உளவியல் நோக்கில் தெணியானின் காத்திருப்பு

Nov 7th, 2010 | எழுத்தாளர்: | பகுப்பு: இதழ் 33, கட்டுரைகள்

இலங்கையின் முற்போக்கு இலக்கியப்பாரம்பரியத்தின் மூன்றாவது தலைமுறையினருள் முக்கியமான ஒருவராகச் சுட்டப்பெறுபவர் தெணியான். ஆசிரியத்துவத்தைத் தனது தொழில்வாழ்க்கை யாக கொண்டுவிளங்கிய அவர் அக்காலத்தே தான் பெற்ற அநுபவங்களை இலக்கியக் கருப்பொருளாக்கி, சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் தந்துள்ளார்.

இன்றும் தொடர்ந்து எழுதி வரும் தெணியான், இதுவரை நூற்றுமுப்பது சிறுகதைகளையும் ஒன்பது நாவல்களையும் எழுதியுள்ளார். அவர் எழுதிய சிறுகதைகளுள் தேர்ந்தெடுக்கப்பட்டவை “சொத்து’, “மாத்துவேட்டி’, “இன்னொரு புதிய கோணம்’ ஆகிய மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தமிழகத்தில் “தலித்தியக் கதைகள்’ என்ற மகுடத்துடன் தொகுப்புகள் வெளி வந்துகொண்டிருக்கும் இன்றைய பின்னணியில் இலங்கை நிலைமையை ஒப்பு நோக்கின் இங்கு வெளிவந்த சாதியச் சிறுகதைகளில் அதிக எண்ணிக்கை யானவற்றை எழுதியவர் என்ற வகையிலும் தெணியான் கவனிப்புக்கு உரியவராகின்றார்.

“முற்போக்கு எழுத்தாளர்கள் கலைத்துவத்தில் அதிக அக்கறை கொள்வதில்லை’ என்ற குற்றச்சாட்டு, முன்னர் முற்போக்கு இலக்கிய எதிர்ப்பாளர்களாலும் அண்மைக்காலங்களில், முற்போக்கு இலக்கிய அனுசரணையாளர்கள் என்று கருதப்பட்ட திறனாய்வாளர்கள் சிலராலுங்கூட முன்வைக்க ப்பட்டுள்ளது. இதனை மறுதலித்து, கலைத்துவ நேர்த்தியில் கவனஞ்செலுத்தி, அக்கலைத்துவ நேர்த்திக்காகக் கணிப்புப் பெறும் சிறுகதை ஆசிரியராகவும் நாவலாசிரியராகவும் முகிழ்த்து வருபவர் தெணியான். இவரின் நாவல்களான விடிவைநோக்கி, கழுகுகள், பொற்சிறையில் வாடும் புனிதர்கள், மரக்கொக்கு, காத்திருப்பு, கானலில் மான், பனையின் நிழல், பரம்பரை அகதிகள், சிதைவுகள், ஆகியவை வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு கதைக்கருக்களுடன் படைக்கப்பட்டவை. ஆயினும், இந்நாவல்கள் யாவற்றினதும் தொனிப் பொருள் ஒன்றே. எமது பாரம்பாரிய வாழ்க்கை முறைகளுட் சிறைப்பட்டுக் கிடக்கும் மனிதாபிமானமற்ற ஒடுக்குமுறைகளைத் தோலுரித்துக் காட்டி சமூகயதார்த்தத்தை வெளிக்கொணர்தலே தெணியானின் நாவல்களின் அடிச்சரடாக விளங்குகின்றது.

தெணியானின் முதலாவது நாவலான “விடிவை நோக்கி’ தாழ்த்தப்பட்ட சமூகத்து ஆசிரியன் ஒருவன் யாழ்ப்பாணத்துச் சாதிக்கட்டமைப்புச் சூழலில் பெறும் அநுபவங்களைச் சித்திரித்தது. “கழுகுகள்’ நாவலில், சொத்துரிமை காரணமாக ஏற்படும் துன்பங்களையும் துயரங்களையும் தெணியான் ஆக்ரோஷமாக எடுத்துரைத்தார். “பொற்சிறையில் வாழும் புனிதர்கள்’ அதன் பெயரிலேயே கதைக்கருப்பொருளைத் தாங்கி, யாழ்ப்பாணத்து நிலமானிய சமூக அமைப்பில் வேளாள சமூகத்தின் அடக்குமுறைக்குள் பிராமண சமூக வாழ்க்கை ஒடுங்கி, அடங்கி நிற்கும் அவல நிலையை வெளிக்கொணர்ந்தது. இம்மூன்று நாவல்களும் சித்திரிப்பு முறையை விட மனித இன்னல்களை வெளிக்கொணர்ந்த வகையிலேயே சிறப்புடையன எனப் பொருள்படும் வகையில் அவற்றின் “கலைத்துவம்’ குறித்த விமரிசனம் திறனாய்வாளர்களால் பூடகமாக வேனும் முன்வைக்கப்பட்டது. ஆனால் ஆரம்பகாலங்களில், முற்போக்கு இலக்கியத்தின் செல்நெறியில், முற்போக்கு எழுத்தாளர்கள் உருவத்தை விட உள்ளடக்கத்தையே முதன்மைப்படுத்தினர். சமூக ஒடுக்கு முறைச் சோகத்தையும் சமூகயதார்த்தத்தையும் தமது படைப்புகளினூடாக வெளிக்கொணர்ந்து சமூக மாற்றத்திற்கான கருவியாக இலக்கியத்தைப் பயன்படுத்தலை முற்போக்கு எழுத்தாளர்கள் தமது இலட்சியமாக வாரித்துக் கொண்டமையே இதற்குக் காரணமாகும். ஆனாலும், காலப்போக்கில், “கலையாக்கம் என்பது சித்திரிப்பு முறை மீதான கவனக் குவிப்பை உள்ளடக்கியது’ என்ற உணர்த்துதலின் வழியே முற்போக்கு எழுத்தாளர்களும் தமது படைப்புகளை “கலையாக்கங்களாக’ வெளிக்கொணர முனைந்து வெற்றியும் கண்டார்கள். இதற்கான சிறந்த ஓர் உதாரணம் டானியலின் “கானல்’ நாவல் ஆகும். “கானல்’ வெளிவந்த அதே கால கட்டத்தில் தெணியானிடத்தும் கலையாக்கம் மீதான “கவனக்குவிப்பு’ செறிவு பெறுவதை அவரது எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.

