கூட்டிச் செல்லும் குரல்

Nov 5th, 2011 | எழுத்தாளர்: | பகுப்பு: இதழ் 34, சிறுகதைகள்

காலையில் எழுந்து நடக்கத் தொடங்கினான் மாணங்கி. விரும்பியே அலையும் மனநிலையொன்றின் காரணமென்ன என்ற கேள்வியொன்றை யோசித்தபடி…… சிந்திப்பதற்கும்,நடத்தலுக்குமான தொடர்பு வெறும் பளக்கத்தால் வந்ததாகத் தெரியவில்லை. நடக்கும்போதில் கால்களாலேயே சிந்திப்பது போன்றதொரு புரிதல் அவனுள்ளே நிகழ்ந்தபடியே இருக்கிறது. அவன் நடந்துகொண்டிருந்தான்………… செல் பேசிமணி ஒலித்தது எடுத்தபோது மறுபுறத்தில் கரகரத்ததொரு குரல்/ எங்கே நிற்கிறாய்? நான் நடந்துகொண்டிருக்கிறேன்….. யாரோடு போகிறாய்? நானும்,நானும்,நானும்… நான்களோடு…. சரி…. எங்கே போகிறாய்? என் தேசத்திலிருக்கும் என் கிராமத்தையும் தாண்டி…. என்னச் சந்திக்கிற விருப்பமேதாவது இருக்கோ? நீ மையப்படுத்தப் பட்டிருக்கிற ஒன்றாய் தென்பட்டால் உன்னை நான் காண விரும்ப இல்ல ….. நானும் உன்னப் போலதான் முடிஞ்சால் வா…. எங்க நிக்கிறாய்? ஆற்றங்கரையில…….. கரகரத்த குரல் செல்பேசியை வைத்துவிட்டது…. அந்தக் குரலுடன் உரையாடிய பின்னர் கொஞ்சம் வார்த்தைகள் மிச்சமிருப்பதாய் உணர்ந்தான் குரல் சொன்ன இடம் தேடி புறங்கைக் கட்டோடு நடக்கலானான். வாழ்க்கை முழுவதும் அவன் உள்ளும் புறமுமான குரல்களை கேட்டபடிதான் இருக்கிறான். குரல்கள் அவனை அழைப்பதும் அவை அழைக்கும் திசை நோக்கி அவன் நடப்பதும் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. அவனது பயணங்களெல்லாமே இதுவரையில் ஏதோ ஒரு தரிப்பிடத்தில் முடிந்தவையாகிப் போயின. தான் பயணிப்பதற்காகவே பிறந்ததாகவும் தனது பயணத்திற்கு தரிப்பிடங்கள் போதுமானவையாக இல்லை எனவும் நினைத்துக்கொள்கிறான்.முன்னொருநாளில் பனங்காய்ப் பணிகாரம் தின்றுகொண்டிருந்த அவினாசி அக்காளை எச்சிப் பேய் ஏமாற்றிக் கூட்டிச்சென்ற கதையை அவன் நினைத்துப் பார்க்கிறான் அவனது கிராமத்தில் பேய்கள் கூட்டிச் சென்று வீடுதிரும்பாத ஒவ்வொரு குமரியின் முகமும் அவனது நினைவில் வந்துபோக அவன் நடந்துகொண்டிருந்தான். அவன் நடக்க நடக்க காட்சிகள் மாறிக் கொண்டிருந்தன, கற்பனை வீதி திறந்தபடியே இருந்தது… அந்தத்தெருவில் ஒரு குழந்தையைக் கண்டான். அந்தக் குழந்தையோ கண்களால் நீர்வடிய அவனைப் பார்த்தபடி நின்றது. அது கண்ணிமை உதிர்ந்து கண்ணுக்குள் விழுந்து விட்டதாகச் சொல்லி