தெணியான் என்ற நாவலாசிரியர்

Oct 23rd, 2010 | எழுத்தாளர்: | பகுப்பு: Lead Articles

தெணியான் என்ற புனைபெயர் தாங்கிய கந்தையா நடேசன் அவர்கள் ஈழத்தின் சமகாலத் தமிழிலக்கிய வரலாற்றிலே  தனிக்கவனத்துக்குரிய இலக்கியவாதிகளுள் ஒருவருமாகத் திகழ்ந்து வருபவர். இலக்கியத்தின் சமுதாயப் பணியை வற்புறுத்தி நிற்கும் முற் போக்குப் பார்வை கொண்ட இலக்கியவாதியான இவர், புனைகதைப் படைப்பாளியாகவும் விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் ஆகியவற்றில் ஈடுபடும் சிந்தனையாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். ஒரு படைப்பாளி என்ற வகையில் இவர் தன்னைச் சூழவுள்ள சமூகத்தின் முரண்பாகள், சிறுமைகள் மற்றும் அறியாமைசார் அவலங்கள் முதலியவற்றைத் தோலுரித்துக்காட்ட முற்பட்டு வருபவர்.  இவ்வகையில், ஒரு நாவலாசியருமாக அவர் புலப்படுத்தி நிற்கும் படைப்பாளுமை தொடர்பான ஒரு மதிப்பீட்டு முயற்சியாக கட்டுரை அமைகிறது.

தெணியானின் நாவலிலக்கிய முயற்சிகள்; அறிமுகம்

தெணியான் அவர்களின் முதல் நாவலான ‘விடிவைநோக்கி’ என்ற ஆக்கம் 1973இல் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த இருபத்தியாறு ஆண்டுக் காலப் பகுதியில் நாவல் மற்றும் குறுநாவல் வகைகளில் ஒன்பது ஆக்கங்கள் அவரால்ல் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் எட்டு ஆக்கங்கள் ‘கழுகுகள்’ (1981), ‘பொற்சி றையில் வாடும் புனிதர்கள்’ (1989), ‘மμக்கொக்கு’ (1994), ‘காத்திருப்பு’ (1999), ‘கானலில் மான்’ (2002), ‘சிதைவுகள் மற்றும் பரம்பரை அகதிகள்’ (குறுநாவல்கள் 2003), ‘பனையின் நிழல்’ (குறுநாவல் 2006) என்பன நூல்வடிவம் பெற்றுள்ளன. (‘சிதைவுகள்’ என்ற தலைப்பிலான தொகுப்பில் ‘பரம்பரை அகதிகள்’ குறு நாவலும் இடம்பெற்றுளது). இவர் எழுதிய ‘தவறிப்போனவன்’ கதை என்ற தலைப்பிலான ஆக்கம் இன்னும் நூலுருப் பெறவில்லை. இந்நிலையில், அவ்வாக்கத்தைத் தவிர்த்து, நூலுருப் பெற்ற ஆக்கங்களை மட்டுமே கவனத்திற் கொண்டு இம்மதிப்பீடு மேற் கொள்ளப்படுகிறது.

தெணியான் அவர்கள் இலக்கியத்தின் சமுதாயப் பணியை முதன்மைப்படுத்திய பார்வை கொண்டவர் என்பதை மேலே நோக்கினோம். இவ்வகையில் அவர் சமுதாயத்தில் நிலவி வரும் மரபுசார் மனப்பாங்குகள் மற்றும் மதிப்பீடுகள் என்பவற்றில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்புடையவர். குறிப்பாக, சமகாலச் சமுதாயத்தில் நிலவும் பல்வேறு வகை ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல் சார்ந்த செயன்முறைகள் மற்றும் பண்பாட்டு நிலைசார் குறைபாடுகள் ஆகியன அழித் தொழிக்கப்பட வேண்டியன என்ற கருத்துடையவர் சுருங்கக் கூறுவதானால் அவர், சமுதாய மாற்றத்தை நாடி நிற்கும் ஒரு படைப்பாளியாவார் இதனை அவருடைய நாவல்கள் உட்பட அனைத்து வகை சார் எழுத்துகளிலும் நாம் கண்டுணரமுடியும்.

இவருடைய நாவல் வகை ஆக்கங்களில் ஒருவகையின குறிப்பாக ஈழத் தமிழர் மத்தியில் நிலவும் சாதியுணர்வு மற்றும் அது தொடர்பான ‘பொருளியல் பண்பாட்டுப் பிரச்சினைகள்’, ஆகியன பற்றிய விமர்சனங்களாக வடிவங்கொண்டவை. விடிவை நோக்கி, பொற்சிறையில் வாடும் புனிதர்கள், மரக்கொக்கு, பரம்பரை அகதிகள் ஆகியன இவ்வகைமைக்குள் அமைவனவாகும். இன்னொருவகை ஆக்கங்கள் பொருளியல் தேவைகள் முதன்மைப்படும் நிலையில் பண்பாட்டு நிலைகளில் நிகழ்ந்துவரும் வீழ்ச்சிகளை விமர்சிக்கும் பாங்கிலான கதையம்சங்கள் கொண்டவையாகும். கழுகுகள், காத்திருப்பு மற்றும் பனையின் நிழல் ஆகியவை பொதுவாக இவ்வகைமைக் குரியனவாகும்.

இவை தவிர, சமகாலப் போர்ச்சூழலின் அவலங்கள் மற்றும் தனிமனித குடும்ப வாழ்வியல்சார் அநுபவங்கள் ஆகியனவும் இவருடைய நாவல்களுக்குப் பொருளாகியுள்ளன. முறையே சிதைவுகள் மற்றும் கானலில் மான் ஆகிய இரண்டையும் இவ் வகைமைகளுக்குரியனவாகச் சுட்டலாம்.

முதல் வகை சார் படைப்புகளுள் முதலாவ தான விடிவை நோக்கி நாவலானது யாழ்ப் பாணப் பிரதேசத்தின் ஒரு கிராமப்புறச் சூழலில் தாழ்த்தப்பட்ட சமூகப் பிள்ளைகளின் கல்வித் தேவையை நிறைவு செய்வ தில் அச்சமூக ஆசிரியரொருவர் எதிர் கொள்ளும் சிக்கல்களை எடுத்துப்பேசும் கதையம்சம் கொண்டது. சொந்த ஊருக்கு இடமாற்றம் பெற்றுவந்த ஒரு ஆசிரியரை மையப்படுத்தி இதன் கதையம்சம் விரி கிறது. அங்கு உயர் சாதிசார் தலைமை யாசிரியர் மற்றும் துணையாசிரியர் முதலியோரோலும் தனது சமூகம் சார்ந்த சிலμõலும் கூட அவ்வாசிரியர் எதிர்க்கப் படுகிறார். இவற்றை எதிர் கொள்வதில் சட்டம் அவருக்குத் துணை நிற்கிறது. எதிர்த்த தலைமையாசிரியர் மன மாற்றமடைகிறார் என்ற சுப முடிவுடன் நாவல் நிறைவடைகிறது

பொற்சிறையில் வாடும் புனிதர்கள் நாவல் உயர் சாதியினருள் ஒரு பிரிவினரான பிராமணர்களின் வாழ்வியலை விமர்சிப்பது. இந்து சமய மரபின்படி, சாதி என்ற படிநிலையில் மிக உயர் நிலையில் வைக்கப்பட்டுள்ள பிராமணர்கள் குறிப்பாகக் கோயிற் பூசாரிகளாக உள்ள பிராமணர்களிற் பெரும்பாலோர் ஈழத்திலே (குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்திலே) சமூக அதிகாரப் படிநிலையில் கோயில் மணியகாரர்களாகிய வேளாளர்களின் அதிகாரத்திற்கு அடங்கி நடக்க வேண்டியவர்களாகவே உள்ளனர். இவ் வாறான அதிகார அடக்கு முறையினின்று விடுதலை பெறத் துடிக்கும் அச்சமூகத்தின் அசைவியக்கம் இந்நாவலில், நமது காட்சிக்கு வருகிறது. ஆலயத்தைச் சார்ந்து வாழும் ஒரு பிராமணப் பூசகர் குடும்பத்தின் அநுபவங்களை மையப்படுத்தி இதன் கதை விரிந்து செல்கிறது. இவ்வாக்கம் போலவே, மேற் சுட்டியவாறான அடக்குமுறைகளினின்று விடுபடத்துடிக்கும் பிராமணர்களின் வாழ்வியலின் அசைவியக்கங்களை எடுத்துப் பேசும் வகையில் ஈழத்துச் சோமு (நா. சோமகாந்தன்) அவர்கள் விடிவெள்ளி பூத்தது (1989) என்ற ஒரு நாவலைச் சமகாலத்தில் சற்றுப் பின்னராக எழுதியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கிய வரலாற்றுத் தகவல் ஆகும்.

