தெணியானுடைய சமூக வலு

Nov 7th, 2010 | எழுத்தாளர்: | பகுப்பு: இதழ் 33, கட்டுரைகள்

தெணியானுடைய இலக்கிய, அரசியல் வாழ்வையும் வளத்தையும் மதிப்பிடுவதற்கு இப்போது நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நமது இலக்கிய திறனாய்வு மரபில், இலக்கியச் செல்நெறிகளுக்கு வழங்கப்பட்ட ஆய்வுச் சிறப்பிடம் இலக்கிய ஆளுமைகளுக்கு வழங்கப்படவில்லை என்கிற நிலை தொடர்ந்து நிலவி வருகிறபோதும் ஆங்காங்கே சில ஆய்வு முயற்சிகள் தனித்தனி ஆளுமைகள் குறித்து இடம் பெறுவது பயன்மிக்கதாகும். அந்த வகையில் தெணியான் பற்றிய இந்த மலர் சிறப்பிடம் பெறுகிறது.

தெணியானுடைய இலக்கியப் படைப்புகளை ஆய்வு செய்வதோ அல்லது அவை பற்றிச் சுவைப்பட விரித்துக் கருத்துரைப்பதோ அல்ல இக்கட்டுரையில் எனது நோக்கம் அன்று. இன்று அப்பணியை செய்வதற்கு அந்த துறை சார்ந்து புலமை மிக்க பலர் உள்ளனர்.

தெணியானுடைய வாழ்விலிருந்தும் இலக்கியத்திலிருந்தும் அμசியலையும் சமூக வரலாற்றையும் பிரிக்க முடியாது என்பதால் தெணியானுடைய படைப்புகளை இலக்கியத் தளத்தில் மட்டுமே அணுகுவது ஒற்றைப் பரிணாமம் கொண்ட பார்வைகளையே வலியுறுத்தி விடும். அவை பொருத்தமானவையும் அல்ல. தெணியானுடைய புனைகதை சாரா எழுத்துகளின் அடிப்படையில் அவருடைய வாழ்வையும் பணியையும் மதிப்பிடுகிறபோது புதிய பார்வைகளும், பயன் மிக்க அரசியல் நோக்குகளும் நமக்குக் கிடைக்கின்றன.

தெணியானுடைய வாழ்வையும் எழுத்துகளையும் முன்வைத்து இவ்விடயங்களைப் பேசுகிறபோது நான்கு சிறப்புமிக்க கூடவே அரசியல் சார்ந்து முக்கியத்துவம் பெறக்கூடிய அம்சங்களை பற்றி இக் கட்டுரையில் எழுத விரும்புகிறேன்.

முதலாவதாக, நான் குறிப்பிட விரும்புவது சமூக வரலாற்றுக்கும் படைப்பாளிக்கும் உள்ள உறவு என்ன என்கிற கேள்வி யைப் பற்றியதாகும். இலக்கியப் படைப்புகளைச் சமூக வரலாற்று ஆவணங்களாகவும் சமூகவியல் தொல்லுபகரணங்களாகவும் குறுக்கி விடுகிற பெரும் பிழையை ஒருவர் செய்ய முடியாது. எனினும் அரசியல், வரலாற்று நிர்ப்பந்தங்கள் காரணமாக படைப்பாளி ஒருவர் சமூக வரலாற்றுக்கும் அரசியல் ஓட்டத்துக்கும் இழுத்து செல்லப்பட்டு விடுவதும் தவிர்க்க முடியாமல் நிகழ்ந்து விடுகிற ஒன்றுதான். தெணியானின் இலக்கியம் மட்டுமின்றி அவரது ஏனைய பல கட்டுரைகளும் நமது சமூக வரலாற்றின் கறை படிந்த பக்கங் களையும் துயர் சுமந்த நினைவுகளையும் எழுச்சி தரும் அனுபவங்களையும் தாங்கி நிற்கின்றன.

படைப்பாளிதான் விரும்பியோ, விரும்பாமலோ தன்னுடைய காலத்தின் குரலையும் பதிவு செய்து விடுகிறார். வேறு சான்றுகள் அற்ற நிலையில் இலக்கியப் பதிவுகளும் கலை வடிவங்களும் நமது வாழ்வினதும் சமர்களதும் எதிர்ப்பினதும் இருப்பையும் உயிர்ப்பையும் காட்ட முடியும்.