அழுதபடி இருந்தது. அவன் அதன் கண்களை ஊதித் துடைத்தபோதும் அதன் கண்ணீரையோ கலங்கலையோ நிறுத்த முடியவில்லை. ‘உனது வீட்டைக் காட்டினால் கொண்டுபோய் விடுவேன்’ என்று அவன் குழந்தையிடம் கூறினான் குழந்தையோ வெவ்வேறு தெருக்களைக் காட்டியது….. அந்தத் தெருக்களில் அவன் குழந்தையைக் கூட்டிச் சென்று வெவ்வேறு நிறங்களையும், மொழிகளையும் கொண்ட மனிதர்களைக் கண்டு ஏமாற்றமடைந்தான் குழந்தையோ ‘இந்தத் தெரு முன்னர் இதிலே இருக்கவில்லை’ என்றும் ‘ இந்தவீடு முன்னர் இதிலே இருக்கவில்லை ‘ யென்றும் அவனைக் குளப்பியது. பின்னர் தன் தந்தைக்கும், தனக்கும் ஒரேமாதிரி ‘தழும்பு’ முதுகில் இருப்பதாகச் சொல்லியது. அவனோ எப்படியாவது குழந்தையை உரிய இடத்தில் சேர்த்துவிடலாமென்ற நம்பிக்கையோடு அதன் முதுகை உற்றுப் பார்த்தான். இப்போ அவனது கண்கள் கலங்கின ஏனெனில் அது பார்ப்பதற்கு ‘சிங்கள சிறியின்’ உருவமாக இருந்தது. அவனுக்கு குழந்தையை எங்கே கூட்டிக் கொண்டுபோய் சேர்ப்பதென்று தெரியவில்லை. அவன் தெருக்களில் கோசமிட்டுச் செல்லும் மனிதர்கழுக்குள் அதன் தந்தையைத் தேடினான். தான் குழந்தையோடு மினக்கெடுவதால் குரல் சொன்ன திசைக்கு தன்னால் போக முடியவில்லையே எனும் துயரம் அவனுக்குள் மூண்டது…அவனோ குழந்தையின் அழுகையை நிறுத்தவும் அதனைத் தூங்கவைக்கவும் தென்மோடிக் கொச்சக தருவொன்றை இசைக்கத் தொடங்கினான்.. நேற்றிருந்த நிலவதுவும் நெருப்புத் தின்று பாதியாகும்/ காற்றினிலே ஓலக்குரல் கரைமுழுதும் பரவிவிடும்/ குரலெடுக்க நாதியில்லை கூடவர யாருமில்லை/ பரந்த சிறைப் பட்டணங்கள் பாவம் இந்த கேடயங்கள்/ ஆரோ மூட்டி வைத்த அடுப்புகள் எரியுதடி – ஆரிராரிரோ அதனிலே தினமெரியும் விறகுகள் ஆனோமடி – ஆரிராரிரோ – பனையடி நிழலிலே கோடையில் மறைந்திருக்கும் குடையற்ற மடையர்களோ- ஆரிராரிரோ குழந்தை அழுதுகொண்டே இருந்தது. குழந்தையை தோழில் போட்டபடி அவன் நடந்துகொண்டிருந்தான்…… 00 நடக்க நடக்க பகல் தேய்ந்துகொண்டிருந்தது. அவனோ தேய்ந்து போன பகலின் முகத்தைக் காட்டி ‘பார் பறவைகள் தங்கள் கூடுகளுக்குச் செல்கின்றன..