மரக்கொக்கு நாவல் உயர்சாதி சமூக மொன்றின் சாதி அகம்பாவ நிலைபற்றிய விமர்சனமாகும். உயர்சாதி என்ற பெருமை, அதிலும் குறித்த ஒரு பகுதி என்ற கர்வம் என்பவற்றுடன் திகழ்ந்த ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியின் வரலாறாக அமைவது இது. கால மாற்றங்களுக்கு ஏற்பச் சிந்தனை மாற்றம் எய்தமுடியாத நிலையில் பழம்பெருமையுணர்வுடன் மட்டும் தேக்கமுற்று நிற்கின்ற ஆசிரியர் கூற்றின்படி, பாரம்பரியப்பெருமை என்னும் வெண் கொற்றக் குடையின் கீழ், சாதி அகங்காரம் என்னும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்ற2 முதிர்கன்னியான ஒரு பெண்ணை மையப் படுத்தியமைந்த இவ் வாக்கம் 1980களின் தொடக்கப் பகுதி யில் எழுதப்பட்டு 1994இல் நூல்வடிவம் பெற்றதாகும்.

பரம்பரை அகதிகள் என்ற ஆக்கமானது சாதித்தாழ்வுநிலை காரணமாக, சொந்த மண்ணிலேயே குடியிருப்பதற்கு நில மற்று அலைந்துழலும் சமூக அவலத்தைக் காட்சிப்படுத்தி நிற்பது. உயர்சாதியினர் நிலவுடைமையாளர்களாகவும் திகழ்வதால் அவர்களின் விருப்பு வெறுப்புகளுக் கேற்பத் தமது இருப்பைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய நிலை யிலுள்ள பரம்பரை அகதிச் சமூகத்தின் வரலாற்றுக் காட்சி இது.

இμண்டாவது வகையான ‘பொருளியல் தேவைகள் முதன்மைப்படும் நிலை’ சார்ந்த ஆக்கங்களுள் கழுகுகள் நாவல் இரு வகையான பண்பாட்டு வீழ்ச்சிகளைப் பேசுவது. ஒன்று, பரம்பரைச் சொத்துடைமை என்ற பொருளியல் அம்சம் சமூகத்தின் குடும்ப உறவுகளின் பாசபந்தங்களைப் பாதித்து நிற்கும் நிலைமை. மற்றது, மனித நேயத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டிய தான மருத்துவப் பணியில் சுரண்டலும் சுய நலமும் கோலோச்சும் கொடுமையாகும். இவ்விரண்டினாலும் சிதைவுற்றுக் கண்ணீர் விடும் மானுடத்தின் அவலமே கழுகுகளின் கதையம்சமாக விரிகின்றது.

நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஆறுமுகத்தார் அங்கு உரிய கவனிப்பற்ற நிலையில் படிப்படியாக மரணத்தை நோக்கிச் செல்கிறார். ஈற்றில் வீட்டுக்குக் கொணர்ந்து சேர்க்கப்பட்ட பின் சில நாட்களில் மரணமெய்துகிறார். அவருடைய சொத்துக்கு அவரின் இளம் மனைவியும் ஏனைய உறவினர்களும் உரிமை கோரும் நிலையில் மரணச்சடங்கானது மனிதாபிமானமற்ற வெற்றுச் சடங்கா சாரமாகி விடுகிறது.

இதுதான் கதை. இக் கதை இரு தளங்களில் நிகழ்கிறது. ஒன்று யாழ்ப்பாணத்தின் பொது மருத்துவமனை, மற்றது, வட மராட்சியின் கிராமப்பகுதி. சமூகத்தில் நிலவும் வறுமையும் அதிக பண மீட்டும் நோக்கில் மேற் கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணங்களும் குடும்ப வாழ்வியலில் ஏற்படுத்திவரும் பாலியல் மற்றும் உளவியல் தாக்கங்களை காத்திருப்பு, பனையின் நிழல் ஆகிய ஆக்கங்கள் நமது கவனத்துக்கு இட்டு வருகின்றன. இரண்டும், குடும்பத் தலைவியர்; இருவரின் பாலியல்சார் உளவியற் சிக்கல்களைப் பேசுவன என்ற வகையிற் பொதுமையுடையன.

காத்திருப்பு நாவல் குடும்பத்தின் அடிப் படையான பொருளியல் தேவைகளுக்காக மற்றொருவனிடம் தன்னை இழந்த ஒரு குடும்பப் பெண் மற்றும் சமூகத்தின் ஏளனத்துக்குள்ளான அவள் கணவன் ஆகியோரின் உளவியல்களை மையப் படுத்தியது. அப்பாவியும் சுயமதிப் பற்றவனுமாகிய கணவன், இயலாமை காரணமாக மனச்சிதைவுற்று உயிர்; விடுகிறான். அதன் பின்னர் அவள் தன் கணவனுக்கு உண்மையானவளாக வாழ முற்படுகிறாள் என்பது இந்நாவலின் கதையம்சம்.

பனையின் நிழல் குறுநாவல், ஆடம்பர நோக்கிலான பொருளாசை காரணமாக கணவன் வெளிநாட்டுப் பயணம் மேற் கொண்ட நிலையில் பாலியல் உணர்வுகளால் மனம் தடுமாறும் ஒரு பெண்ணின் கதையாகும்.

சிதைவுகள் குறுநாவல் சமகால இனப் போராட்டச் சூழல் சார்ந்த வெளிப்பாடாகும். 1991இல் அரச ஆணைப்படி வடமராட்சியினின்று வெளியேறி தென் மராட்சி மற்றும் வலிகாமம் பகுதிகள் நோக்கியும் அயல்நாடுகள் நோக்கியும் புலம்பெயர்ந்தோடிய குடும்பங்களின் சிதைவுகள் பற்றிய சோகச் சித்திரம் இது. இராணுவ நடவடிக்கைகள் ஒருபுறம் உயிர்ச்சத்தை ஏற்படுத்தும், நிலையில் இன்னொருபுறம் குடும்ப உறவுகளின் பாசபந்தங்கள் மற்றும் பொருளியல் பிரச்சினைகள் என்பன நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கிடையில் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள விழையும் சமகால ஈழத்தழிழ்ச் சமூக மாந்தரில் ஒரு சாரார் இதிலே காட்சிப்படுத்தப்படுகின்றனர்.

தனிமனித குடும்ப அநுபவ வெளிப் பாடாக அமைந்துள்ள கானலில் மான் என்ற ஆக்கம் அன்புக்காக ஏங்கும் மனிதம் பற்றியதாகும். நிறைவேறாத காதல், மனைவியாக அமைந்தவளிடம் அன்பு கிட்டாத நிலை என்பவற்றால் பாதிப்புற்ற ஒரு ஆணின் மனவோட்டத்தை மையப் படுத்திய சோகக்கதையாக இது அமைந் துள்ளது.