தெணியான் இலக்கியத்துக்கு அப்பால், ஒரு சமூக வரலாற்று ஆசிரியனாகவும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டு வந்திருக்கிறார். வடபுலத்துச் சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி மேம்பாடு போன்ற விடயங்கள் குறித்த அவருடைய கட்டுரைகள் ஈழத் தமிழ் மக்களின் சமூக வரலாற்று ஆவணங்களின் தொகுதிக்கு ஒரு காத்திரமான பங்களிப்பாகும். அவருடைய தன்வரலாறு ‘இன்னும் சொல்லாதவை’ என்ற பெயரில் இலங்கையிலிருந்து வெளியாகிற ‘ஞானம்’ இதழில் தொடராக வெளிவந்தது. அவருடைய பள்ளி அனுபவங்களும், ஆசிரிய அனுபவங்களும் “பூச்சியம் பூச்சியம் அல்ல’ என்ற தலைப்பில் ‘மல்லிகை’யில் தொடராக வெளிவந்தன. கே.டானியல், எம்.சி.சுப்பிμமணியம், ஆசிரியர் முருகேசு ஆகியோர் பற்றியும் தேவராயாளி சைவ/ இந்து கல்லூரி பற்றிய அவரது கட்டுரைகளும் யாழ்ப்பாணத்துச் சாதிய மரபு, அந்த மரபைத் துடைத்தெறியப் புறப்பட்டவர்களின் சமர் வரலாறு, அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் பற்றிய துல்லியமான பதிவுகளாகும். படைப்பாளி, போராளி, சமூக வμலாற்றாசிரியன் என்ற மூன்று தளங்களிலும், மிக இயல்பாகக் ‘கூடு விட்டு கூடு’ பாய்வது போல மாறி மாறி இயங்கி வந்தவர் தெணியான் என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல. படைப்பாளியை போராளி என்று நான் குறிப்பிடுகிற போது பலருக்கு சங்கடம் தரக்கூடிய கூற்றாக அது அமையலாம். ஆயுதப் போராட்டமும் படுகளமும் நமது வாழ்வையும், சிந்தனையையும், கற் பனையையும் எல்லைப்படுத்திக் கொண்டிருக்கிற காலக்கட்டங்களில் ஆயுதத்துடன் உறவற்றவர்கள் போராளிகள் அல்லர் என்ற கோட்பாடு பெரிதும் உரம் பெற்றுள்ளது. எனினும், ‘நாளாந்த எதிர்ப்பு’ அல்லது எம்மால் முடிந்த வரை எமக்குத் தெரிந்த மொழியிலும், வடிவத்திலும் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதுகூட போராட்டம் தான் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த அம்சம்தான் தெணியான் பற்றிய மதிப்பீட்டின் இரண்டாவது தளத்திற்கு நம்மை இட்டு செல்கிறது.

ஒடுக்குமுறைகளுக்கு பலமான சமூக, அரசியல் தளங்கள் இருக்கின்றன. எனினும், ஒடுக்குமுறை அன்றாடம் செயல்படுகிற முறைமையை ஒடுக்கப்படுவர்கள் மட்டுமே நுணுக்கமாகப் பட்டறிந்து கொள்கிறார்கள். ஒடுக்கு முறையினதும் மேலாட்சித் திமிரினதும் அன்றாட வெளிப்பாடுகளையும், வடிவங்களையும் ஒருவர் பல்வேறு வகையில் எதிர்க்கமுடியும். இதற்குரிய சிறப்பான எடுத்துக்காட்டுகளைத் தெணியானின் வாழ்விலிருந்து சுட்டிக்காட்டமுடியும். அவருடைய தன் வரலாற்றுப் பதிவுகளில் இத்தகைய எடுத்துக்காட்டுகள் பல பக்கங்களை நிறைத்துள்ளன. தந்தையாரின் கள்ளுக் கடையில் பணிபுரிந்தபோது சாதித்திமிர் பிடித்தவர்களுக்குப் பதிலடித்திமிர் காட்டியதிலிருந்து சாதி ‘ஆசார சீலர்’ கள் நிறைந்திருந்த ஆசிரியர் கலாசாலை விடுதி வாழ்வில், உணவு பரிமாறும் பொறுப்பை “ஆக்கிரமிப்பு’டன் பெற்று கொண்டதன் மூலம் சாதி வெறிபிடித்த சக மாணவர்களை எதிர்த்து அடக்கியதுவரை தெணியானின் அன்றாட எதிர்ப்புகளுக்கு ஒரு தொடர்ச்சியான வரலாறும் உள்ளது. ஒடுக்குமுறை, நுட்பமாகவும், மறைமுகமாகவும், “நாகரிகமாகவும்’ தன்னைக் காட்டி கொள்கிறபோது, பல தடவைகளில், வள்ளுவர் வழியையும் தெணியான் பயன் படுத்தியிருக்கிறார். அது தான் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பதாகும். தெணியானுடைய வாழ்க்கை வரலாறு நூல் வடிவம் பெறுவது, அவசியமாகும்.

