதாரணமாக நம்மிடையே உள்ள பிராமணச் சமூகத்தின் அவலங்கள் பலவற்றை “பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ என்ற நாவல் மூலம் எடுத்துப் பேசுகிறார். இக்கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது ‘மரக்கொக்கு’ ஒரு மிக அற்புதமான நாவலாகும். கொக்கு மீன் பிடிக்கும். ஆனால் மரக்கொக்கு….? அது கொக்குப் போல இருக்குமே தவிர, கொக்கை நினைவுறுத்துமே தவிர கொக்கின் பணியை, பயன் பாட்டைத் தரமுடியாது.

பொதுவாக 1970களுக்குப் பின், குறிப்பாக 1983இன் பின், தமிழரின் ஒருமை நிலையை வற்புறுத்த வேண்டிய அரசியற் தேவையும் ஏற்பட்டது.

இந்தக் காலத்திலே இலக்கியம் பற்றிய சிரத்தை மிகக் குறைவாகவே காணப்பட்ட தெனலாம். இக்காலகட்டத்தில் இலக்கியத்தினை சமூக மாற்றத்துக்கான சாதனமாகக் கொள்ளும் மரபு வலுவிழந்தது என்றுகூடச் சொல்லாம். ஆனால் இலங்கையில், வெகுஜன வாசிப்பு மரபு தமிழகத்திலே காலூன்றியது போல இங்கு காலூன்ற முடியவில்லை.

‘மரக்கொக்கி’ல் வரும் பெண் பாத்திரங்கள் இவ்வகையில் நோக்கும்பொழுது மிக முக்கிய மானவையாகின்றன. தெணியானின் இந்தப் பண்பு துர்திர்ஷ்டவசமாக அழுத்திக் கூறப்படாமற் போய்விட்டது. இதற்குக் காரணம் இல்லாமலில்லை. அந்தக் காரணம் தெணியானின் பலத்தையும் பலவீனத்தையும் ஒருங்கு சேரக் காட்டுகிறன்றது.

சாதிப் பிரக்ஞை என்ற ஒன்றைத் தவிர சமூக பொருளாதார அந்தஸ்தில்லாத வர்களின் சுகதுக்கங்களை தெணியான் கதை கூறுப வராகக் கூறிச்செல்கிறார். இது அவரது பார்வைக்கு முக்கியமாகின்றது. இதனை எவ்வாறு சித்திரிப்பது (Portray) என்பது பற்றி தெணியான் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

அப்படியான ஒரு முயற்சி தெணியானது நாவல்களில் மாத்திரமல்லாமல் சமூக யதார்த்த நாவல் வளர்ச்சியிலும் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

இதுவரை 11 நூல்கள் வெளிவந்துள்ள நிலையில் தெணியான் நாம் மேலே கூறிய அடுத்த கட்டத்திற்கு நமது பிரதேச சமூக வரலாற்று நாவல்களை எவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டும் என்பது ஒரு முக்கிய வினாவாகிறது. இக் கட்டத்தில் ஆக்க இலக்கிய எழுத்துநடை பற்றியொரு முக்கியக் குறிப்பினை எடுத்துக் கூற வேண்டியது அவசியமாகும். (உண்மையில் இது ஆக்க இலக்கியத்துக்கு மாத்திரமல்ல, எந்த எழுத்துக்கும் பொது வானது).

துர்திர்ஷ்டவசமாக நாம் இன்னுந்தான் நமது எழுத்தாளர்களின் “உரை நடைக் கையாளுகை’ பற்றி ஆராயத் தொடங்க வில்லை. அப்படிச் செய்கின்ற பொழுது இரண்டு விடயங்கள் முக்கிய மானவையாகும். ஒன்று வாக்கிய அமைவு, இரண்டாவது சொல் தேர்வு.

வாக்கிய அமைதி பற்றிய ஓர் உளவியல் உண்மையினை இங்கு பதிவு செய்தல் வேண்டும். ஒரு வாக்கியமென்பது உண்மையில் அதனை எழுதுபவரின் சிந்தனையோட்டத்தின் வரைபடமேயாகும் (Graph). அந்த வாக்கியத்தில் எது முதலிலே சொல்லப்படுகின்றது, எது இறுதியிலே சொல்லப்படுகின்றது, அதன் எழுவாய் பயனிலை அமைதியாது என்று சிந்திக்கத் தொடங்கும் பொழுது தான் இந்தப் ‘பாடவியற் பகுப்பாய்வு’ (Textual Analysis) இடம்பெறுகிறது.

இதனை வைத்துக்கொண்டு தெணியான் சம்பந்தமாகப் பின்வரும் வினாவைக் கிளப்புதல் வேண்டும். அதாவது, அவர் ஒரு கதையைச் சொல்லிக்கொண்டு போகின்ற பொழுது அந்தக் கதை பற்றிய, அவரது மனதிலே விழுந்துள்ள படிமங்கள் யாவை என்பதாகும்.

தலைப்பிலும் “இன்னொரு புதிய கோணம்’ என்ற தலைப்பிலும் தொழிற்படும் அவரது மனப் படிமங்களை (Mental Images) ஊன்றி ஆராயும்பொழுது, பிரச்சினையை இனங்காணுகிற முறையும் பார்வையின் ஆழமும் வளர்ந்து செல்வதைக் காணலாம். இந்த விடயம் தனியே ஆராயப்படவேண்டிய ஒன்றாகும். துர்திர்ஷ்டவசமாக, எமது பல்கலைக்கழகங்களிலே இந்த விமர்சன முறைமை கற்பிக்கப்படுவதுமில்லை; பயிற்றப் படுவதுமில்லை. ஆனால் தெணியான் போன்ற 40 – 45 வருட கால எழுத்தாளர்களின் வளர்ச்சிக் கோலத்தை அறிவதற்கு இத்தகைய நோக்கொன்று அவசியமாகிறது.

தெணியானது ஆக்கங்களை காலவரிசைப்படுத்தி அந்த வரிசையினூடே மேற்கிளம்புகின்ற, வளருகின்ற (வளராது போன) ஆக்கவியற் பண்புகளை இனங்கண்டு, ஆராய்தல் வேண்டும். ஈழத்திலக்கிய மட்டத்தில் அப்படி ஆராய்வதற்கு தெணியான் மிகவும் பொருத்தமானவர்.

இலக்கிய விமர்சனம் என்பது எதைச் சொல்கிறார், எப்படிச் சொல்கிறார், அதிலுள்ள சிறப்புகள் யாவை என்ற வாய்பாட்டுக்கு மேலே செல்லுதல் வேண்டும். உண்மையில் இது ஒரு நாவலை, கவிதையை எவ்வாறு வாசித்தல் வேண்டும் என்பது பற்றிய பிரச்சினையாகும். தெணியானது நாவல்களின் சமூக வரலாற்று முக்கியத்துவத்தை ஆராய்வதுடன் தொடங் கி ய நாம், அவரது எழுத்தின் உளவியல் பற்றிச் சிந்திக்கத் தொடங்குவது அவசியம்.

Tags: , ,

Comments are closed.