மேற்குறித்த நாவல்களும் குறுநாவல் களும், பொதுவாக, சமூக பொருளியல் நிலைகளிலும் பண்பாட்டு அம்சங்களிலும் குறைபாடுகளற்ற சமுதாய அமைப்பை இலட்சியமாகக் கொண்டவை என்ற வகையில் சமுதாய மாற்றத்தை அறைகூவி நிற்பன என்பதை உய்த்துணர முடிகிறது. இந்த அம்சமே அவரது இவ்வகை ஆக்கங்களின் பொதுவான தொனிப்பொருள் எனவும் கொள்ளலாம். சில ஆக்கங்களில் இந்த சமுதாயமாற்றத்துக்கான அறைகூவல் அம்சம் வெளிப்படையாக ஒலிக்கிறது. வேறு சிலவற்றில், இது சிந்தனையைத் தூண்டும்வகையிலான மௌனராகமாக மட்டும் அமைந்துவிடுகிறது.

சாதி அம்சத்தை மையப்படுத்திய ஆக்கங்களிலே சமுதாய மாற்றம் தொடர்பான தமது எண்ணப்பாங்கைத் தெணியான் அவர்கள் வெளிப்படையாகவே புலப்படுத்தி விடுகிறார். சமகால சமூகத்தின் புறநிலையான நிகழ்வுகள் மற்றும் நேரடி அநுபவங்கள் என்பவற்றின் பதிவுகளாக இவ்வாக்கங்கள் அமைந்தமையால் சமுதாய மாற்றத்துக்கான உணர்வோட்டத்தை இவற்றில் தெளிவாக இனங்காண முடிகின்றது.

விடிவை நோக்கி நாவலிலே தலைமையாசிரியர் எய்திய மனமாற்றம், பொற்சிறையில் வாடும் புனிதர்கள் நாவலில், பூசகர் குடும்பம் மணியகாரனின் அதிகாரத்துக்குட் பட்ட நிலையிலிருந்து விடுவித்துக் கொண்டு வெளியேறிய நிலை, மரக்கொக்கு நாவலில், பரம்பரைப் பெருமை என்ற சிம்மாசனத்தில் முதிர்கன்னியான விஜயலட்சுமி மட்டும் தனிமைப்பட்டிருக்க அவளுடைய உடன் பிறப்புகள் காலமாற்றத்தோடு தாமும் மாற்றமடைந்து சென்றுவிட்ட காட்சிகள், பரம்பரை அகதிகள் குறுநாவலில், ‘இந்தப் பரம்பரை இனிமேலும் தொடரக் கூடாது’ என்ற உணர்வுடன் அகதிகள் ஆக்குரோசமாக எழுந்த நிலை ஆகியன சமுதாய மாற்றத் தொனிப்பொருளை வெளிப்படையாகவே அழுத்தமாக உணர்த்தி நிற்பன.

கழுகுகள் நாவலிலே யாழ்ப்பாணப் பிரதேசச் சமூக அமைப்பின் கட்டுக்கோப்பு சிதைவுறுவதை அதன் கதையம்சம் தெளிவாகவே உணர்த்திவிடுகிறது. இவள் செல்லம் (ஆறுமுகத்தாரின் மனைவி) பெரிய பாவம் ஐயா! தனி மரமாக நிற்கிறாள். ஆறுமுகத்தாற்றை பெறாமக்களும் நிக்கினம். நீங்கள் ஒருக்காற் சுடலைக்கு வந்து அவளின்ரை அந்தத் தாலிக்கொடியை எடுத்துக் கொண்டுவந்து, அவளின்ர கையிலே குடுத்துவிடுங்கோ…3

இது அவ்வூரின் விதானையார் என்ற கிராமத் தலைமைக்காரரை நோக்கி ஒரு பாத்திரம் கூறுவதாகும். இதன் ஊடாக உறவுகளும் பாசபந்தங்களும் வெறும் சடங்காசாரங்களாகப் பொருளற்றுப் போய்விட்டமையை ஆசிரியர் மௌனமாகவே உணர்த்தி விடுகிறார்.

மேற்குறித்த வகைகள்சார் படைப்புகளின் முக்கிய களமாகத் திகழ்வது இவரின் வாழ்விடச் சூழலான யாழ்ப்பாண மண்ணின் வடமராட்சிப் பிμதேசமாகும். சில ஆக்கங்களின்; கழுகுகள், சிதைவுகள், கானலில் மான், பனையின் நிழல் முதலியவற்றின் கதை நிகழ்வுகளின் சில கூறுகள் மேற்படி பிரதேச எல்லைக்கப்பாலும் விரிகின்றன; எனினும் மையக்களமாக அமைவது மேற்படி பிரதேசச் சூழலேயாகும். அச்சூழலின் கடந்த ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலப் பகுதியின் சமூக இயங்கு நிலைகளிலிருந்தே இவ் வாக்கங்களின் உள்ளடக்க அம்சங்கள் அவரால் தேர்ந்து கொள்ளப்பட்டுள்ளன என்பது தெரிகிறது.

மேற்சுட்டிய நாவல்வகைசார் ஆக்கங்களினூடாகப் புலப்பட்டுநிற்கும் தெணியானுடைய படைப்பாளுமை மற்றும் ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வரலாற்றில் அவருக்குரிய இடம் என்பன தொடர்பான அம்சங்களை விமர்சன நிலையில் தெளிந்து கொள்வதற்கு ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத்தின் வரலாற்றுப் பின் புலத்தை இங்கு தொடர்புபடுத்தி நோக்குவது அவசியமாகிறது.

ஈழத்துத் தமிழ் நாவலிலக்கிய வμலாற்றுப் பின்புலமும் தெணியானும்…

ஈழத்தின் தமிழ்நாவல் வரலாறானது 1885 இல் வெளி வந்ததான சித்தி லெவ்வை மரைக்காயரின் அசன் பேயுடைய கதை என்ற ஆக்கத்துடன் தொடங்குகிறது என்பது மரபாகி விட்டது. எனினும், ஈழத்தின் சமூகப் பிரச்சினைகளை மைய மாகக் கொண்ட தமிழ் நாவலிலக்கிய வரலாறானது 1914 இல் வெளிவந்ததான நொறுங்குண்ட இருதயம் என்ற ஆக்கத்துடனேயே தோற்றங் கொள்கிறது. மங்கள நாயகம் தம்பையா என்பவரால் எழுதப் பட்ட இவ்வாக்கம், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் நடுத்தரவர்க்க குடும்ப உறவுகளில் அக்காலப் பகுதியில் (இன்றும்கூட) நிலவி வரும் அந்தஸ்துணர்வு மற்றும் ஆணாதிக்க மனப்பாங்கு என்பவற்றைப் பிμதிபலிப்பதும் விமர்சிப்பதுமான கதையம்சத்துடன் வெளிப்பட்டதாகும். 4

இதனை அடுத்து, சமூகப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்ட நாவல்கள் பல எழுந்துள்ளனவெனினும் நாவலுக்குரியதான சமூகயதார்த்த வகையிலான படைப்பாக்க முறைமை ஈழத்தில் ஏறத்தாழ 1950கள் வரை உரிய வளர்ச்சியை எய்தவில்லை என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய முக்கி வரலாற்றம்சமாகும். 5

தனிமனித குடும்பம் சமூக உறவு நிலைகள் சார்ந்த பல்வேறு பிரச்சினை களையும் காரண காரிய நிலையில் தொடர்புறுத்தி நோக்கி விமர்சிப்பதான படைப்பாக்க முறைமையே இங்கு சமூக யதார்த்த வகைசார் படைப்புமுறை எனப்படுகிறது. சமூகத்தை இயக்கி நிற்கும் முக்கிய உணர்வுத் தளங்களையும் அவற்றின் வரலாற்றியக்கத்தையும் நுனித்து நோக்குதல் என்ற பார்வை அம்சமும் அவற்றை அநுபவ நிலைப்படுத்திப் பதிவு செய்தல் என்ற படைப்புத் திறனும் இணைந்த செயற்பாங்கு இது. இதுவே நாவல் மற்றும் சிறுகதை ஆகிய புனைகதை வடிவங்களின் உயிர்நிலையாகக் கொள்ளப் படுகிறது. ஈழத்தில் ஐம்பதுகள் வரையான காலகட்டத்தில் நாவல்கள் எழுத முற்பட்டோருட் பலரும் பிரச்சினைகளை மையப்படுத்திச் சீர்திருத்த சிந்தனைகளை முன்வைத்துச் சுவைபடக் கதைகூறுதல் என்ற எழுத்தாக்க முறைமையையே பெரிதும் கைக்கொண்டனர். அதன் பின்னரே இப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்தது.

