காரணம் ஆயிரம்

Oct 23rd, 2010 | எழுத்தாளர்: | பகுப்பு: இதழ் 33, சிறுகதைகள்

‘நான் ஏதாவது செய்ய வேண்டும், சுமதி. இப்படி என்னால் வாழ முடியாது’. வனிதாவுக்கு ஓரளவு மது போதையாக இருந்திருக்க வேண்டும். அரை குறை வொட்கா போத்தலும் அருகே இருந்தது. ‘உன்ர நிலைமை புரியுது வனி. நீ வாழ்ந்தேயாக வேணும். இந்தக் குழந்தைகளை விட்டிட்டு நீ ஒண்டுமே செய்ய ஏலாது.’ சுமதி வனிதாவின் குழந்தைகளை மாறிமாறிப் பார்த்தாள். அவளது கண்களில் நீர் கசிந்தது.

வனிதாவுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் ஸ்டீபன், எட்டு வயது. இரண்டாவது ஜெனிபர், ஆறு வயது. ஸ்டீபன் தொண்டைக் கிழியக் கத்திக் கொண்டிருந்தான். கண்கள் மட்டும் டெலிவிசனை விட்டு அகலவில்லை. றிமோட் கண்ட்ரோல் அவனருகில் உடைந்து கிடந்தது. அவனுக்கு ஆறு வயதிருக்கும் போது ஆட்டிசம் என்ற வியாதியிருப்பதாக மருத்துவர் அறிவித்திருந்தார்.

ஜெனிபர் ஒரு ‘ஹை’ சேரில் வைத்து பெல்ட்டுகளினால் கட்டப்பட்டிருந்தாள். அவளது வாய் கோணலாகவும் தலை தோளில் மீது சாயவிடப்பட்டது போலவுமிருந்தது. பார்வை யன்னலினூடு வெகு தூரத்தில் குத்தி
நிறுத்தப்பட்டிருந்தது. அவளை ‘குவாட் றோபிளீஜிக்’ குழந்தை என்று வைத்திய
உலகம் நாமமிட்டிருந்தது.

வனிதா குசினியில் போடப்பட்டிருந்த சிறிய ‘சைனெற்’ சாப்பாட்டு மேசையில் அமர்ந்து கொண்டிருந்தாள். அவளது வலது கையைப் பிடித்தவாறு சுமதி அருகில் அமர்ந்திருந்தாள்.

‘என்ன, குசினியிலிருந்து தண்ணீர் லீக் பண்ணுது போல. காலுக்குள் ஈரமா இருக்குது’. சுமதி எழுந்து நின்று மேசைக்குக் கீழே பார்த்தாள். தண்ணீர், குசினிப் பக்கமிருந்து வடிந்து வந்த அடையாளம் தெரிந்தது.

‘அது ஸ்டீபனின் வேலை. கொஞ்சம் கூட அங்கால இங்கால திரும்பேலாது. ஜெனி
பருக்குச் சாப்பாடு தீத்துவதற்காக ஐந்து நிமிஷம் போகிறதுக்குள்ள அவன் குசினிப் பைப்பைத் திறந்துவிட்டான். தண்ணி நிரம்பி வழிந்ததால நிலமெல்லாம் ஈரம்.
நாளைக்கு கீழ் அப்பாட்மென்ட்காரன் சுப்பிரண்டென்டோட வரப் போறான். கொஞ்ச நாளைக்கு முதல்லதான் வந்து ‘வார்ன்’ பண்ணிவிட்டுப் போனான்.’

‘நீ என்ன பாவம் செய்தனியோ தெரியாது. கடவுள் உன்னைப் போட்டு இப்பிடி வருத்திறார்.’

‘நான் இப்ப சேர்ச்சுக்குப் போறதில்லை. என்ரை மண்டாட்டம் ஒண்டும் கடவுளுக்கு கேட்குதில்லை. பிள்ளையளுக்காகத்தான் இவ்வளவு நாளும் பொறுத்தனான். இனியும் என்னால ஏலாது.’