ஏதோ அவசர அலுவலாய் ‘ஸ்கங்குகள்’ கூட வீதிகளைக் கடந்து கொண்டிருக்கின்றன.. நானும் நீயும்மட்டும்………அலைந்து கொண்டிருக்கிறோம்’ என்றான். பின்னர் குழந்தையோ தன் கண்ணை மூட முடியவில்லையென்றும், இரவிரவாகத் தான் விழித்திருக்க கதை சொல்லுமாறும் அவனைப் பார்த்துக் கேட்டது. அவனும் என் பிரியமான குழந்தையே/ பூவரசம் வேர்கள் பின்னிப் புரயோடிக் கிடக்கும் என் வரண்ட நிலதில் பல ஆண்டுகளாய் கிளைவிரித்து கிராமத்து மனிதர்களின் ஆள்மனதின் ஓரங்களில் அச்சுறுத்தலை உண்டுபண்ணும் ஓர் ராட்ஸஸப் பூவரசு பற்றிச் சொல்கிறேன் கேள். என்று ஓர் கதையின் கிளையை விரிக்கத் தொடங்கினான். 00 நாங்கள் பூவரசுகளுக்குள்தான் வளர்ந்தோம், கொழுத்தும் வெய்யில்காலத்தில் பூவரசம் நிழல்தான் எங்கள் தஞ்சம். பூவரசம் மொட்டுகளைப் பிடுங்கித்தான் சுவர்களில் நாங்கள் ஓவியங்களை வரைந்து பளகினோம், எங்கள் கடற்கரையின் ‘அந்தோனியார்’ கோவில் திருநாளில் பொங்கிய பாற்சோறினை அகன்ற பூவரசம் இலைகளைப் பிடுங்கி உள்ளங் கையில் வாங்கித்தான் நாங்கள் உண்பது வளக்கம். சூடுபட்டுச் சோர்ந்த பூவரசம் இலைகளின் வாசம் பாற்சோற்றுடன் கலந்து வரும்போது எவ்வளவு அருமையாக இருக்கும் தெரியுமா? பூவரசம் இலைகளில் காம்புகளைப் பிய்த்து ‘றபர் பான்ற்’ல் வைத்து அடித்து ‘இயக்கமும் ஆமியும் விளையாட்டு’ விளையாடுவோம். மழைகாலத்தில் பூவரசுகளில் மயிர்க் கொட்டிகள் பற்றிக் கொள்வதால் விவசாயக் கிராமங்களிலிருந்து வரும் ‘ரக்டர்காரர்கள்’ விலைபேசி பூவரசுகளை மொட்டையடித்துவிட்டுச் செல்வார்கள். பூவரசுகள் மொட்டயடிக்கப் பட்ட பின்னர் ஊரே வெளிச்சமாகியிருக்கும் வெளிச்சமான அந்தக் கிராமத்தில் வீதியோரங்களில் வெட்டி விடப்பட்ட மழை வெள்ள நீரோட்டத்தில் நாங்களோ முள்முருக்கில் வள்ளங்கள் செய்து போட்டிக்கு ஓடவைப்போம். பூவரசங் ‘குளைவெட்டுக் காலத்தில்’ மீனவர்கள் ‘கண்பார்த்துவைத்த’ நேர்த்தடிகளை ‘மரக்கோல்களுக்கு பாவிப்பார்கள். எனது கிராமத்தின் பிரபல்யமான பூவரசுகள் பலவற்றை நான் அறிந்து வைத்திருந்தேன். எந்தப் பூவரசின் இலையில் குழல் சுருட்டினால் நல்ல சத்தம் வரும் என்று பார்த்திருக்கிறேன். பூவரசம் குழலில் நான் இசைத்த பாடல்களை யாருமே புரிந்து கொள்ளவில்லை என்ற கவலையே எனக்கு அப்போதெல்லாம் இருந்தது. எனக்கு பூவரசுகளுடன் சினேகம் இருந்தபோதும் எங்கள் கிராமத்தின் ‘ராட்ஸஸப் பூவரசு’ ஒன்று எனக்கு அச்சம் தரக்கூடியதாக இருந்தது. அது எங்கள் கிராமத்தின் முன் மூலையில் நின்றது. அந்த மரத்தின் வெடித்தபட்டைமேனியில் நான் பேயின் உருவத்தை கற்பனை செய்து வைத்திருந்தேன். அந்த மரம் நான் பிறப்பதற்கு முன்னரே அங்கு