‘சமூக மெய்ம்மையை அதன் இரத்தமும் சதையும் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்துவது’ என்ற முதலாம் கட்ட இலட்சிய நிலையைக் கடந்து, படிமவார்ப்பினூடு சமூக மெய்மையின் விவரணத்தைச் சித்திரிப்பாக மாற்றும் இரசவாதத்தின்மீது அக்கறைகொண்டு தெணியானின் எழுத்து தடம்பதிக்கத் தொடங்குகின்றது என்பதற்கான ஆதாரங்களை பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். அவர் குறிப்பிடுவது போன்று, “நான் ஆளப்பட வேண்டும்’ என்ற சிறுகதையும் “மரக்கொக்கு’ நாவலும் தெணியானின் எழுத்துத் தடத்தில் முக்கிய திருப்பு முனைகளாகவே அமைகின்றன. சமூக மாற்றத்தைச் சுட்டிய வகையிலே தெணியானின் படைப்புகளுள் “மரக் கொக்கு’ காத்திரமான நாவலாகக் கொள்ளப்படுகின்றது. ஆயினும், 1999 இல் வெளிவந்த “காத்திருப்பு’ நாவலே நுணுகச் செப்பனிடப்பட்ட கலைபடைப்பாகக் குறிப்பிடப்படுகின்றது. தெணியானின் படைப்புகளை உளவியல் அணுகுமுறையில் நோக்குவதற்கான உந்து தலையும் “காத்திருப்பு’ நாவலே ஏற்படுத்துகின்றது. பாலியல் நாவல் ஒன்றை பாலியற் கிளர்ச்சி களைத் தோற்றுவிக்காமல் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் எழுத முடியும் என்பதற்கு இந்நாவல் சாட்சியமாகவுள்ளது. பாலியல் என்பது இன்னும் நமது சமுதாயத்தில் வெளியே பேசக் கூச்சப்படும் ஒரு விடயமாகவே உள்ளது. அவ்வாறு வெளிப்படையாகப் பேசக் கூச்சப்படும் ஒரு விடயத்தையும் கவனமான மொழிக் கையாட்சி மூலம் அழகு நயத்துடன் சித்திரிக்க முடியும் என்பது இந்நாவலின் மூலம் புலனாகின்றது. பாலியல் விவகாரம் சம்பந்தமான உணர்வுச் சுளிப்புகளைக் “கத்தி விளிம்பில் நின்று’ தெணியான் வெளிப்படுத்தி இருக்கிறார்.

“காத்திருப்பு’ நாவலின் கதையம்சம் மூன்று முக்கியமான பாத்திரங்களுக்கிடையே யான ஊடாட்டத்தைச் சித்திரிப்பதாகும். சுப்பிரமணியம் ஈசுவரி நந்தகோபாலன் ஆகிய மூன்று பாத்திரங்கள், அவை வார்ப்புச் செய்யப்பட்ட முறையில் முக்கிய பாத்திரங்களாகின்றன. பாலுணர்வு வழி உந்தல்களாலான இவர்களின் நடத்தைகளை மிகவும் நாசூக்காக, “சொல்லாடல் சித்துகள்’ எதுவுமின்றிச் சராசாரி வாசகனுக்கும் விளங்குமாற்போல் சித்திரிப்புச் செய்கின்ற முறைமை, தெணியானின் எழுத்தநுபவத்திற்குக் கிடைத்த வெற்றி யாகும். வாசகனுக்கு எந்த ஊறும் ளைவிக்காமல் அவனின் வாசிப்பு மட்டத்திற்கும் அநுபவத்திற்கும் ஏற்ப விஸ்தாரஞ் செய்யப்படக் கூடிய செய்திகளையும் நிகழ்வுகளையும் உணர்வுகளையும் கதையோட்டத்தில் தெணியான் விதைத்துச் செல்கின்றார். இவை படிமங்களாக மெல்ல மெல்ல வாசகனிடத்து உணர்வுகளைத் தொற்றவைத்து, புது அநுபவங்களைத் தோற்று விக்கின்றன.

இந்நாவலின் கதை சாதாரணர்களின் வாழ்வியலில் பாலியலினதும் வறுமைனதும் செல்வாக்கை ஒரு குறுக்கு வெட்டாகப் பார்க்க வைக்கின்றது. இந்நாவலின் “தலைச்சன்’ பாத்திரமான சுப்பிரமணியம், தாயை தகப்பனைச் சிறுவயதிலேயே இழந்து “பெரியம்மா வின்’ அரவணைப்பில் வளர்ந்து வருபவன். பாடசாலையில் நல்ல பிள்ளைக்கு உதாரணமாக விளங்கிய இவன், யார் என்ன துன்பம் செய்தாலும் அவற்றைச் சகித்துக் கொண்டிருப்பான். இதனாலேயே “பேய்ச்சுப்பு’ என்று சகமாணவர்களால் அழைக்கப்படுகின்றான்.