1940களில் சமூக விஞ்ஞானமாகிய மார்க்சிய தத்துவம் ஈழத்தமிழர் மத்தியில் அறிமுகமான சூழல், அதன் தொடர்ச்சியாக இலக்கியவாதிகள் மத்தியில் உருவான ‘சமூக மாற்றத்தை நாடி நிற்கும் முற்போக்குச் சிந்தனை ’ என்பன மேற்படி மாற்றத்துக்கு வித்திட்டன. இதன்விளைவாக நாவல் என்பது சமூக யதார்த்தப் பண்புகொண்ட ஒரு படைப்பாக்கம் என்ற கருத்துநிலை ஈழத்து இலக்கியவுலகில் உருவாகத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாகவே 50 களிலிருந்து நாவலாக்க முறைமையில் மாற்றங்கள் நிகழத் தொடங்கின.

குறிப்பாக, இளங்கீரனால் (எம்.சுபைர்) எழுதப்பட்டதான தென்றலும் புயலும் (1955), நீதியே நீ கேள்! (1959) ஆகிய நாவல்களில் இந்த மாற்றத்தை எம்மால் இனங்காண முடிகின்றது. ஈழத் தமிழர் மத்தியில் நிலவும் சாதியுணர்வு, பொருளியல் ஏற்றத்தாழ்வு நிலை மற்றும் தமிழர் சிங்களவர் என்ற இனவேறுபாட்டுணர்வு ஆகியன தனிமனித குடும்ப சமூக உறவு நிலைகளில் ஏற்படுத்திவந்துள்ள தாக்கங்களை இந்நாவல்கள் மூலம் எடுத்துப்பேச முற்பட்டுள்ளார் இளங்கீரன் அவர்கள்.

சாதியுணர்வு, இனவுணர்வு என்பவற்றை விட வர்க்க உணர்வு வலுவானது என்ற மார்க்சியச் சார்பான கருத்தோட்டம் இந்நாவல்களில் அடிச்சரடாக இழை யோடுவதை இவற்றின் கதையம்சங்கள் உணர்த்தி நிற்பன.

இவ்விரு ஆக்கங்களும் பொதுநிலையில் சாதாரண காதல் கதைகளாகவே கருதப்படத்தக்கன. ஆயினும் சித்திரிக்கப்பட்டுள்ள முறைமை காரணமாக இக்கதைகள் அக்காலச் சூழலின் சமூக அசைவியக்கத்தையும் சமூக உணர்வுகளில் நிகழ்ந்து வந்த சிந்தனை மாற்றங்களையும் ஓரளவு உணர்த்தி நிற்பன. இவ் வகையிலேயே இவை ஈழத்து நாவல் வரலாற்றில் படைப்பு நெறிக்கான தொடக்க முயற்சிகளாகக் கணிப்பெய்தியுள்ளன.

இவ்வாறு இளங்கீரன் தொடங்கி வைத்த சமூக யதார்த்தப் படைப்பு முறைமையானது செ. கணேசலிங்கன் அவர்களால் இன்னொரு கட்டத்துக்கு வளர்த்தெடுக்கப்பட்டது. இயங்கீரனைப் போலவே மார்க்சியச் சார்பினரான இவரது படைப்புகளான நீண்ட பயணம் (1965), சடங்கு (1966), செவ்வானம் (1967), தரையும் தாரகையும் (1968), போர்க்கோலம் (1969) ஆகியவற்றில் சமகால சமூக பொருளியல் அரசியற் சூழல்களின் இயங்கு நிலைகளே கதையம்சங்களாயின.

சாதி நிலையில் தாழ்த்தப்பட்டோர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் பல நிலைகளில் வெகுசனப் போராட்டங்களை முன்னெடுத்து, குறிப்பிடத்தக்க வெற்றி களை ஈட்டி வந்த காலப்பகுதி அது. அப்பேரெழுச்சியின் இருவேறு கட்டங்களே நீண்ட பயணமாகவும் போர்க் கோலமாகவும் அவரால் இலக்கியப்படுத்தப்பட்டன. அக்காலப் பகுதியில் உயர்சாதியினர் மத்தியில் நில விய உள் முரண்பாடுகள் பற்றிய விமர்சனமாக வெளிப்பட்டதே அவரின் சடங்கு நாவல். 1960-65 காலப் பகுதியில் மார்க்சியவாதிகள் தேசிய முதலாளித்துவத்துடன் கை கோர்க்க முற்பட்ட அரசியற்சூழல் பற்றிய விமர்சனமாக வெளிப்பட்டது, செவ்வானம் நாவல். நடுத்தரவர்க்கத்தினர் தமக்கு மேலேயுள்ள வர்க்கத்தினரின் வசதி வாய்ப்புகளை நோக்கி ஏங்கிக் கொண்டிராமல் தமக்குக் கீழேயுள்ள அடிநிலைமாந்தரின் அவலங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முற்பட வேண்டும் என்ற தொனிப் பொருளை முன்வைத்து எழுதப்பட்ட ஆக்கமான தரையும் தாரகையும் 1956 – 60 காலகட்ட சமூக அμசியற் சூழலைப் பின்புலமாகக் கொண்டதாகும்.

இவ்வாறு கணேசலிங்கனால் மேற் கொள்ளப்பட்ட சமூக யதார்த்தப் படைப்பாக்க முறைமையானது கே. டானியல் அவர்களின் எழுத்துகளில் அநுபவச் செழுமை என்ற இன்னொரு தளத்துக்கு இட்டுச் செல்லப்பட்டது. மேற்சுட்டியவர்களைப் போலவே மார்க்சியச் சார்பினராகிய இவர் சாதிசார் ஒடுக்குமுறையின் கொடுமைகளுக் கெதிராகச் சமூகத் தளத்தில் குரல் கொடுத்து நின்றவர். அத்துன்ப துயரங்களை இலக்கியப்படுத்துவதில் தனி ஈடுபாடு காட்டிய இவர் தமது படைப்புச் செயற்பாட்டில் தத்துவங்களை முன்னிலைப் படுத்தாமல் நாட்டார் வழக்காற்றியல் மரபுசார் கதைகள், செய்திகள் மற்றும் நேரடி அநுபவ அம்சங்கள் என்பவற்றை முன்னிலைப் படுத்தியவராவார். இவரால் எழுதப்பட்டனவாகிய பஞ்சமர்வரிசை நாவல்களான பஞ்சமர் (1972), பஞ்சமர் 12 (1982) கோவிந்தன் (1982), அடிமைகள் (1984), கானல் (1986), தண்ணீர் (1987), பஞ்சகோணங்கள் (1993) ஆகியவை யாழ்ப்பாணச் சமூகச் சூழலின் சாதிசார் ஒடுக்கு முறையின் பல்வேறு முகங்களையும் அவற்றால் அடிநிலை மாந்தர் எய்திய பல நிலைத் துன்ப துயரங்களையும் பேசுவன. இவற்றுட் பலவற்றின் கதையம் சங்கள் நான்கு தலைமுறைகளின் (ஏறத் தாழ நூறாண்டுக்கால) சமூக வரலாற்றியக்கங்களைக் காட்சிப்படுத்துவன. இவ் வாக்கங்களுட் பலவும் யாழ்ப்பாணச் சமூகச் சூழலின் நாட்டார் வழக்காற்றியல் சார் பண்பாட்டு மரபுகளின் பதிவுகளாகவும் கணிக்கப் பெறுவன.