‘ஜேக்கப் இப்ப எங்க இருக்கிறார்? பிள்ளையளைப் பாக்க வாறேல்லையா?’ ‘போன கிறிஸ்த்மஸ் வந்தவர். பிள்ளையளோட இருந்து சாப்பிட்டுட்டு போங்கோ எண்டு கேட்டன். பரிசுகளைத் தந்திட்டு அந்தாள் போயிட்டுது.

‘இந்தாளை எங்க பிடிச்சனி?’

‘எல்லாம் விதிதான். சுமதி, உனக்கு விதி, பழி, பாவம் எண்டிறதில நம்பிக்கை இருக்குதா?’
‘இருக்குது, ஏன் கேட்கிற?’

சுமதியின பதிலைடு கேட்காமலேயே வனிலிவிங் ரூமிற்குள் ஓடினாள். ‘ஸ்டீபன் ஸ்டொப் இட். நௌ. டோன்ட் துறோ இட்.’ கண் மூடித் திறப்பதற்குள் ஸ்டீபன்
தன் கையிலிருந்த றிமோட் கன்ட்ரோல் பற்றறிகளை ஒன்றன்பின் ஒன்றாக டெலிவிசனை நோக்கி வீசிக் கொண்டிருந்தான். எல்.சீ.டீ. டெலிவிசனாகையால் பெரிய சத்தமேதுமில்லாது திரை மட்டும் உடைந்து நொறுங்கியிருந்தது. மகனை அடிக்க ஓங்கிய கையை தனது தலையில் அடித்து அடித்து அலறினாள் வனி. கால்களினால் சுவரை ஓங்கி உதைத்தாள். சுமதி அவளிடம் சென்று கைகளைப் பிடித்து அன்பாக அழைத்து வந்து மேசையில் அமர வைத்தாள். உரத்த சத்தத்தோடு அழுதாள். பற்களை நறும்பியபடி மேசை மீது ஓங்கி, கைகளினால் குத்தினாள். கெட்ட வார்த்தைகளைப் பாவித்து கடவுளையும் விதியையும் திட்டித் தீர்த்தாள். சுமதியால் எதுவுமே பேசுவதற்கு இடைவெளி கிடைக்கவில்லை.

‘ஐ ஆம் சொறி சுமதி. ஒவ்வொரு நாளும் விடிந்ததிலிருந்து பொழுது படும் வரை என்ர வாழ்க்கை இப்பிடித்தான்.’

‘கோப்பி ஏதும் போடவா? எனக்கும் தேவைப்படுகு’ பதிலை எதிர்பாராமலேயே சுமதி குசினிக்குள் சென்று கேத்தலில் நீரைச் சுட வைத்தாள்.

‘சுமதி, இதையெல்லாம் ஒருவகையில் அனுபவிக்க வேண்டியவள்தான். என்ர வாழ்க்கையின்ர முன் பகுதி உனக்குத் தெரியாது. அதுதான் பழி பாவங்களில் உனக்கு நம்பிக்கை இருக்குதா எண்டு கேட்டனனான்.’

‘விரும்பினால் சொல்லு. பழி பாவம் செய்யக்கூடியவள் மாதிரி நீ இல்லையே.
சில வேளைகளில் விதி அப்படி விளையாடியிருக்கும்.’

‘இல்லை நான் பழி பாவம் செய்தனான். ஒரு நல்ல மனுசனுடைய உயிர் போறதுக்குக் காரணமானவள் நான்’.

வனிதாவின் சற்று முன்னரிருந்த கோலம் மாறிக் கோபமும் தணிந்தது, சுமதிக்கு ஆறுதலாகவிருந்தது. கோப்பியைப் போட்டு இருவருக்கும் பரிமாறினாள்.

‘கோப்பி சில வேளைகளில வெறியை முறிச்சுப்போடுமெண்டு சொல்லிறவை’ மதியின் கேலி வனியையும் சிரிக்க வைத்தது.

‘நான் சின்னப் பிள்ளையாக இருந்தபோதே எனது சொந்த மச்சானைக் காதலிச்சனான். மன்மதன் அவருடைய பெயர். உண்மையில நல்ல வடிவான ஆள்தான்.