சின்னப்பிள்ளைகளின் சீண்டலும் படிப்பில் கெட்டித்தனமின்மையும் பள்ளிக்கூடத்தை
அவன் வெறுக்கக் காμணங்களாகின்றன. பாடசாலை அவனுக்குக் கசப்பதை உணர்ந்த பொரியம்மா எட்டாம் வகுப்புடன் அவனைப் பாடசாலையில் இருந்து நிறுத்திவிட்டுப் பின்னர் தனது முயற்சியால் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக்கடை யொன்றில் விற்பனையாளனாகவும் சேர்த்து விடுகின்றாள். காலகதியில், ஈசுவரி என்பவளைப் “பெண்பார்த்து’ அவனுக்கு மணம்முடித்தும் வைக்கின்றாள்.

சுப்பிரமணியத்துக்கு, சங்கக்கடை வேலை மூலமான ஊதியம் வாழ்க்கையைக் கொண்டு செல்லப் போதுமானதாக இருக்க வில்லை. “அப்பிராணி’யான அவனுக்கு சங்கக் கடையில் “சம்பாத்தியம் செய்யவும்’ தெரியவில்லை. ஆனாலும், அவன் மனைவி ஈசுவரி அவன் மீது உயிரை வைத்திருந்தாள். “அவன் எப்பொழுதும் அழகாக உடுத்துக் கண்களுக்கு நேர்த்தியாகத் தோன்ற வேண்டும்; வாய்திறந்து மற்றவர்களைப் போல பேச வேண்டும்’ என்றெல்லாம் அவள் விரும்பினாள். அவளின் முயற்சியினால் சுப்பிரமணியத்தில் மாற்றங்கள் தெரிந்தன. கௌரவமான ஒரு மனிதனாக அவன் மாறிப் போகிறான். ஆனால், இராஜபோக வாழ்வு என்று இல்லாவிடினும் சுமையில்லாத ஒரு வாழ்வை வாழக்கூட ஈசுவரியும் சுப்பிரமணியமும் சங்கடப் படுகின்றார்கள். ‘விற்பனையாளன் உத்தியோகம்’, அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்குப் பால்மாவு வாங்கக் கூட “வக்கில்லாத’ அவல வாழ் வைத்தான் அவர்களுக்குத் தந்தது. சுப்பிரமணியம் “மாலை வீடு திரும்பும் போது அரிசியோ, மாவோ கையோடு கொண்டு வருவான்’ என்ற ஈசுவரியின் எதிர்பார்ப்பு என்றும் நிராசையாகவே கழிந்தது.

இந்த வாழ்வியல் ஓட்டத்தில் தான் சுப்பிரமணியத்துக்கும் ஈசுவரிக்கும் இடையே நந்தகோபாலன் வந்தான். நந்தகோபாலன், விடலைப்பருவத்தில், அப்பருவத்திற்குரிய “சேட்டைகள்’ எல்லாம் செய்து வளர்ந்தவன். அப்பருவத்தில் தான் விரும்பிய பெண் தன்னைப் புறக்கணித்ததனாலும் அவனின் தம்பியையே காதலித்து அவள் மணந்து கொண்டதனாலும் “இனிக் கல்யாணம் செய்வதில்லை’ என்றும் அவன் சபதம் எடுத்தவன். சுப்பிரமணியம் விற்பனையாளனாகக் கடமையாற்றும் சங்கக் கிளைமுகாமையாளμõக வரும் நந்தகோபாலன் சுப்பிரமணியத்தின் பலயீனத்தையும் அவனின் வறுமையையும் தனக்குச் சாதகமாக்கித் திட்டமிட்டு, படிப்படியாக ஈசுவரியைத் தன் வசப்படுத்திக் கொள்கிறான். நாளடைவில், சுப்பிரமணியத்தின் கண்ணெதிரிலேயே ஈசுவரி நந்தகோபாலனிடம் சோரம் போகிறாள். நந்தகோபாலனுடனான உடற் சுகத்தில் ஈசுவரி தன்னிலை மறக்கிறாள். ஆனால், சுப்பிரமணியத்துக்குத் திடீரெμன ஏற்பட்ட நோயும் சுய உணர்வற்ற நிலையும் ஈசுவரி மீதான அன்பை வெளிப்படுத்தும் அவன் பிதற்றலும் ஈசுவரிக்கு இல்லற வாழ்வின் அர்த்தத்தையும் உண்மையான அன்பின் ஆழத்தையும் உணர்த்துகின்றன. இந்த உணர்த்துதலின் வழியே அவனுக்கு அவள் சகல பணிவிடைகளையும் செய்கிறாள். ஆனாலும் சுப்பிரமணியத்தின் உயிர் திடீரெனப் பிரிந்து விடுகின்றது. சுப்பிரமணியத்தின் மறைவின் பின், “உனக்கொரு குறையில்லாமல் உன்னை நான் வச்சிருப்பன்’ என்று வந்த நந்தகோபாலனை உதாசீனம் செய்துவிட்டு, “நான் இனித்தான் அவரோடு (சுப்பிரமணியத்தோடு) உண்மையாக வாழப்போகிறேன்’, என்று ஈசுவரி முடிவெடுப்பதாகக் கதை முடிவடைகிறது.