இவ்வாறு இளங்கீரன் முதல் டானியல் வரையான பலரால் மார்க்சியச் சார்புடையதான சமூகயதார்த்தப் பார்வையில் சாதி மற்றும் பொருளியல், அரசியல் அம்சங்கள் நாவல்களாகி வந்த சூழலில் சமாந்தரமாக மேற்படி அம்சங்களையும் குடும்ப சமூக உறவுநிலைகள் சார் பல்வேறு பிரச்சினைகளையும் பொதுவான மனித நேயநோக்கில் சித்திரிக்கும் படைப்பாக்க முறைமைகளும் உருவாகித் தொடர்ந்தன. குடும்ப உறவுகளில் பாலியல் வகிக்கும் முக்கியத்துவம் மற்றும் நடுத்தரவர்க்க வாழ்வியலின் பலநிலைப்பட்ட முரண்பாடுகள், ஏக்கங்கள் முதலியனவும் நாவல்களுக்குப் பொருள்களாயின. எஸ். பொன்னுத்துரை அவர்கள் வாழ்வியலில் பாலியல் உணர்வுகள் வகிக்கும் பாத்திரத்தை மையப்படுத்தி தீ (1961), சடங்கு (1966) ஆகிய நாவல் களை எழுதினார். 1970 களில் சமூக குடும்ப உறவுகள்சார் பல்வேறு பிμச்சினைகளையும் மையப்படுத்திச் செங்கை ஆழியான் (பிரளயம் 1975, இரவின் முடிவு 1976 மற்றும் பல.) முதலிய பலர் நாவல்களைப் படைக்கத் தொடங்கியிருந்தனர்.

இதே காலப்பகுதியில் குறித்த சில பிரதேசங்களின் சமூகச் சூழலை மையப்படுத்தி, அவற்றின் தனிநிலைப் பிரச்சினைகளையும் எடுத்துப்பேசும் முறைமையிலான படைப்பாக்க முறைமையும் உருவாகியது. மலையகத்தை மையப்படுத்தி வெளிவந்த கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை (1964), நந்தியின் மலைக்கொழுந்து (1964) மற்றும் பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன் (1968) முதலியன இவ்வகையில் குறிப்பிடத்தக்கன.

இவ்வாறான படைப்பாக்க முறைமையின் இன்னொருகட்ட வளர்ச்சி எனத்தக்க வகையில் பிரதேச நாவல்கள் மண் வாசனை நாவல்கள் உருவாகத் தொடங்கின. அ. பாலமனோகரன் எழுதிய நிலக்கிளி (1973) நாவல் இப்படைப்பாக்க முறைமைக்குத் தோற்றுவாய் செய்திருந்தது.

தெணியான் அவர்கள் நாவலிலக்கியத் துறையில் கால் பதித்து இயங்கத் தொடங்கிய ஆரம்ப ஆண்டுகள் வரையான காலப்பகுதியின் ஈழத்து நாவலின் வரலாற்றுப் பின்புலநிலை இதுதான். அக்காலப்பகுதியில் நாவல் வெளியீட்டு வாய்ப்பு பற்றிய ஒரு வரலாற்றுக் குறிப்பும் இங்கு அவசியமாகிறது. 1970களில் வீரகேசரி இதழ் நிறுவனம் நாவல் வெளியீட்டில் கால்பதித்து ஈழத்தின் பல்வேறு பிரதேச இலக்கியவாதிகளின் படைப்பார்வத்துக்கும் ஊக்கமளித்து நின்றது. மேற்சுட்டிய நிலக்கிளி என்ற பிரதேச நாவலாக்கம் அந்நிறுவன வெளியீடாக வெளிவந்ததேயாகும். அந் நிறுவனமே தெணியான் அவர்களின் விடிவைநோக்கி நாவலையும் வெளியிட்டு அவருடைய நாவலிலக்கியப் பிரவேசத்துக்கு வழிசமைத்தது.

இவ்வாறு நாவலிலக்கியத் துறையில் அடிபதித்த தெணியான் அவர்கள் இலக்கியத்தின் சமுதாயப்பணியை வற் புறுத்தி நிற்கும் முற்போக்குப் பார்வை கொண்ட இலக்கியவாதி என்ற வகையில் இளங்கீரன், செ. கணேசலிங்கன் மற்றும் கே. டானியல் ஆகியோரின் வழிதொடரும் ஒருவராகவே இலக்கிய அரங்கில் அறிமுகமானவர். அவர்களைப் போலவே மார்க்சிய சிந்தனைகளால் தூண்டப்பெற்று சமூக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு நின்றவர் அவர் என்பதும் இங்கு நம் கவனத்துக்குரியதாகும்.6

இவ்வாறு இவர் மார்க்சியச் சார்பு கொண்டவராகத் திகழ்ந்த போதும் மேற் சுட்டியவர்களுள், முதலிருவரைப் போல கோட்பாட்டு அம்சங்களை மையப்படுத்தும் படைப்பாளியாக இவர் தன்னை இனங்காட்டிக் கொள்ளவில்லை. மாறாக, டானியல் அவர்களைப்போல அநுபவங்களை மையப்படுத்தும் ஓர் படைப்பாளியாகவே நாவலுலகிற்கு அறிமுகமாகிறார் என்பதை அவருடைய முதலாவது நாவலான விடிவை நோக்கி என்ற ஆக்கம் உணர்த்தி நிற்கிறது. டானியல், தெணியான் ஆகிய இருவருக்கும் பொதுவான ஒரு அம்சம், இருவரும் ஒடுக்கப்பட்ட, அடிநிலை மாந்தர் சமூகங்களினூடாக மேற்கிளம்பிய படைப்பாளிகள் என்பதாகும். அதனால் அச்சமூக அவலங்களை நேரடியாக அநுபவநிலையில் பேசுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இயல்கபாகவே அமைந்திருந்தது.

இத்தொடர்பிலே, டானியலுக்கும் இவருக்கு மிடையில் நிலவிய இலக்கிய உறவுநிலை பற்றிய மேலும் ஒரு முக்கிய குறிப்பை இங்கு முன்வைப்பது அவசியமாகிறது. டானியல் அவர்கள் தமக்குப்பின் தமது இலக்கிய வாரிசாகத் தொடரக்கூடியவராகத் தெணியானை இனங்கண்டிருந்தார் என்பதும் அவ்வாறான அவரின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்வதில் மனப்பூர்வமாகவும் நன்றியுணர்வுடனும் தெணியான் ஈடுபாடு காட்டியுள்ளார் என்பதுமே அந்த இலக்கிய உறவுநிலை பற்றிய செய்தியாகும். டானியல் தெணியான் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு, அவருக்கும் காலஞ்சென்ற எழுத்தாளர் நந்தி (செ. சிவஞானசுந்தμம்) அவர்களுக்கும் நிகழ்ந்த உரையாடற் பகுதி யொன்று முக்கிய சான்றாகின்றது.