தெணியானிடமிருந்து நாம் பெற்றுக் கொள்கிற மூன்றாவது முக்கியமான விடயம், அவருடைய வாழ்வும் எழுத்து களும் தூண்டி விடுகிற சமூக வலு என்பதாகும். ஒருவருடைய வாழ்வும் படைப்புகளும் தமது சமூக வலுவை எவ்வாறு பெற்றுக் கொள்கின்றன, அப்படிப் பெற்றுக் கொள்ளப்படுகின்ற சமூக வலு தொடர்ச்சியாகப் பல தலைமுறைகளுக்கும் பேணப்படமுடியுமா ஆகிய கேள்விகளை சமூக வலுத் தொடர்பாக நாங்கள் எழுப்ப முடியும். கூடவே, ஒருவரது வாழ்வும் படைப்புகளும் நிகழ்ந்தபோது இருந்த சமூக, அரசியல், வரலாற்று உறவு நிலைகள் மாற்றம் பெற்றுவிட்டபோதும் அப்படைப்பாளி கிளர்த்திய சமூக வலு தொடர்ச்சியாக, உயிர்ப்பாக இருக்க முடிவது எங்ஙனம்? இலக்கிய, அரசியல் விமர்சனங்களுக்கு இத்தகைய கேள்விகள் முக்கியம் என்று கருதுகிறேன், “சமூக வலு’ என்று நான் குறிப்பிடுகிறபோது, மரபார்ந்த மார்க்சியம் பேசுகிற “சமூகப் பார்வை’, ‘வர்க்கப்பார்வை’, என்பனவற்றை நான் கருதவில்லை. படைப்பாளி ஒருவரின் எழுத்துகளும் வாழ்வும் வலி, துன்பம், நகை, அச்சம், துணிவு, எதிர்ப்பு, சஞ்சலம், பேரவலம், பேருவகை, பெருங்கோபம், என்பவற்றைத் தூண்டக்கூடியதாக அமையமுடியும். இந்த உணர்வுகள் சிறு வாசகத்தளத்தில் ஏற்படலாம். அல்லது பரவலாக, பெரும் தளத்திலும் ஏற்படமுடியும். இந்த உணர்வுகள் ஒரே நேரத்தில் எழுப்பப்படலாம். அல்லது மாறி மாறி வருகிற காலகட்டங்களில் மாறி மாறி வர நேரலாம். இலக்கியப் படைப்பாளியும் அவரது வாழ்வும் உருவாக்குகிற சமூக வலு எத்தகையது என்பது நமக்கு முக்கியமானது. வெறும் இலக்கியவாதியாக மட்டுமே நின்று விடாமல் எதிர்ப்பாளராகவும் மறுத்தோடியாகவும் இயங்குகிற ஒரு படைப்பாளியின் உலகம் உருவாக்குகிற சமூக வலு கணிசமானது. அதேபோல, பொதுவான இலக்கிய வடிவங்களுக்கு அப்பால், தன் வரலாறு, புனைகதை சாரா எழுத்து, இதழியல் என்று பல்வேறு இருப்பிடங்களிலும் தரிப்பிடங்களிமிருந்து செயற்படுகிற ஒரு படைப்பாளி தரும் சமூகவலு மேலும் உயிர்ப்பானது. அந்த வகையில், தெணியான் உருவாக்குகிற சமூக வலு நுட்பமானதும் காத்திμமானதும் ஆகும். அவரும் அவர் போன்று ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து உருவாகிய ஏனைய பல எழுத்தாளர்களும் வழங்கிய சமூக வலு நமது அμசியல், இலக்கிய வாழ்வையும் நமது எண்ணக்கருக்களையும் தீவிரமாக மாற்றியுள்ளன.