நின்றது. நான் அறிந்து துழிர்த்து வளர்ந்த மரங்கள் சில காய்ந்து பட்டுப் போகும் போதெல்லாம் இந்த மரம் மட்டும் இப்படி முற்றி முறுகி வளர்கிறதே இதன் வளர்ச்சிக்குள் இருக்கும் இரகசியம் என்ன? எந்த சக்தி இதனை வளர்க்கிறது என்று யோசிப்பேன்…. தடித்துப் புகை பிடித்த இலைகளோடு அது வளர்ந்தபடியே இருக்கிறது…. ஒருநாளும் அதன் இலைகளில் நான் இசைமீட்ட விரும்பியதில்லை ஏனெனில் அது ‘சுடுகாட்டு மரம்’. என் பிரியமான குழந்தையே / எனது மண்ணின் சுடுகாட்டு மரங்கள் மட்டும் ஏனிப்படி நீண்டு வளர்கின்றன?………………………….. அவற்றின் கிளைகளில் குடிகொண்டு பேய்கள் மீட்டும் அபஸ்வரங்கள் ஏனிவ்வளவு உயர்ந்த ஸ்தாயியில் கேட்கின்றன……. பாவம் நீ/ உன்னிடம் நான் எதையும் கேட்கவில்லை… அந்தப் பூவரசின் அடியில் இரவுகளில் எரிந்துகொண்டிருக்கும் சென்னிறத்தீயை பலமுறை கண்டிருக்கிறேன். அது நெருப்புக்குள்ளேயே வித்தியாசமான நெருப்பு. 00 அந்தச் சுடுகாடு எங்கள் கிராமத்தை ஒட்டி இருந்தாலும் அது எங்கள் கிராமத்து மக்களின்மீது ஒடுக்குமுறையை மேற்கொண்ட அயலூர் உயர் குடியினர் என்று சொல்லப்பட்ட மக்களினுடயதாக இருந்தது.வறுமைப்பட்டிருந்த எங்கள் கிராமத்தின் சனங்களை வைத்தே அவர்கள் தங்கள் சுடுகாட்டிற்கான பாதையையும் போட்டார்கள். அங்கு வேலை செய்தவர்களுக்கு அவர்கள் ‘ மீன் பேணிகளைக்” கொடுத்தார்கள். அந்த வீதி என் கிராமத்தை குறிச்சி பிரித்து முடக்கவே என்கின்ற உண்மை தெரிவதற்குள் காலம் எத்தனையோ சூட்சிகளைச் செய்துவிட்டது………. அந்த ‘ராட்ஸஸமரம் ‘ அங்கேயே நிற்க நாங்கள்மட்டும் இடம் பெயர்ந்துவிட்டோம். என் பிரியமான குழந்தையே/ இவ்வாறான ஒடுக்குமுறைகளை எதிர்த்த ஒருவர் எங்கள் கிராமத்தில் இருந்தார். அவர் சாதாராணமான ஒருவரில்லை. ‘வார்த்தைகளைக் கோர்த்து மெட்டுக்கட்டி மேடைகளை ஆண்ட ஓர் மகா கலைஞன்’ ‘ மடுத்தீஸ்’ என்ற அவர் பெயருக்கு முன்னோ,பின்னோ எந்தப் பட்டங்களும் இருந்ததில்லை. பட்டங்களைக் கடந்த மனிதர்களில் அவரும் ஒருவர். பெரும்பாலான மேடைகளில் ‘மடுத்தீஸ் ‘ கோமாழி வேடமிட்டே வருவார். எப்போதுமே கூத்துப் பிரதியையும் தாண்டி நிற்கும் அவரது நகைச் சுவைக் கதைகள் இடங்களையும், காலத்தையும் இணைக்கும் சந்திகளகவே அமைந்திருப்பது வளக்கம். ஸ்பானிய அரசி நீராடிவிட்டு வரும்போது யாழ்ப்பாணத்து மடுத்தீஸ் நடு உச்சி கிளித்து ‘பவுடர்’ போட்டுக் கொண்டு ‘மானா மடுத்தீசுக்கு சூனா சுகமில்லை’ என்று பாடிய படியே வருவார். மடுத்தீஸ் மேடையில் தோன்றுகிறார் என்றால் அவரது மச்சாள்மாரின் முகங்களில் வெட்கம் வெண்ணையைப் போலத் திரண்டு வரத் தொடங்கிவிடும். மடுத்தீஸோ தன் மச்சாள்மாரின் பெயர்களை காட்சிகளுக்குள்ளும்,பாடல்களுக்குள்ளும் சொருகி மெட்டுக் கட்டத் தொடங்கிவிடுவார். அது உள்ளூர அவர்களுக்குள் ஓர் இன்பத்தைத் தோற்றுவிக்கும். என் பிரியமான குழந்தையே/ கடலில் மீன்களைத் துரத்திச் செல்லும் மனிதர்களை நீ கண்டிருக்கிறாயா? காடனும்,கயலும்,சிறையாவும், மணலையும், திருவனும்,முரலும் – ‘ஏழாத்துப்பிரிவு’ நீர் குவியும் கடலில் குருத்துக் கயிற்றுடன் பதுங்கியோடிவரும் மடுத்தீஸைக் கண்டு பயந்தன. பெரியபாரும், புளியடிப்பாரும், நாவட்டக் கல்லும் அவருக்குப் பணிந்து நின்றன. சாட்டாமாறுகளையும், அறுகுகளையும்,வாட்டாளை, ஆர்க்குகளையும் அந்தக் கால்கள் பொருட்படுத்தாமல் கடலை அளந்தன. அவர் கடற்குதிரைகளையும், குட்டூறுகளையும் கையிற்பிடித்து அவறிற்கும் கதைகள் சொல்வார்….. நாம் வேண்டுமென்றால் ‘குட்டூறுக்கும் கதை சொன்ன கூத்துக் காரன்’ என்றோர் பட்டம் கொடுக்கலாம் அவருக்கு. அயலூராரின் ஒடுக்கு முறைகளை எதிர்த்தவர்களில் மடுத்தீஸ் பிரதானமானவர். அவர்களை எதிர்த்ததால் எங்கள் கிராமத்தின் தெருவில் முழங்காலில் இருத்தப்பட்டு ஈச்சங்கம்பால் அடிக்கப்பட்டார் அந்த அற்புதமான கலைஞன். ஆயினும் இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அரச பதவியொன்றிலிருந்த பிரபாகரனின் தகப்பனார் வேலுப்பிள்ளையிடம் முறையிடப் பட்டபோது அந்த மனிதர் நீதியின் பக்கம் நின்று எடுத்த முடிவு ஒடுக்கப் பட்ட மக்கழுக்கு ஆறுதலாய் இருந்தது. ஆயினும் மடுத்தீஸ் போன்றவர்களின் மரணத்தின் பின்னும் அந்த ‘ராட்ஸஸ மரம்’ வாழ்ந்துகொண்டே இருக்கிறது. 00 கிராமத்தில் இருந்தபோது நானும் என் நண்பன் ஒருவனுமாக ஓர் இரவு நேரம் அந்தச் சுடுகாட்டிற்குப் போனோம் கையில் கொண்டுபோன ‘காகோலைகளை’ அந்த மரப்பொந்தில் திணித்தோம் கொஞ்சம் மண்ணெண்ணெயை அதன்மேல் ஊற்றியபோது ‘கொள்கலன்’ சுருங்கி விரிந்தது போல எங்கள் இதயங்கழும் சுருங்கி விரிந்தபடி இருந்தன. நாங்கள் நெருப்பு வைத்தபோது காகோலை சடசடக்க .