வழமையான முக்கோணக் காதற் கதை போல அமைந்திருப்பதாக மேலோட்டமாகத் தெரியினும், இம்மூன்று பாத்திரங்களினதும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இன்றித் தெணியான் சொல்லியிருக்கும் பாணியே இந்நாவலின் கலைப்பெறுமானம் குறித்த அவதானிப்புக்கு அடிகோலுகின்றது. இந்நாவலில் பல இடங்களில் கதை சொல்லியின் தலையீட்டைத் தெணியான் தவிர்த்திருக்கிறார். கதையின் தொடர்ச்சியைப் பேணும் வகையில் கதைசொல்லியின் அவசியம் தேவைப்படுகின்ற சந்தர்ப்பங்களில் தெணியான் உருவகங்களைப் பயன்படுத்துவது நாவலுக்குக் கலையழகைத் தருகின்றது. சீவிச்சிங்காரித்துக் கொண்டிருக்கும் ஈசுவரி, எங்கோ புறப்பட்டுப் போவதற்குத் தயாராக நிற்கின்றாள். “தேத்தண்ணி தாறதே’ என்ற ஈசுவரியின் போலியான உபசரணையைச் சட்டை செய்யாமல் சுப்பிரமணியம் பாயொன்றினை விரித்துப் படுத்துக் கொள்கின்றான். அதன் பின்பான நிகழ்வின் விவரணத்தை உருவக வெளிப்பாடாகக் கதாசிரியர் சித்திரிக்கிறார்.

‘நேரம் இளமாலைப் பொழுது மயங்கும் வேளை. பகலவன் பதுங்கிப் பதுங்கிச் சென்று பட்டென்று பனைவடலிக் கூடலுக்குள் புகுந்து கொண்டான். எவளோ ஒருத்தி மிகுந்த தாபத்துடன் அவன் வருகையை ஏக்கத்துடன் எதிர்பார்த்து அங்கு காத்திருக்க வேண்டும். இல்லையேல் அவனுக்கு ஏனிந்த அவசரம்! ஓடி மறையும் மோகவெறி! இந்த மண்ணின் கிராமியக் காதல் நெஞ்சங்கள் அந்தரமாகக் கூடிக்குலவும் மனோ ரம்மியமான பூங்காக்கள் இந்தப் பனைவடலிக் கூடல்கள். ஒன்றுபட்ட நெஞ்சங்கள் அந்தரமாக வந்து கூடு வதனால், இவைகள் கூடல்களெனப்பெயர் பெற்றிருக்க வேண்டும். இணை விழைச்சு நாடிக் கூடலுக்குள் நுழைந் திருக்கும் பகலவன் அவளையும் தன்னையும் மறைத்துக் கொள்ள விரும்பியிருப்பான். அதனால் இள நீல வண்ணக் காகிதம் போல இருக்கும் வானத்தில் கடும் சிவப்பு வண்ணச் சாந்தை முதலில் தடவி, பின்னர் அடர்த்தியான கருமையை அள்ளிப் பூச ஆரம்பித்து விட்டான்.’

இந்த விபரிப்பில் எந்த விரசமும் இல்லை. முழுக்க முழுக்கப் பாலியல் விவகாரம் சார்ந்த ஒரு நிகழ்வு இயற்கைத் தோற்றப்பாட்டின் சித்திரிப்பாக மாற்றப்பட்டுள்ளது. இச்சித்திரிப்பினூடு கதையின் இறுக்கத்தைக் குலையவிடாது, இதன் முத்தாய்ப்பாக,

‘சுப்பிரமணியத்துக்குப் பகலவன் பனை வடலிக் கூடலுக்குள் புகுந்துவிட்டான் என்பது தொரியவராது. அவன் ஒன்றும் அறியாதவனாக அசந்து தூங்கிக் கொண்டு
கிடக்கிறான்.’

என எழுதிச் செல்வதன் மூலம் ஈசுவரி நந்தகோபால் சுப்பிரமணியம் ஆகியோரின் நிலைகள் கலைநயத்தோடு சொல்லப்படுகின்றன. இவ்வாறாகச் சொல்லவந்த விடயத்தைப் பட்டவர்த்தனமாகச் சொல்வதை விடுத்துக் கதாசிரியர் நாசூக்காகப் பல இடங்களில் சொல்லிச் செல்கிறார். ஈசுவரிக்கும் நந்தகோபலுக்கும் இடையே ஏற்படும் நெருக்கத்தை அது பாலியல் ஈர்ப்பின் அடிப்படையிலானது என்பதை பாலியல் கிளர்ச்சியைத் தூண்டாமல் தெணியானால் அழகாக எழுத முடிகின்றது. இவ்வகையில், “அவள் நந்தகோபாலன் மேசைமீது இμண்டு கைகளையும் வைத்து முன்னோக்கிச் சற்றுச் சரிந்து முழங்கைகளால் அழுந்தித் தாங்கிய வண்ணம் அவனோடு நெருக்கமாக எதையோ பேசிக்கொண்டு நிற்கின்றாள். அவன் சொல்வது கேட்டு அடிக்கடி சிரிப்பதும், அவன் முகம் பார்த்து நாணிக் குழைவதுமாக அழகு காட்டுகின்றாள்.’

எனவும், சுப்பிரமணியத்தின் குடும்ப வாழ்க்கைக்குள் நந்தகோபாலன் புகுந்து விட்டான் என்பதை சங்கக் கடைக்கு வரும் பெண்கள் பேசும் கேலிப் பேச்சின்
ஊடாக,

“சுப்பிரமணியம் வாய்திறந்து பேசாது’

“நந்தகோபாலன் சுப்பிரமணியம் பேச வேண்டியதையும் சேர்த்துப் பேசும்’

“இரண்டு பேரும் சேர்ந்தாத்தான் கூப்பன் கடையை ஒண்டாக நடத்தலாம்.’