தெணியானின் எழுத்தின் ஆளுமையை எனக்கு இனங்காட்டி விமர்சித்தவர் டானியல். அவரின் இலக்கியப் படைப்பாக்கல் மேல் வைத்திருந்த தனது நம்பிக்கையை 1985 மழை காலத்தின் போது மிக உருக்கமாக வெளிப்படுத்தினார்..

டானியல், அவர் எழுதிக் கொண்டிருந்த நாவல் பற்றிக் கூறினார்.

என்னால் இனி ஏலாது, டொக்டர் என்றார் ஆனால் ஒரு நிம்மதி, நான் எழுதி முடிக்கேலாத பகுதியை எழுதுவதற்குச் சரியான பொடியன் இருக்கிறான் தெணியான். (தெணியான் அப்போது பையன் அல்ல. வயது 40 சொச்சம். அன்பிலும் நம்பிக்கையிலும் வயதுக் கணிப்பு தடுமாறும் போலும்). இது நந்தியவர்களின் நினைவுப் பதிவு.7 இவ்வாறு டானியல் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையைத் தெணியான் உணர்ந்திருந்தார் என்பது மரக்கொக்கு நாவலில் தெளிவாகப் புலனாகிறது. இந்த நம்பிக்கைக்கான நன்றியுணர்வைப் புலப்படுத்தும் வகையில் தெணியான் அவர்கள் இந்நாவலை டானியல் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். அத் தொடர்பில், மேலும் அவர் விளக்கம் தருமிடத்து,

டானியல் அவர்கள் என்னிடத்தில் எதனை எதிர்பார்த்தாரோ, அதனை இவளுக்கூடாக (மரக்கொக்கு நாவலூடாக) நான் செய்திருக்கின்றேன் என்பது எனது நம்பிக்கை. மேலும் சூழ்நிலைகள் கனிந்துவரும்போது, சமூகநீதியை நிறுவுவதற்கான, டானியலின் இலக்கினை நிச்சயமாகத் தொடருவேன்.8 எனவும் கூறியுள்ளார்

நந்தி அவர்களின் நினைவுகளுடாகப் பதிவாகியுள்ள டானியலின் நம்பிக்கையானது, அவர்தான் மேற்கொண்டதான சாதிப் பொருண்மை சார் சமூகநீதியை நிறுவுவதற்கான படைப்பாக்க முறைமை தொடரப்படுவது பற்றியதாகும். தெணியான் அவர்கள் அப்பொருண்மையைத் தொடர்ந்தவராயினும் அதன் எல்லைக்குள் மட்டும் தன்னை வரையறுத்துக் கொண்டவரென்று என்பதை மேலே முதலில் நாம் நோக்கியுள்ள நாவல் களின் பொருட்பரப்பு உணர்த்தும்.

சாதிப்பொருண்மை சார் படைப்பாக்கங்களிலுங் கூட டானியல் போன்ற முன்னோரின் பார்வையிலிருந்து தெணியான் அவர்கள் ஓரளவு வேறுபட்டுச் சென்றுள்ளார் என்பதும் இங்கு நமது கவனத்துக்குரியதாகும். இது பற்றிய ஒரு குறிப்பை இங்கு சுருக்கமாக முன் வைப்பது அவசியமாகிறது.

சாதிமுறைமை தொடர்பான கணேசலிங்கன் மற்றும் டானியல் ஆகியோர் பார்வைகள் பொதுவாக தாழ்த்தப்பட்ட சமூகங்களின் பிரச்சினைகளையும் அவலங்களையும் மையப்படுத்தியவை. அவற்றுடன் தொடர்புடைய நிலையில் அப்பிரச்சினைகள் மற்றும் அவலங்களுக்குக் காரணமானவர்கள் என்ற வகையிலேயே உயர்சாதிச் சமூகத்தினர் பலரின் வாழ்வியல் இவர்களது படைப்புகளில் விரிவான நிலையில் விமர்சனத்துக்குள்ளாகும். இதுவே பொதுநிலை. (கணேசலிங்கனின் சடங்கு நாவல் இதற்கு விதிவிலக்காகும். உயர் சாதியினர் மத்தியில் நிலவிய உள்முரண்பாடுகள் பற்றிய விமர்சனம் இது.) தெணியானின் மரக்கொக்கு மற்றும் பொற்சிறையில் வாழும் புனிதர்கள் ஆகிய இரு ஆக்கங்களும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் அனுபவங்களைப் பேசுவது என்ற எல்லைக்கப்பால் சென்று உயர் சாதிச் சமூகங்களின் அசைவியக்கம் பற்றிய விமர்சனங்களாகவே உருப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்க வேறுபாட்டம்சமாகும்.

இவ்வேறுபாட்டைப் பேராசிரியர் சிவத்தம்பியவர்கள் நுனித்து நோக்கியுள்ளார். பொற்சிறையில் வாடும் புனிதர்கள் நாவலின் அறிமுகவுரையிலே அவர், மேற்படி வேறுபாட்டுக்கான வரலாற்றுக்காரணி பற்றிச் சிந்தித்து, எடுத்துரைத்துள்ளார். முற்போக்கு இலக்கியத்தின் மூன்றாவது தலைமுறையினர் (தெணியான் முதலியோர்) மனித இன்னல்களைத் தமக்குத் தெரிந்த ஒரு வட்டத்துள் மட்டும் நின்று தேடாமல், முந்திய தலைமுறையினரின் தோளில் ஏறிநின்று, அவர்களின் பார்வைப் பரப்புக்கு அப்பாலும் சென்று தேடமுற்பட்டுள்ளனர் என்பதே பேராசிரியர் தந்துள்ள வரலாற்றுக் கணிப்பின் சாராம்சமாகும்.9

தெணியான் அவர்களின் நாவல்வகை ஆக்கங்கள் பற்றியும் அவர் நாவலிலக்கியத்தில் அடிபதித்த வரலாறுப் பின்புலம், அதில் அவர் இயங்கிய முறைமை என்பன பற்றியுமான முக்கிய குறிப்புகள் இதுவரை முன்வைக்கப்பட்டன. இவற்றை அடுத்து, அவருடைய மேற்படி படைப்புகள் பற்றிய சில மதிப்பீட்டுக் குறிப்புகள் இங்கு முன் வைக்கப்படவுள்ளன.

தெணியானின் நாவல்வகை ஆக்கங்களின் இலக்கியத் தகைமை

தெணியானின் சாதிப்பிரச்சினை தொடர்பான ஆக்கங்களில் மரக்கொக்கு ஒன்றே நாவல் என்ற வகையில் கணிப்புக்குரிய முக்கிய ஆக்கமாகும். விடிவை நோக்கி மற்றும் பொற்சிறையில் வாடும்புனிதர்கள் ஆகிய இரண்டும் நாவல் என்பதற்கான விரிவான அநுபவப் பரப்பைக் கொண்டிருக்க வில்லை என்பதே அவை பற்றி இங்கு வைக்கப்படும் முக்கிய விமர்சனமாகும். இவற்றில் குறித்த முடிவுகளை தீர்வுகளை முன்வைத்துச் சம்பவங்களை அமைத்துக் கதையம்சங்கள் வளர்த்துச் செல்லப்படுகின்றன. இவ்வாறான கதைகூறும் முறைமையால் நாவல் என்பதற்கான விரிநிலை அநுபவத்தை இவற்றால் நல்க முடிய வில்லை என்பதே இவைபற்றிய எனது மனப்பதிவாகும் .