மரத்திலிருந்த பறவைகள் கீசிப் பறக்க, குதிகால் குண்டியில்முட்ட ஓடி வீட்டிற்கு வந்தோம். எனக்கோ இரவிரவாக நித்திரை இல்லை கண்களை மூடினால் பேய்கள் வந்து கதவைத் தட்டுகின்றனவோ என்ற பயம். கடற்காகங்கழுக்கு வவ்வால்சிறகு முளைத்த கனவு…… ஓ கடவுளே காப்பாற்றுங்கள் என்று முணுமுணுத்தபடியே படுத்திருந்தேன். விடிந்தெழும்பி நண்பனிடம் போனால் அவன் ‘குலப்பன் காய்ச்சலுடன்’ வாய்புலம்பிக் கிடந்தான். நானோ சிறிது தூரம் நடந்துபோய் அந்த ‘ராட்சஸ மரத்தைப்’ பார்த்தேன் அது ஓர் அரக்கனைப்போல நிமிர்ந்து நின்றது. ”நாம் இந்தச் சுடுகாட்டு மரங்களை இல்லாது செய்ய ஒரு பெரும் தீயை மூட்ட வேண்டும்” என்று நினைத்துக் கொண்டேன். இப்படியாக என் பிரியமான குழந்தையே/ ஒடுக்கப்படும் மக்களின் கதைகள் நீண்டுகொண்டே வருகின்றன. என்றபடி நடந்துகொண்டிருந்தான்……………………………. 00 மீண்டும் குரல் அவனை அழைத்தது….. ஓ மாணங்கி எங்கே நிற்கிறாய்? நடந்து கொண்டிருக்கும் கதைக்கு நடுவில்? கதையில் இப்போ ‘ அனாதையாய் உலகின் முற்றத்தில் விடப்பட்ட குழந்தையொன்றும் வருகிறது…. அதை தோழில் தூக்கிக் கொண்டு நடக்கிறேன் வர வர குழந்தையின் கனமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது…………….. சரி, சரி வந்து சேர்….. மாணங்கி குரல்வந்த இடத்தை அடைந்தபோது ‘ஆறு பெருக்கெடுத்திருந்தது’ மனசிலும் தண்மை……../ சிறிது அமைதியின் பின்னர் மாணங்கிதான் வாய் திறந்தான். உன்னோடு பேச வேண்டும்போல இருந்தது… நடந்து வந்தேன்…. நான் நடக்க நடக்க வார்த்தைகள் கொட்டுண்டு போயின. இப்போ உன்னிடம் பேச வார்த்தைகள் எவையும் இல்லை ஆதலால் நான் எனது பயணத்தை தொடரவேண்டி இருக்கிறது. ஆயினும் என்னால் இனி நடக்க முடியவில்லை ஏனெனில் நான் வார்த்தைகளாலேயே நடந்து வந்தேன். இப்போது நான் பேருந்திலேறிப் புறப்பட நீயே 3.00 டோலர்கள் தரவேண்டும்… ஆயினும் அவை என் வார்த்தைகளின் பெறுமதியென்று நினைத்து விடாதே….. நான் பேருந்தில் இருக்கும்போது எனக்குள் வார்த்தைகள் சுரந்தால் மீண்டும் நடக்கத் தொடங்கி விடுவேன் . இனி வரும் எனது நடை ‘ மஹா சக்தி ‘ ஓம் அவளை நோக்கியதாகவே இருக்கும். என்றான்…….. குரல் சிரித்தது தன்னிடமிருந்த 3.00 டொலர்களை ‘அருளியது’ பின்னர் குழந்தையின் முதுகிலிருந்த தழும்பைப் பார்த்துவிட்டு ‘ அடடா இது உனது முதுகிலிருக்கும் தழும்பைப் போலல்லவா இருக்கிறது” என்றது. மாணங்கி தன் முதுகைப் பார்த்தபோது குழந்தை மறைந்துபோனது.

Comments are closed.