எனவும் எழுதிச் செல்லும் இடங்கள் இந்நாவலில் ஆசிரியர் எடுத்துக் கொண்ட
கூடிய கவனத்துக்கான சில சான்றாதாரங்கள்

எனலாம். இன்று பாலியல் விவகாரங்களைச் சித்திரிக்கும் இலக்கியப் படைப்புகளை உளவியற் கண்ணோட்டத்தில் விமர்சனம் செய்யும் முனைப்பு திறனாய்வாளர்களிடத்தே காணப்படுகின்றது. இதற்குக் காலாய் அமைந்தவர்களில் முக்கிய மானவர்கள் ஃபிராய்ட் (Freud), யுங் ((Jung) ஆகிய உளப்பகுப்பாய்வாளர்கள் ஆவர். இவர்களின் உளப்பகுப்பாய்வுக் கோட்பாடுகளின் தாக்கம் இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களின் கணிசமான ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது என்பர். இதன் பேறாக உளவியல் திறனாய்வு, தொன்மத்திறனாய்வு ஆகிய அணுகு முறைகள் உருவாகின. இலக்கியத்தில் உளவியல் கோட்பாடுகளின் செல்வாக்கை விளங்கிக்கொள்வதற்கு ஃபிராய்ட்டின் உளப்பகுப்பாய்வுக் கோட்பாடுகளை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஃபிராய்டின் உளப்பகுப்பாய்வுக் கோட்பாடுகளை பின்வருமாறு சுருக்கமாகப்
பட்டியலிடலாம்.

1. மனித உளச் செயற்பாடுகளுள் அநேகமானவை நனவிலி மனம் (Un concious mind) என அழைக்கப்படும் அடிமனத்தவை.

2. மனித நடத்தைகளானவை பாலுணர்வு (Sexuality), பாலியற்சக்தி (Sexual Energy) என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு உந்தப் பெறுபவை.

3. குறிப்பிட்ட சில பாலுணர்வு நாட்டங்களுக்கு எதிரான சமுதாயத் தடைகள்,
கட்டுப்பாடுகள் (taboos) காμணமாக, மனித ஆசைகளும் நினைவுகளும் ஒடுக்கப்படுகின்றன.

இக்கோட்பாடுகளின் அடிப்படையில் மனித ஆளுமையும் நடத்தைகளும் உருவாகக் காரணமான முரணான உளவியல் விசைகள் நனவுநிலை, நனவடிநிலை, நனவிலிநிலை ஆகிய விழிப்புணர்வின் மூன்று நிலைகளில் தொழிற்படுவன என்றும் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்ற உளவியல் சக்தியானது ஆளுமையின் மூன்று அடிப்படைக் கட்டமைப்புக் கூறுகளான இட் (Id), ஈகோ (Ego), சுப்பர் ஈகோ (Super Ego) ஆகியவற்றை உருவாக்குகின்றது என்றும் ஃபிμõய்ட் குறிப்பிடுகின்றார்.

“இட்’ என்பது நனவிலி அழுத்தங்கள், மனித செயற்பாடுகளுக்கு விசையூட்டுகின்ற வலு என அனைத்தையும் உள்ளடக்கிய பரிமாணமாக அமைவது. அதாவது பிரக்ஞை அல்லது உணர்வு பூர்வமான மனநிலைக்குக் கீழிருந்து தொழிற்பட்டுக் கொண்டிருக்கின்ற சிந்தனைகள், உணர்வுகள், விருப்பங்கள், உந்தல்கள் என அனைத்தையும் குறிப்பதான நனவிலி நிலையில் இருந்து எழும் ஊக்கல்தான் வலிமையுடையதாக விளங்கி ஒருவனை வழிநடத்துவதாகவும் ஒருவனது நடத்தைகளை அல்லது தொழிற்பாடுகளை விசை கொள்ளச் செய்வதாகவும் அமையும். குழந்தை நிலையில் இருந்து நிறைவேறாத பாலியல் உணர்வுகள், விருப்பங்கள், வேட்கைகள் நனவிலி நிலையில் தேக்கி வைக்கப்பட்டு அடங்கியிருக்கும். அதே வேளை சந்தர்ப்பங் கிடைக்கும் போது வெளிப்படும். அத்தோடு இந்த “இட்’ ஆனது, தர்க்கம், விழுமியங்கள், ஒழுக்கப்பண்பு, அபாயம் என்பவற்றாலோ புற உலகின் தேவைகளாலோ சற்றும் பாதிப்புறாததும் ஆகும். இதுவே பின்பு ஈகோ, சுப்பர் ஈகோ என வெளிப்படுகின்ற பகுதிகளுக்கான உளவியற் சக்தி ஆரம்ப மூலமும் ஆகும். இயல்பூக்கத் தூண்டல்களினால், குறிப்பாக பாலியற் தூண்டல்களினால், உடனடித் திருப்தியைப் பெறுவதற்கான வன்மையான உந்தலைக் குறிப்பதான மகிழ்ச்சிக் கோட்பாட்டினால் ((pleasure principle) “இட்’ ஆளப்படுவதனால், நனவிலி நிலையில் உணர்வின்றி, காரணகாரிய ஒழுங்கின்றி, அது மூர்க்கத்தனமாய்த் தொழிற்படுகின்றது.

மூர்க்கத்தனமான “இட்’டின் தொழிற்பாட்டிலிருந்து மனிதனைக் காக்கும் வகையில் தொழிற்படுவதோடு நனவு நிலையில் வெளியுலகோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும் பரிமாணமே; ஈகோ’ ஆகும். “இட்’டினது இயல்பூக்கத் தேவைகளுக்கும் புற உலகின் கட்டுப்பாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் வகிக்கும் வகையில் யதார்த்தக்கோட்பாட்டின் (reality principle) ஆளுகைக்குட்பட்டுத் தொழிற்படுகின்ற ஈகோ, நனவுநிலையில் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்டதும் பகுத்தறிவுப் பூர்வமானதும் திட்டமிடப்படுவது மான ஆளுமையின் பரிமாணங்களைக் குறித்து நிற்கிறது. “இட்’டினது இயல்பூக்கம் காμணமான தூண்டல்களின் இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக, பல்வேறு சமரச உடன் படிக்கைகளைக் கற்றுக் கொள்கின்ற பயன்கொள் ஆளுமைக் கூறாகவும் ஈகோ விளங்குகிறது. பாலியற் தூண்டல் போன்ற இயல்ப்பூக்கம் காரணமான தூண்டலைத் திருப்தி செய்து கொள்வதற்கான ஏற்றுக் கொள்ளப்பட்டக்கூடிய சமரச உடன் பாட்டை ‘ஈகோ’ இனங்காண முடியாவிடின் அக்கணத்தாக்கை அது கடக்க முயலும் அல்லது பிரக்ஞை நிலையிலிருந்து அதனை அகற்றிவிடும்.