விடிவை நோக்கி என்ற ஆக்கம், சாதிப் பிரச்சினை கொதிநிலையில் இருந்த 1960 – 70கள் காலப்பகுதியில் அப் பிரச்சினையால் பாதிப்புற்றிருந்த சமூகம் சார்ந்த நேரடி அநுபவங்களின் உடனடி இலக்கியப் பதிவு என்றவகையில் வரலாற்று முக்கியத்துவமுடையதாக அமைந்தது. இது வெளிவந்த காலப்பகுதியில் பாதிப்புற்றிருந்த சமூகம்சார்ந்த நேரடி அனுபவங்களுடன் தொடர்புடைய முக்கிய ஆக்கம் என்ற வகையில் டானியல் அவர்களின் பஞ்சமர் முதலாவது நூல் (பாகம் 1) மட்டுமே 1972இல் நூல் வடிவில் வெளிவந்திருந்தது என்பது இங்கு நினைவில் இருத்தவேண்டிய வரலாற்றம்சமாகும். டானியலின் பஞ்சமர் வரிசை சார்ந்த பின்னைய ஆக்கங்களான பஞ்சமர் 12 பாகங்கள், கோவிந்தன், அடிமைகள்; கானல், தண்ணீர் முதலியன புலப்படுத்தி நிற்கும் விரிவான அநுபவப் பரப்பின் பின்புலத்தில் நோக்கும்போது விடிவைநோக்கி நாவல் ஒரு சாதாரண முயற்சியாக மட்டுமே காட்சிதருகிறது. ஆயினும் ஆரம்பகால அநுபவப்பதிவு என்ற மட்டிலான வμலாற்று முக்கியத்துவம் அதற்கு உளது என்பதை இங்கு சுட்டுவது அவசியமாகிறது.

பொற்சிறையில்வாடும் புனிதர்கள் என்ற ஆக்கம் தெணியான் அவர்களுடைய அநுபவ எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சமூகம் பற்றியது என்பதால் அவருடைய பார்வை விரிவை உணர்த்தும் ஓர் ஆர்வ முயற்சியாக மட்டுமே அமைந்து விடுகிறது. நாவலாக்க நிலையில் சித்திரிப்பு என்ற நிலையை எய்தாமல் விவரிப்பு என்ற நிலை சார்ந்ததாகவே இது காட்சி தருகின்றது என்பது இவ்வாக்கம் பற்றிய முக்கிய விமர்சனமாகும். இதனை இவ்வாக்கத்தின் அறிமுகவுரையிலே பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் நுட்பமாக உணர்த்திவிடுகிறார்.

இந்த மனித இன்னல்களைச் சொல்லுகிற முறைமையில் முக்கிய பண்பினை
அவதானித்துக் கொள்ளலாம். தெணியான் மனித இன்னல்களை விபரிக்கிறார்.
இந்த விவரணம் சித்திரிப்பா என்பது சுவாரசியமான இலக்கிய விமர்சன வினாவாகும். சித்திரிப்பு என்பதற்கும் விவரிப்பு என்பதற்கும் வேறுபாடு உண்டு. விவரிப்பில் சம்பவங்கள் முக்கியமாகும். சித்திரிப்பில் படிமங்கள் முக்கிமாகும்
…10

இப்படிச் செல்கிறது பேராசிரியரின் அவதானிப்பு. அறிமுகவுரைக்கான எல்லைக்குள் நின்றுகொண்டு இந்நாவல் பற்றி அவர் நுட்பமாக உணர்த்தியுள்ள விமர்சனம் இது.

மேற்படி இரு ஆக்கங்களையும் விட மரக்கொக்கு பலபடிகள் உயர்ந்த படைப்பாகும். அவ்வாக்கத்தின் முக்கிய சிறப்பாகக் குறிப்பிடக்கூடிய அம்சம் அதன் உருவகப் பண்பாகும். தலைப்பாக அமையும் மரக்கொக்கு என்பது கதைத் தலைவியான விஜயலட்சுமிக்கான உருவகம். விஜயலட்சுமி என்ற பாத்திரம் உயர்சாதிச் சமூகத்தின் மாறா நிலையிலான அகம்பாவ மனப்பாங்கின் உருவகமாகும். மாறிவரும் சமூகச் சூழல் மற்றும் சமூக மதிப்பீடுகள் என்பவற்றைப் புரிந்துகொள்ளாமல் கடந்த காலம் பற்றிய கற்பனைகளில் வாழ்ந்து கொண்டு நிகழ்காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் எல்லோருமே விஜயலட்சுமிகள்தான் மரக்கொக்குகள்தான். நிஜக் கொக்குக்கு என்றாவது மீன் கிட்டலாம். ஆனால் மரக்கொக்குக்கு?

இந்த உருவக அம்சத்தை சிந்தாமல் சிதறாமல் ஒரு பாத்திரத்தில் நிறை வித்து கட்டுக்கோப்பான ஒரு கதையாக வளர்தெடுத்துள்ள முறைமையில் தெணியான் அவர்கள் பாμராடுக்குரியவர். விஜயலட்சுமி, ஈழத்துத் தமிழிலக்கியத்தில் தோற்று விக்கப்பட்டுள்ள மிக முக்கியமான, மிகக் கவர்ச்சியுடைய பாத்திரங்களுள் ஒன்று என துணிந்து கூறலாம் (11) என்ற பேராசிரியர் சிவத்தம்பியவர்களின் கணிப்பை இங்கு நான் வழிமொழிகிறேன்.

பரம்பரை அகதிகள் குறுநாவலின் முக்கிய சிறப்பம்சமாகச் சுட்டக்கூடியது அதன் தலைப்பு உணர்த்திநிற்கும் தொனிப் பொருண்மையாகும். இன விடுதலைக்கான போராட்டச் சூழலில் உடைமைகளை இழந்து புலம் பெயர்ந் தோடியவர்களே பொதுவாக அகதிகள் எனச் சுட்டப்பட்டனர். அச்சூழலிலே, இங்கே பாருங்கள் இவர்களும் அகதிகள் தான்! இவர்கள் போராட்டச் சூழலின் அகதிகளல்ல! உங்கள் மத்தியில் பரம்பரையாகவே அகதிகளாக உள்ளவர்கள். அகதிகளாகவே பிறந்து வளர்ந்தவர்கள் இவர்களையும் உங்கள் கவனத்திற் கொள்ளுங்கள். எனத் தமிழர் சமூத்தை ஓங்கிக் குரல் கொடுக்கிறது, இத் தலைப்பு.

தெணியான் அவர்களின் சாதிப் பொருண்மை என்ற பார்வையெல்லைக்கப் பாற்பட்ட ஆக்கங்களில் கழுகுகள் நாவல் குறிப்பிடத்தக்க தரமுடைய முக்கிய படைப்பாகும். யாழ்ப்பாணப் பிμதேசச் சமூக அமைப்பின் கட்டுக்கோப்பு சிதைவுறுவதையும் அதற்குக் கராணமான பரம்பரைச் சொத்துடைமை என்ற பொருளியல் அம்சத்தையும் தெளிவாகவே இந்நாவல் உணர்த்தி நிற்கிறது. பிணந்தின்னும் கழுகுகள் போல சுரண்டலில் ஈடுபடுபவர்களையும் சொத்துகளை அபகரிக்க முயலுபவர்களையும் இவ்வாக்கம் தோலுரித்துக் காட்டுகிறது. இவ்வகையில் கழுகுகள் என்ற தலைப்பு பொருட் பொருத்த முடையதாக அமைந்துளது. செ. கணேசலிங்கனின் படைப்புகளில் புலப்படத் தொடங்கிய சமூகயதார்த்தப் பார்வை குறிப்பாகப் பொருளியல் சார்ந்த பார்வை தெணியானால் இந்நாவலில் சிறப்பாகவே தொடரப்பட்டுள்ளது. மரக் கொக்கு நாவலைப்போல தெணியானின் படைப்பாளுமைக்குத் தக்க சான்றாகச் சுட்டக்கூடிய ஆக்கம் இது.

ஏனையவற்றுள் சிதைவுகள் குறுநாவல் சமகால போர்க்கால அவல நிகழ்வுகளின்
பதிவு என்ற அளவில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது.