தெணியானின் படைப்புகள் நமக்குத் தரும் மற்றுமொரு, முக்கியமான விடயம் உணர்வுத் தோழமை (Solidarity) பற்றி அவர் நேரடியாகவும் உள்ளார்ந்தும் பேசுவதாகும். Malcolm X என்னும் கறுப்பு மக்களின் போராளியின் வாழ்வும் அவரது மேடைப் பேச்சுகளும் மிகவும் புகழ்வாய்ந்தவை. அவர் பற்றிய திøμப்படம் ஒன்றில் Malcolm X வருகிற காட்சியை இங்கு நினைவு கூர விரும்புகிறேன். அற்புதமான பேச் சொன்றினை நிகழ்த்துகிறார் Malcolm X. அவையில் கறுப்புமக்களுடன் வெள்ளை இனத்தவரும் இருக்கிறார்கள். Malcolm X வின் உரையால் மிகவும் உத்வேகம் பெற்ற ஒரு இளம் வெள்ளை இனப் பெண், பேச்சின் முடிவில் Malcolm X ஐ அணுகி ஒரு கேள்வி கேட்கிறார்: Malcolm, இந்தப் போராட்டத்துக்கு நானும் பங்களிக்க விரும்புகிறேன். நான் என்ன செய்ய வேண்டும்? மிகுந்த அலட்சியத்துடன் அப் பெண்ணைத் திரும்பிப் பார்த்த Malcolm X சொன்னது: எங்களுடைய போராட்டத்துக்கு உன்னால் எதுவும் செய்ய முடியாது. சொன்ன கணத்திலேயே Malcolm X திரும்பிப் போய்விட்டார்.

ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களில் நம்முடன் உணர்வுத் தோழமையுடன் செயல்பட முன்வருகிற அனைவரையும் இணைக்க வேண்டும் என்கிற அடிப்படையான அரசியல் அறத்தை Malcolm X பின்னர் உணர்ந்து கொண்டார். எனினும் இன்று வரை உணர்வுத் தோழமையை வலியுறுத்துவது தேசிய இன, பாலினப் போராட்டங்களில் அரிதாகவே நிகழ்கிறது. நமக்காக நாமே பேசவேண்டும், போராட வேண்டும் என்பது எவ்வளவு தூரம் உண்மையோ அதேயளவுக்கு முக்கியமானது மற்றவர்களும் நம்மோடு உணர்வு தோழமையுடன் இணைந்து பேச முடியும் என்பது.

தேவரையாளி இந்துக் கல்லூரியைத் தான் கட்டியெழுப்பிய வரலாற்றைப் பதிவு செய்கிற சூரன் அவர்கள் தன்னுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஏனைய சாதிக்காரர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். தேவரையாளி இந்துவின் கல்வித் தொடர்ச்சியாகவும், மμபு தொடர்ச்சியாகவும் விளங்கி வருகிற தெணியான் உணர்வுத் தோழமையை போற்றுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தெணியானுடைய ‘பொற் சிறையில் வாடும் புனிதர்கள்’ வேறொரு தளத்தில் உணர்வுத் தோழமையைப் பற்றி பேசுகிறது. தெணியானுடைய அரசியல் கட்டுரைகளும், தன் வரலாறும் அவர் பற்றிய ஏனைய ஆவணங்களும் முறையாகத் தொகுக்கப்படுகிற போதுதான் அவருடைய சமூக வலுவும், சமூக வரலாற்று ஆசிரியனாக அவர் இயங்கிய முறைமையும் உணர்வுத் தோழமையை அவர் போற்றிய முறையும் நமக்கு உரிய முறையில் தெரிய வரும்.

Tags: , , , , , , ,

Comments are closed.