இதேவேளை, ஈகோவிலிருந்து கிளைத் தெழுந்த மற்றொரு பரிமாணமே “சூப்பர்
ஈகோ’ ஆகும். இது, மனச்சாட்சி, அறம், தர்மம், பாவபுண்ணியம், விதி என எல்லாவற்றினதும் அழுத்தத்தின் வழியே செயற்படுவதற்கான ஏதுவாக அமைந்து, அறநெறிக்கோட்பாட்டினால் ஆளப்படுகின்ற பரிமாணமாகவும் அமைகின்றது.

ஒன்றோடொன்று முரண்பட்ட “இட்’, சூப்பர் ஈகோ’ ஆகிய ஆற்றல்களைச் சமரசம் செய்து மன ஆரோக்கியத்தைப் பேணுவதில் ஈகோ பெரும் பங்காற்ற வேண்டி இருப்பதனால் ஈகோ பல திசைகளிலும் செல்ல வேண்டியுள்ளது. இதன் வழியே ஈகோ எதிர்த்தற் பொறிநுட்பங்களும் உருவாயின. இவ்வாறாக நனவிலி நிலை, நனவு நிலை, நனவடி நிலை என மனத்தின் மூன்று நிலைகளைக் குறிப்பிட்டதற்கும் மேலாக, குழந்தைப் பருவத்திலேயே பாலுணர்வு அனுபவம் தொடங்கி விடுகின்றதெனக் குறிப்பிட்டு, ஐந்து உளப்பாலியற் பருவங்களையும் ஃபிராய்ட் குறிப் பிட்டார். இதனால் ஃபிராடிய உளப் பகுப்பாய்வியல் விமர்சனங்கனையும் எதிர்நோக்கவேண்டியிருந்தது. ஆனாலும் ஃபிராய்டிய சிந்தனைகளின் விடரிவாகவோ அல்லது அதற்கான விளக்கமாகவோதான் நவஃபிராய்டியர்களின் (Neo – Freudians) கருத்துகளும் பின்னை ஃபிராய்டியர்களின் (Post – Feaudians) கருத்துகளும் வளர்ச் பெற்றன. பொதுவாக நவஃபிராய்டியர்கள் மூன்று முதன்மையான அம்சங்களில் இணக்கமற்றிருந்தனர்.

1. நடத்தைக்கான தொடக்க ஊக்கம் பாலியல் உந்தல்களினாலேயே கிடைக்கிறது என்ற ஃபிராய்டின் நம்பிக்கையை விமர்சனத்துக்குரியதாகவும் பிரச்சினைக்குரிய
தாகவும் கொண்டனர்.

2. ஆளுமையானது ஆμம்பப் பிள்ளைப்பருவ அநுபவங்களால் அடிப்படையாகத் தீர்மானிக்கப்படுகின்றது என்ற ஃபிராய்டின் வாதத்துடன் இணக்கமில்லாதிருந்தனர். மாறாக, வாழ்க்கை வட்டம் முழுவதும் கிடைக்கின்ற அனுபவங்களினாலும் ஆளுமை பாதிக்கப்படலாம் என நம்பினர்.

3. மனித இயற்கை பற்றியும் சமுதாயம் பற்றியுமான ஃபிராய்டின் பொதுவான எதிர்மறை நோக்கிலிருந்து (pessimistic view) விலகிக் காணப்பட்டனர்.

நவஃபிராய்டியவாதியான யுங், கூட்டு நனவிலி (collective unconscious), தொல் வகைகள் (archetypes) ஆகிய இரு பண்புகளை முக்கியத்துவப்படுத்தினார். “கூட்டு நன விலி’ என்பது, பரம்பரை அலகுகள் மூலம் கையளிக்கப்பட்டு வருவதும், மூதாதையரின் அனுபவங்களிலிருந்தும் கருத்துகளிலிருந்தும் தொகுக்கப்பட்டது மாகும். “தொல்வகைகள்’ என்பது இயல்பூக்கம் சார்ந்தவையாகவோ அல்லது கருத்துகள் சார்ந்தவையாகவோ உள்ள கூட்டு நனவிலியின் உள்ளார்ந்த உறுப்புகளாகும். இத்தொல்வகைகளை அனிமா (Anima), அனிமஸ் (Animus) என அழைத்து இவற்றை முறையே பெண்ணுக்குரிய இயல்பு எனவும் ஆணுக்குரிய இயல்பு எனவும் வகை குறித்தார் ஒவ்வொருவரிடத்தும் இந்த இரண்டு அம்சங்களும் உள்ளன என்றும் உளவியற் சமநிலையை ஏற்படுத்துவதற்கு ஆண்கள் தம்மிடமுள்ள பெண்மைத் தன்மையையும், பெண்கள் தம்மிடமுள்ள ஆண்மைத்தன்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அத்தோடு ஆளுமை வகையை இரண்டாகப் பிரித்து அகமுகிகள் (Introvert), புறமுகிகள் (Extrovert) என வகையீடு செய்தார். தமது கருத்துகளை அல்லது பாலியல் வேட்கைகளை பிறருக்குக் கூறாது அடக்கி வைத்திருப்பவர்களை அக முகிகள் என்றும் தமது விருப்பங்களை, வேட்கைகளை வெளிப்படையாகக் கூறுபவர்களை புறமுகிகள் என்றும் யுங் அழைத்தார்.