மற்ற குடும்பங்களில மாதிரி இல்லாம எங்கட இரண்டு குடும்பங்களும் கல்யாணத்துக்குச் சம்மதம் தெரிவிச்சவைதான். ஆனா நான் தான் கெடுத்துப் போட்டன். நீ சொன்னது போல விதி என்ர வாழ்க்கையோட விளையாடி விட்டுது.’

சுமதி ஒரு மர்ம நாவலை வாசிக்கும் ரசனையோடு உற்றுக் கேட்டாள். ‘என்ர அண்ணன் இங்க கூப்பிட்டு சரியா ஒரு வருசத்துல நான் மதனை ஸ்பொன்சர் பண்ணிக் கூப்பிட்டனான். வந்து சரியா ஆறு மாசத்தில அவரைச் சாகடிச்சும் போட்டன்.’

‘ஏன் என்ன நடந்தது?’

வனிதா எழுந்துபோய் ஜெனிபரின் தலையைத் தடவிக் கொஞ்சி விட்டு வந்தாள். ஸ்டீபன் கண்களை மேலிமைகளுக்குள் சொருகிக் கொண்டு வனியை ஒரு விதமாகப் பார்த்தான். அது கோபமான பார்வையா அல்லது ஏக்கத்தோடான பார்வையா என்று புரியவில்லை. சுமதிக்கு வனிதாவின் மர்மக் கதை ‘அடுத்த வாரம் தொடரும்’ பாணியில் இடை நிறுத்தம் செய்யப்பட்டதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. வனிதா யன்னலினூடு வெளியே பார்த்துக்கொண்டே தனது கதையைத் தொடர்ந்தாள்.

‘நான் இலங்கையில இருந்து வந்தவுடன் அண்ணா எனது ஏ.லெவல் றிசல்ட்டைக்
கொண்டு சென்ரெனியல் கல்லூரியில் சேர்த்து விட்டான். அங்க படிக்கிற போதுதான்
இந்த ஜேக்கப்பை சந்திச்சனான். என்ர கிளாஸ் தான். அதுக்காக உடனே நானும் அவரும் கட்டிப்பிடிச்சுக் காதல் செய்தனாங்கள் எண்டு நினைச்சு விட வேண்டாம். என்ர மனத்தில இருந்து மதனை ஒருவராலும் அகற்ற முடியேல்ல.’

‘அப்ப என்ன ஜேக்கப் உன்னைக் கடத்திக் கொண்டே போனவர்?’

‘சீ அந்தாள் அப்பிடியான ஆளில்லை. அவரும் நல்ல மனிசன்தான்.நான் என்ர மன்மதனை விட்டுவிட்டு வந்து தனிய இருந்து படிப்பில கவனம் செலுத்த முடியேல்ல. நெடுக ஜேக்கப்போட தான் இதைப் பற்றிக் கதைப்பன்.

‘உனக்கு காதலிச்சு அனுபவம் இருக்கோ?’

சுமதி பதிலேதும் சொல்லாது நெளிந்த விதத்தை வைத்து மிகுதியை கிரகித்துக் கொண்டாள்.

‘என்னவோ காதலிக்கிற ஆட்கள் தங்கட தோழர் தோழியரிட்ட தங்கட காதலைப் பற்றிக் கதைக்காட்டி அவங்களுக்கு விசர் பிடிச்சிடும். எனக்கு வந்து வாய்ச்ச வெங்காயம் ஜேக்கப்பாக இருந்திட்டுது.’

ஒருநாள் ஜேக்கப் திடீரெண்டு ‘நீ உன்ர மச்சானைக் கல்யாணம் கட்டப் போறியோ?’ என்டு கேட்டான். எனக்கு ஒரு மாதிரியாக போயிட்டுது. இந்தநாள் தான் என்னில வளையம் போடுதோ எண்டு நினைச்சு ‘கட்டினா அவøμத்தான்’ எண்டு சொன்னன். அத்தோட ஜேக்கப் இதுவரையில என்னோட தப்பாகத்தான் பழகி வருகிறானோ எண்ட சந்தேகமும் எனக்குள்ள வந்தது. ‘ஜேக்கப்’ என்னோட வேற எண்ணத்தோட பழகினா இப்பவே எங்கட நட்பை முறிச்சுப் போடுவம்’ எண்டு அவனிட்ட முகத்தில அடிச்ச மாதிரிச் சொல்லிப் போட்டன் . அதுக்கு அவன் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது.