காத்திருப்பு, பனையின்நிழல் ஆகியவை பாலியல் மற்றும் அத்தொடர்பிலான
உளவியல் அம்சங்கள் என்பவற்றைப் பேசுபவை என்ற வகையில் முக்கிய
மானவை. குறிப்பாகப் பொருளியல் தேவைகள் என்ற அம்சம் குடும்ப உறவு சார்ந்த பாலியலில் எத்தகு தாக்கங்களை விளைவிக்கின்றது என்பதை இலக்கிய
மாக்க விழைந்த வகையில் அவருடைய படைப்புப் பார்வை விரிவு பெறுகின்றமையை உணரமுடிகின்றது. பாலியல் என்ற அம்சத்தை விரசமில்லாமல் யாரும் முகஞ்சுழிக்கா வண்ணம் இலக்கியப்படுத்தவேண்டும் என்பதில் அதீத எச்சரிக்கையுடன் இவர் செயற்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த எச்சரிக்கையுணர்வு பாத்திரப் பண்புகளை உருவாக்கி வளர்த் தெடுப்பதற்குத் தடையாக அமைந்து விடுகின்ற தென்பதை இங்கு சுட்ட வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக, காத்திருப்பு நாவலில் கணவனின் உளவியல் அம்சத்தைப் பேசுவதிற் காட்டிய ஈடுபாட்டை, மனைவியின் உளவியல் அம்சத்தைப் பேசுவதில் தெணியான் காட்டவில்லை. கதையின் முடிவில் கணவனுக்கு உண்மையான வளாக வாழ முற்படும் கதைத் தலைவி ஈசுவரியின் கழிவிரக்க நிலையிலான மனக்கோலங்களைக் காட்டியவர், தொடக்கத்தில் கணவனுக்குத் துரோக மிழைக்க முற்படும் சூழ்நிலையில் எத்தகு மனநிலையுடன் இணங்கினாள் என்பது உணர்த்தப்படவில்லை. இது அவளுடைய பாத்திரப்பண்பு வளர்ச்சியை இனங்காண்பதற்குத் தடையாகிவிடுகிறது என்பது எனது கருத்து.

கானலில் மான் நாவல் தெணியானின் ஒரு வித்தியாசமான முயற்சியாகும். புதிய உத்திகளையும் புதிய பரிசோதனைகளையும் மேற் கொள்வதில் அவருக்கிருக்கும்
ஆர்வத்தின் வெளிப்பாடாக இதனைக் கொள்ளலாம்.

ஒட்டுமொத்த மதிப்பீட்டிலே மரக் கொக்கு, கழுகு ஆகியவை தெணியானின் படைப்பு நிலையில் ஏனையவற்றைவிட உயர் தரத்தில் உள்ளன. இளங்கீரன், செ. கணேசலிங்கன் மற்றும் டானியல் ஆகியோரின் வழி தொடரும் சமூகயதார்த்தப் படைப்பு நெறியைச் சமகாலத்தில் தொடரும் முக்கிய படைப்பாளியாகத் தெணியான் திகழ்கிறார் என்பதை இவ்வாக்கங்கள் உறுதிப் படுத்துகின்றன என்பது எனது கணிப்பு. காத்திருப்பு, பனையின் நிழல், கானலில் மான் முதலிய ஆக்கங்கள் தெணியானின் பார்வை விரிவு மற்றும் புதுவகைப் பரிசோதனை ஆர்வம் என்பவற்றை இனங்காட்டி நிற்பன. அவ் வகையில் அவர் எதிர்காலத்தில் நடை பயிலக்கூடிய புதிய பாதைகளை அவை இனங்காட்டுவன என்று ஊகிக்கமுடிகிறது. நிறைவாக…..

தெணியான் என்ற நாவலாசிரியர் என்ற தலைப்பிலான இக்கட்டுரையில் முதலில்
அவருடைய ஆக்கங்கள் பற்றி பொது அறிமுகம் மேற்கொள்ளப் பட்டது. அடுத்து அவருக்குப் பின்புலமாக அமைந்த ஈழத்து நாவலிலக்கிய வரலாறு எடுத்துரைக்கப்பட்டது. இறுதியாக அவருடைய படைப்புகள் தொடர்பான சில
மதிப்பீட்டுக் குறிப்புகள் முன் வைக்கப்பட்டன.

கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக ஈழத்தில் வளர்ந்து வரும் சமூக யதார்த்தப் பாங்கான படைப்புநெறியைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் முக்கிய படைப்பாளிகளுள் ஒருவராகத் தெணியான் திகழ்ந்து வருகிறார் என்பதையும் அவ்வகையில் ஈழத்து நாவலிலக்கிய வரலாற்றில் அவருக்கு முக்கிய இடம் உண்டு என்பதையும் இக்கட்டுரையில் மேலே முன்வைக்கப்பட்ட வரலாற்றுச் செய்திகள் மற்றும் மதிப்பீட்டுக் குறிப்புகள் என்பவற்றின் மூலம் இலக்கிய உலகினர் தெளிந்து கொள்ளமுடியும்.

தெணியான் அவர்கள் தமது நாவலிலக்கியப் படைப்பாளுமை பற்றி மனநிறைவு கொள்வதற்கும் அதேவேளை அவர் தம்மைச் சுயவிமர்சனம் செய்து கொண்டு படைப்புச் செயற்பாடுகளை மேலும் ஊக்கமுடன் தொடர்வதற்கும் இக்கட்டுரை துணைபுரியும் என்ற நம்பிக்கையுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

குறிப்புகளும் சான்றுகளும்

1. இவ்வாக்கம் பற்றிய தகவலைத் தந்தவர் தெணியானின் இளவலும், ‘நான்காவது
பரிமாணம்’ இதழின் ஆசிரியருமான திரு. க. நவம் நவரதினம் அவர்கள்.

2. தெணியான், ‘மμக்கொக்கு’, ‘நான்காவது பரிமாணம்’ வெளியீடு, யாழ்ப்பாணம்..
1994. பக். 8

3. தெணியான், ‘கழுகுகள்’, ‘நர்மதா வெளியீடு’, சென்னை. 1981. பக். 175

4. இந்நாவல் பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு பார்க்க: நா.சுப்பிரமணின், ‘ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம்’ திருத்திய விரிவாக்கப்பதிப்பு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2009. பக். 23951.

5. இவ்வரலாற்றும்சம் பற்றிய தெளிவிற்கு: பார்க்க: நா. சுப்பிμமணியனின் மேற்படி
நூல். பக். 2354.

6. தெணியான் அவர்களின் மார்க்சிய ஈடுபாடு மற்றும் அத்தொடர்பிலான சமூகஅμசியல் செயற்பாடுகள் பற்றிய தகவல்களுக்கு பார்க்க: இராகவன், தெணியான் நேர்காணல் ‘மூன்றாவது மனிதன்’ இதழ் 16. (பெப் மார்ச் 2003)
பக். 411

7. தெணியான் மணிவிழா மலரில் இடம்பெற்றதான நந்தியவர்களின் மேற்படி
நினைவுப்பதிவுக் குறிப்பைத் தந்துதவியவர் தெணியானின் இளவலும், ‘நான்காவது
பரிமாணம்’ இதழின் ஆசிரியருமான திரு. க. நவம்நவரத்தினம் அவர்கள்.

8. தெணியான், ‘மரக்கொக்கு’ பக். 9

9. கார்த்திகேசு சிவத்தம்பி, அறிமுகவுரை தெணியானின் ‘பொற்சிறையில் வாடும்
புனிதர்கள்’, முரசொலி வெளியீடு. யாழ்ப்பாணம். 1989. பக். (x)

10. மேற்படி. பக். .. (xi)

11. மரக்கொக்கு. பக். .. (v-vi)

Tags: ,

Comments are closed.