“பின்னை ஃபிராய்டிய’ரான எரிக்சன், ஃபிராய்டின் ஐந்து கட்ட உளப்பாலியற் கோட்பாட்டின் எதிரொலியாக, மனித உளவாழ்க்கையை எட்டுப் பருவங்களாகப் பகுத்தார். அவரைப் பொறுத்தவரை, ஐந்தாவது பருவமான, 13 19 வயதுப் பருவத்திலேயே உண்மையான உள வாழ்க்கை தொடங்குகிறது. இந்த விடலைப் பருவத்திலேயே தனியாள் அடையாள உணர்வு மனிதனிடத்தில் தோன்றுகிறது. தனது அடையாளம் என்ன என்பதை முதன்முதலில் அவன் அறிய முற்படுகிறான். உணர்ந்து கொண்ட அடையாளத்திற்கேற்ப எவ்வாறு நடந்து கொள்வது என்ற குழப்பம் ஏற்படாதிருப்பதற்கு அவன் தனது சமூகம் சார்ந்த அடையாளத்தை அறிந்து கொள்ளும்போது, கடமை தவறாத குணம் ஈகோவிற்கு அமைந்து ஈகோ வலுப் பெறுகின்றது. அதேவேளை, அடையாளக் குழப்பம் மேலோங்கி இருந்தால் சமுதாய வாழ்வில் ஈகோ திருப்தியின்மையை உணரும். சமுதாய வாழ்வில் சமூக விதிகளுக்கு இணங்க நடந்துகொள்ள வேண்டியிருப்பதால், அடையாளத் தெளிவைப்பெற்று குழப்பமின்றி ஈகோ இருக்கமுடிகிறது. வாலிபப் பருவத்தில் ஏற்படும் அடையாள உணர்வு வாழ்நாள் முழுவதும் தொடரும் என்றும் அவ்வாறு தொடர்வதற்கு சமூகத்தின்மீது மனிதன் வைத்துள்ள “அடிப்படை நம்பிக்கை’ அவசியம் என்றும் எரிக்சன் குறிப்பிட்டார். இந்த அடையாளக் கோட்பாடு சமூகத் தோடும் நம்பிக்கையோடும் மட்டுமே தொடர்புடையதாக இருக்கும் என்றும் குறிப்பிடும் எரிக்சன் நனவிலிமனக் காரணிகளுக்குத் தனது கோட்பாட்டில் இடமளிக்கவேயில்லை.

இக்கோட்பாடுகளின் அடிப்படையில் நோக்கும் போது, ஃப்ராய்டிய கருத்துப்படி, “காத்திருப்பு’ நாவலின் நந்தகோபாலன், ஈஸ்வரி ஆகிய இருவரும் புற உலகின் கட்டுப்பாடுகளையும் மனச்சாட்சியையும் அற ஒழுக்கப் பண்புகளையும் உதாசீனம் செய்து பாலியற் தூண்டல்களின் வழியே திருப்தியைப் பெற்றுக்கொள்ளும் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர் எனக்கொள்ளவேண்டும். இவ்வகையில் இவர்கள் அறியாமலே இவர்களிடத்துப் புதைந்து கிடந்த “இட்’டினது நனவிலி அழுத்தங்களே இவர்களது பிறழ்வு நடத்தைகளுக்குக் காரணமாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால், நந்தகோபாலன், விடலைப் பருவத்தில் தான் விரும்பிய பெண் தன்னை உதாசீனம் செய்து தனது தம்பியுடனே ஓடிப்போனதைத் தாங்க முடியாதவனாய், “இனிக் கலியாணம் செய்வதில்லை’ என்றும் சபதம் எடுத்திருப்பதாக நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். யுங்கின் கருத்துப்படி, விடலைப் பருவத்தில் புறமுகியாகத் தோற்றமளித்த நந்தகோபாலன், ஏமாற்றத்தின் காரணமாகத் தனது பாலியல் வேட்கைகளை அடக்கி, “இனிக் கலியாணம் செய்வதில்லை’ என்ற தீர்மானத்தினூடாக, ஓர் அகமுகியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். அகமுகி, புறமுகி என்ற யுங்கின் வகைப்பாடு தவறானதென்றும் ஒரு மனிதனிடத்திலேயே அகமுகிப் பண்பும் புறமுகிப் பண்பும் ஒன்றாகக் காணப்படுமென்றும், யுங்கின் கோட்பாட்டுக்கு எதிராக எழுந்த விமர்சனத்தை ஒட்டியதாக, நந்தகோபாலனின் பாத்திரப்படைப்பு அமைந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியமும் பாலியல் வேட்கைகளைத் தன்னுள் புதைத்து வைத்திருந்தான். ஈசுவரியின் மீது அவன் கொண்டிருந்த அதீத அன்பும் பெரியம்மா வின் “வளர்ப்பும்’ நந்தகோபாலனுடனான ஈசுவரியின் உறவைக் கண்டும் காணாமலிருக்கச் செய்து விடுகின்றன. தனக்குப் பிறந்த பிள்ளையோடு நந்தகோபாலனுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் தனது குழந்தைகளாகவே சுப்பிரமணியம் ஏற்றுக் கொள்கிறான். ஈசுவரி சீவிச் சிங்காரித்துக் கொள்வது கூடத் தனக்காக இல்லை என்று தெரிந்தும் அவன் அமைதியாகவே இருக்கிறான். ஆனால் அவன் ஓர் அகமுகியாக, பாலியல் வேட்கைகளைத் தன்னுள் புதைத்துப் பொறுத்திருந்தான் என்பது, அவன் கண்ணெதிரிலேயே ஈசுவரி சோரம் போகின்றபோது கிளர்ந்தெழும் அவனின் ஈகோவின் செய்கையிலிருந்து புலனாகின்றது. ஈசுவரியுடன் நந்தகோபாலன் அடுக்களையினுள் ஒன்றாக இருக்கிறான் என்ற உறுத்தலால் ஏற்பட்ட மனவெழுச்சிசார் கணத்தாக்கை, அங்கு நின்ற நந்தகோபாலனின் சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலுமுள்ள “வால்வ்’ கட்டைகளை கழற்றித் தூரவீசி எறிவதன் மூலம் “இடமாற்றம்’ செய்கின்றான். ஈகோவின் எதிர்த்தற் பொறிநுட்பங்களுள் ஒன்றாக் கொள்ளப்படும் “இடமாற்றம்’ என்பது இக்காட்சிக்கூடாக நுணுக்கமாகச் சித்திரிக்கப்படுகின்றது.