அவன் சொன்னான். ‘வனி இந்த நாடில, ஏன் பொதுவாக மேற்கு நாடுகளில சொந்த தாய் மாமன் மாமி பிள்ளைகளைக் கலியாணம் கட்ட அனுமதிக்கிறேல்ல. காμணம் சில வேளைகளில பிறக்கிற பிள்ளைகள் அங்க வீனமாகவோ அல்லது பிரச்சனைகளோடயோ பிறக்கலாம். அதை யோசிச்சுக் கல்யாணத்தைச் செய். எனக்கு உன் மேல கிறேசி இல்ல. நல்ல நண்பியெண்ட முறையில சொல்லிறன், அவ்வளவுதான். அதுக்கு பிறகு கொஞ்ச நாட்களாய் அவன் என்னைச் சந்திக்கவேயில்ல.’

மர்மக் கதையின் வில்லனாக நினைத்திருந்த ஜேக்கப் திடீரென்று நல்லவனாக மாறியது சுமதிக்கு அச்சத்தையே ஊட்டியது. ஏற்கெனவே ‘கதை நேரம்’ ஓவர் டைமில் போய்க் கொண்டிருக்கிறது.

‘பிறகு?’ மதியே அடுத்த அத்தியாயத்தையும் தொடக்கி வைத்தாள்.

‘ஜேக்கப் சொன்ன நாளிலிருந்து எனக்குள்ள அது ஒரு போராட்டத்தையே உருவாக்கி விட்டுது. ஜேக்கப் என்ர நன்மைக்காகத்தானே சொன்னவன். அவனை நான் ஏன் கோபிக்கவேணும்?’.

ஒரு நாள் நானே வலிந்து போய் அவனிடம் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அவன் சொன்ன விடயம் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே வந்தது. ‘உண்மையில் பிறக்க போகும் குழந்தைகள் அங்கவீனமாக பிறந்து விடுமோ எண்ட சந்தேகம் எனக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்திப் போட்டுது. நித்திரை வருவதுமில்லை. படிக்கவும் முடியேல்ல.’

என்ர பரிதாப நிலையைப் பாத்து என்ர அண்ணா ஒரு சாத்திரியிட்ட என்ர சாதகத்தைக் காட்டிக் கேட்டான். கோதாரி விழுந்த சாத்திரியும் அதை உண்மையாக்கி விட்டுது. அதுக்குப் பிறகு எங்கள் ஒருவருக்கும் மன்மதனைக் கலியாணம் செய்வதில் விருப்பமில்லாமல் போயிட்டுது.’

‘அப்ப மன்மதன் இங்க வந்திட்டாரா?’

‘அவர் வந்திட்டார். அவர் கல்யாணம் முடியுமட்டும் அவருடைய நண்பரொருவரோடு தான் தங்கி இருந்தவர். அவரை அண்ணா கூப்பிட்டு மெதுவாக விஷயத்தைச் சொல்லிப்போட்டான்.’

‘பாவம் அந்தப் பொடியன்.’

‘உண்மைதான் சுமதி. நீயெண்டா இதை எப்பிடிக் கையாண்டிருப்பாய்?’

‘முடிவெடுக்கிறது கஷ்டம் தான். பிறகு என்ன நடந்தது?’ கதையின் கடைசிப்பக்கத்தைப் பார்த்துவிட்டு அவசரமாக வீட்டுக்குப் போவதில் சிரத்தையாயிருந்தாள் சுமதி.

‘வேறென்ன. கடிதம் ஒண்டை எழுதி வைச்சுப் போட்டு மதன் சப்வே ட்றெயினுக்கு முன்னால பாய்ஞ்சு தற்கொலை செய்து போட்டார். நான் அழுததைவிட ஜேக்கப்தான் அதிகம் அழுதான். இந்த நிலைக்குத் தானே காμணமெண்டு அவன் நினைச்சிருக்கலாம். அது உண்மையில்லை. எனக்கு வலிமை குறைந்த மனம். நான் பல வீனமானவள். அது தான் காரணம்.

