போதிமரம்

Nov 22nd, 2010 | எழுத்தாளர்: | பகுப்பு: Uncategorized

போதிமரம்
என்னை விறுக்கென்று கடந்த
உன் விழிகளில்
முன்னரிலும் முள்ளடர்ந்திருந்தது.
உன் உதட்டினுள்
துருதுருக்கும் கத்திமுனை
என் தொண்டைக்குழியை வேட்கிறது
மாறிவிட்டன நமதிடங்கள்
துடிப்படங்கும் மீனாக நான் தøμயில்
துள்ளி நீர் கிழித்தபடி
நீ கடலில்.
துரோகிதியாகிச் சட்டைகள் அவிழ்ந்துவிழ
சற்றுமுன்பே
அம்மணமானோம்.
இடுகாட்டில் குளிர்காயும்
குற்றவுணர்வில்
எரிகிறது எரிகிறது தேகம்
நம் அட்டைக்கத்திகளில்
எவரவரின் குருதியோ வழிகிறது
நாம் இசைத்த பாடல்களைப்
பிரித்துப் பார்த்தேன்
ஒழுகிற்று
ஊரும் உயிரும் இழந்த
பல்லாயிரவரின் ஒப்பாரிகள்
வன்மம் உதிர்த்து
வந்தொருக்கால்
அணைத்துவிட்டுப் போய்த்தொலையேன்
மரணம் என்ற போதிமரத்தின்கீழ்
நிழலில்லை
நீயுமில்லை
நானுமில்லை
வதைமுகாம் மனிதர்களின்
கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்கிறது
தோற்றவரின் வேதம் என்பாய்
சரணாகதி என்பாய்
போடீ போ!
இனி இழக்க
எவரிடமும் எந்த மயிருமில்லை!

Comments are closed.