“காத்திருப்பு’ நாவலின் கதாநாயகியான ஈசுவரியின் பாலியற் பிறழ்வு நடத்தைகள் அவள் மீது வாசகனுக்கு எரிச்சலை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இந் நாவலைப் படிப்போர் அவள்மீது வஞ்சினம் கொள்ளாது அவளுக்காக இரங்கும் வகையில் பாத்திரப் படைப்பைச் செய்து, அவள் பக்கத்து நியாயங்களை அவளின் சிந்தனையூடாக வாசகரிடத்துத் தெணியான் தொற்றவைக்கின்றார்.

‘என்ன பேசவேண்டிக் கிடக்கு! அவர் (சுப்பிரமணியம்) என்மீது மாறாத அன்பு வைத்திருந்தார். உயிரையே வைத்திருந்தார் ஆனால் நீ எனக்குத் தேவைப்பட்டாய்.. நீ என்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால், அந்தத் தேவையை நான் உணராமல் இருந்திருக்கக் கூடும். அதை உணர்த்தியவன் நீ. அந்த உணர்த்துதல் மட்டும்தான் உனக்குத் தேவைப்பட்டது. ஆனால், அவருக்கு என்மீது வற்றாத அன்பிருந்தது. அந்த நேசம் ஒன்றையே அவர் இறுதிவரை சுமந்திருந்தார். நான் இதைக்
கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன்.

ஈசுவரியின் இந்த நினைப்பு இந்தக் கதையின் முக்கியத் திருப்புமுனை எனலாம். கணவனை இழந்த ஈசுவரியின் முன்னாலே அவளின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக எழுந்து நிற்கிறது. “பாலியற் திருப்தி’ மனித வாழ்வின் ஓர் அம்சம் மட்டுமே என்ற உறுத்தலும், குடும்ப உறவில் பரஸ்பர நேசமே வாழ்க்கையைக் கொண்டு செலுத்த வல்லது என்ற உண்மையும் அவளின் இந்தச் சிந்தனைக்கூடாக உணர்த்தப்படுகிறது. நந்தகோபாலன் சொன்ன வார்த்தைகளின் உள்ளர்த்தம் அவளுக்கு விளங்கியிருக்கவேண்டும். “ஈசா, உனக்கொரு குறை இல்லாமல் உன்னை நான் வைச்சிருப்பன்.’ என்று மட்டுமே நந்தகோபாலனால் சொல்லமுடியும் என்பது ஈசுவரிக்கு உறைத்திருக்கவேண்டும். “வறுமையின் பிடியில் நான் சூறையாடப் பட்டுவிட்டேனே’ என்ற ஆதங்கமே, பாலியற் சுகத்தையும் விஞ்சி அவளிடத்து நிலைகொள்கின்றது என்பதையே இத்திருப்புமுனை மூலம் கதாசிரியர் உணர்த்த விழைகிறார் என்றே கொள்ள வேண்டும். ஈசுவரி தனது சமூகம் சார்ந்த அடையாளத்தை அறிந்து கொள்ளாமையே அவளிடத்து ஈகோ வலுப் பெறாமைக்குக் காரணமாக அமைந்திருக்க வேண்டும் என்ற உளவியல் விளக்கத்தை இது அளித்து எரிக்சனின் கோட்பாடுகளின் வழியே வாசகரைச் சிந்திக்கவும் வைக்கிறது.

உளவியற் கண்ணோட்டத்தில் கதா மாந்தர்களையும் சம்பவங்களையும் நோக்குவதற்கு “காத்திருப்பு’ நாவல் அதிகம் இடமளிக்கின்ற வகையில், இந்நாவலின் “காத்திரம்’ கனதியானது. இன்றும் வளர்ந்து வருகின்ற துறையான உளவியல், பல புதிய கோட்பாடுகளைப் பிறப்பித்துக் கொண்டே இருக்கின்றது. விரிவஞ்சி, இக்கோட்பாடுகளுள் ஒரு சிலவற்றைப் பொருத்திப் பார்ப்பதாக இக்கட்டுரை அமைந்தது. ஆயினும், இக்கண்ணோட்டத்துக்கும் அப்பால், இந்நாவல் சொல்ல விழைந்த செய்தியே “தூக்கலாக’த் தெரிகின்றது. “வறுமையும் சமூக அமைப்பும் மனித சமுதாயத்தில் பாலியற் சுரண்டலுக்கும் வழி வகுத்திருக்கின்றது’ என்பதையே, சமூக அநீதிக்காகக் குரல் கொடுக்கும் தெணியான் இந்நாவல் மூலம் உணர்ந்த விழைந்தார் என்பதே இக்கட்டுரை முன்வைக்கும் முடிவாகும்

Tags: , , , ,

Comments are closed.