அந்தக் குற்றதால ஜேக்கப் என்னை கலியாணம் செய்வதென்று அண்ணாவைக்
கேட்டான். அவன் செய்த தியாகத்துக்காக நானும் மதம் மாறி அவனை கல்யாணம்
கட்டிக் கொண்டேன்.

ஆனால் விதியைப் பாத்தியா? சாத்திரி சொன்னது ‘உன்ர பிள்ளைதான் அங்கவீனமாகப் பிறக்குமெண்டு. அது மதனின்ர பிள்ளையேண்டு சாத்திரி சொல்லேல்லத்தானே!

‘நீ இப்பிடி கஷ்டப்படேக்க ஏன் ஜேக்கப் உன்னையும் பிள்ளையளையும் விட்டிட்டுபோனான். கொஞ்சமும் இμக்கமில்லாத மனம் அவனுக்கு’ சுமதி பொரிந்து தள்ளினாள்.

‘இப்ப சொல்லு இது விதியா? பழி பாவமா? எனக்காக ஏன் இந்தக் குஞ்சுகளைக் கடவுள் தண்டிக்க வேணும்?

‘இல்லை சுமதி. அவன் பாவம். நானோ அல்லது என்னை அவனோ காதலிக்கேல்ல. எங்களது ஒரு மரேஜ் ஒரு கொன்வீனியன்ஸ். அவ்வளவுதான்.’

கடவுள்மீதும் விதிமீதும் இருந்த ஆத்திரம் எல்லாத்தையும் நான் ஜேக்கப் மேலதான் கொட்டுவன். நான் தினமும் வீட்டுக்க இருந்து இந்தப் பிள்ளைகள்படுகிற வேதனையைப் பார்த்து பார்த்து டிப்பிறெஷனில் இருக்கிறப் போது ஜேக்கப் வேலையால களைச்சு விழுந்து வருவான். நான் அவன் மேல சீறிப் பாய்வன். பல தடவைகள் நானே அவனை அடித்திருக்கிறன். அவன் திருப்பித் தொட மாட்டான். எவ்வளவு துன்பங்களைத் தாங்கியும் அவன் என்னையோ பிள்ளைகளையோ விட்டு விட்டுப்போக மாட்டான்.

ஒரு நாள் தும்புக்கட்டையால அடிச்சு ‘நீ ஒரு ஆனான ஆம்பிளையா இருந்தா இப்பவே இந்த வீட்டை விட்டுப் போடா. திரும்பி வராத நாயே’ என்று கலைத்து விட்டேன்.

சுமதிக்கு வனிதாவில் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. முகம் கடுகடுப்பானது.
வனிதா சிரித்தாள்.

‘நீ கோபப் படுகிற. எனக்கு விளங்குது. ஒரு நல்ல காதலனை கொண்டுக் போட்டு ஒரு நல்ல புருஷனையும் கலைச்ச நான் ஒரு வே…மகள் எண்டு நினைப்ப? இல்லையா?’

‘நீ அதை விடக் கேவலம்’

மே பி…யூ ஆர் றைட். ஆனா எனக்கு வேற நல்ல வழி தெரியேல்ல. நான் செய்த
பிழைக்கு ஏன் அந்த நல்லவன் தினமும் துன்பத்தை அனுபவிக்க வேணும்? அவன்
எங்காவது நிம்மதியா வாழ வேணும். எனக்காக அவன் செய்த தியாகம் போதும். என்னையும் இந்த பிள்ளையளையும் பார்த்துப் பார்த்து அவன் சதா செத்துக் கொண்டிருந்தான். ஒருவனைத்தான் கொண்டு போட்டன். மற்றவனையாவது வாழவைக்கிறதுக்கு இதைத் தவிμ வேறு வழியில்லை சுமதி.’

ஒவ்வொருத்தரின்ர வாழ்க்கையும் எப்பிடி அமையவேண்டுமெண்டதுக்கு ஆயிμம் காரணங்கள் இருக்கலாம். ஆனால்…. சுமதி….’

சுமதி அழுகையை நிறுத்த முடியாது ஓடிக்கொண்டிருந்தாள்.

09.09.09

Comments are closed.