நாங்கள் அவர்கள்

Nov 29th, 2010 | எழுத்தாளர்: | பகுப்பு: இதழ் 33, கட்டுரைகள்

அம்மா, அப்பா, நான்
அக்கா, தம்பி, சித்தி
நாங்கள் எல்லாம் நாங்கள்.

அலைக்கு அப்பால் வாழும்
அந்த, இந்த ஆட்கள்…
அவர்கள் எல்லாம் அவர்கள்.

ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பு,நாங்கள் அவர்கள் என்னும் தலைப்பில் கிப்ளிங் (Rudyard Kipling,18651936) எழுதிய ஒரு கவிதையின் தொடக்கம் (மேலே எழுந்தமானமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது). ஓர் உலகளாவிய உண்மையை அவர் இங்கு உணர்த்தியிருக்கிறார். எனினும், அனைத்துத் தரப்பினரையும் விளித்து அவர் இதனை எடுத்துரைக்கவில்லை. தம்மவரை (பொதுவாக, மேல் நாட்டவரை, குறிப்பாக பிரிதானியரை) விளித்தே அவர் இப்படி எழுதி யிருக்கிறார். தமிழ் இலக்கிய வழக்கில் இந்தப் பாகுபாடு “எனப்படுவதுண்டு.

தனியொருவர் தன்னைப்பற்றி தம்பட்டம் அடிப்பது, உலகத்தால் பெரிதும் வெறுக்கத்தக்க ஒன்றாகவே கருதப்படுகிறது. எனினும், ஒரு குழுமம் அல்லது சமூகம் அல்லது இனம் அல்லது நாடு தம்மைப் பற்றி தம்பட்டம் அடிப்பது அதே குழு மத்தால், சமூகத்தால், இனத்தால், நாட்டால் பெரிதும் மெச்சப்படுகிறது. வியந்து நயக்கப்படுகிறது. நான் தற்பெருமை கொள்ளக்கூடாது, ஆனால் நாங்கள் தற்பெருமை கொள்ளலாம். நான் அவரை வெறுக்கக்கூடாது, ஆனால் நாங்கள் அவர்களை வெறுக்கலாம். நான் தன்னந்தனியனாய் நின்று வீம்பு பேசக்கூடாது. ஆனால் நாங்கள் ஆளும் பேருமாய்க் கூடி நின்று வீம்பு பேசலாம் இவ்வாறு, “நாங்கள்’ புரியும் அநியாயத்தை” அவர்களை’க் கொண்டு நியாயப்படுத்துகிறோம்!

“நாங்கள் அவர்கள்’ என்னும் பாகுபாட்டுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு: 1652 முதல் (தென்) ஆபிரிக்கரை (Africans) அடிமை கொண்ட ஐரோப்பியர் தங்களுக்கு Afrikaners என்று பெயர் சூட்டி, அத்தகையபாகுபாட்டை நிலைநாட்டினார்கள். 1492 தொட்டு அமெரிக்க கண்டத்தை அபகரித்த ஐரோப்பியர் (ஒரு படி மேலே ஏறி)தங்களையே “அமெரிக்கர்’ என்றும், அமெரிக்க மண்ணின்மைந்தர்களை (செங்குடி மக்களை) “காட்டுமிராண்டிகள்’ என்றும் பாகுபடுத்தினார்கள்.

அத்தகைய “காட்டுமிராண்டிகளால்’ கட்டியாளப்பட்ட அரசுகளுள் ஒன்று: இங்கா பேரரசு (Empire of Inca). அதன் இறுதி மாமன்னன் அதாவுலப்பா Atahullapa 1532&1533) மிகவும் நாகரிகமான முறையில் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டான்!கொல்லுவித்தவன்: இஸ்பானிய நாடுபிடிகாரன் பிசாறோ ((Francisco Pizarro 1478&1541). பிசாறோவின் கையாட்களுள் ஒருவன், இறக்குந்தறுவாயில் தன் உள்ளச் சுமையைக் கொட்டி, இஸ்பானிய மன்னன் பிலிப்புக்கு (Philip II 1554&1598) எழுதிய மடல்: “”திருடர்களோ, கயவர்களோ, வீணர்களோ இல்லாத நிலையிலேயே இந்ந நாடுகளை நாங்கள் கண்டோம் என்பதை மாட்சிமைதங்கிய கத்தோலிக்க மாமன்னர் அறியக் கடவர். அத்துணை மதிநலம் படைத்த இம்மண்ணின் மைந்தர்களை நாங்கள் உருமாற்றிவிட்டோம். அன்று இங்கு தீவினை இல்லை. இன்று இங்கு நல்வினை இல்லை (Ronald Wright, What is America? Random House, Canada, 2008, p.34).

யூத மதநூல்களும், கிறிஸ்தவ மத நூல்களும் பிற மதத்தவர்களை முறையே பிறத்தியார் (ஞ்ஞுணtடிடூஞுண்) என் றும், அஞ்ஞானியர் (gentiles) என்றும் குறிப்பிட்டுள்ளன. அப்புறம் “அவிசுவாசிகள்’ (pagans) என்னும் சொல்லை எடுத்தாள்வதில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய தரப்புகளிடையே யூத மதநூல்களும், போட்டி ஏற்பட்டதாகத் தெரிகிறது. Oxford அகராதியில் காணப்படும் விளக்கத்தின்படி, கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை இஸ்லாமியரே ‘அவிசுவாசிகள் ’. இஸ்லாத்தைப் பொறுத்தவரை கிறீஸ்தவரே “அவிசுவாசிகள்’. யூதரைப் பொறுத்தவரை “பிறத்தியார்’ அனைவருமே “அவிசுவாசிகள்! ’

கிரேக்க வரலாற்றறிஞர் புளூட்டார்க் (Plutarch Q.¤. 46-120),), வாழ்வுகள் (Lives) என்னும் தமது பெயர்போன நூலில் அந்தோனியை (Marcus Antonius – Mark Antony) ஆசியக் கண்டத்தவர் (Asiatik) போன்றவன் என்று குறிப்பிட்டுள்ளார். Asiatik என்பதற்கு florid, indulgent, extravagant, debauched and distasteful…என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது (David Daniell, Introduction to Shakespeare’s Julius Caesar, A&S, London, 2002, p.68) அதாவது ஆசியக் கண்டத்தவர்கள் “பகட்டும், போகமும், ஊதாரித்தனமும், சிற்றின்பவெறியும், அருவருப்பூட்டும் தன்மையும் கொண்டவர்கள்!’ Asiatik என்னும் கிரேக்க வழக்கின் ஆங்கில உருவம் Asiatic. இதனையும் ஒரு பழிச்சொல் என்கிறது Oxford அகராதி. Orientals என்பது சொற்பிறப்பியலின்படி “கீழ்நாட்டவர்கள்’ அல்லது “கீழைத் தேசத்தவர்கள்’ என்ற பொருள்பட்டாலும், அதையும் Oxford ஒரு பழிச்சொல்லாகவே கொள்கிறது. அதன் எதிர்ச்சொல்லாகிய Occidentals கண்ணில் படுவதுமில்லை, காதில் விழுவதுமில்லை! கிரேக்கரும், உரோமரும் பிறரை barbaros (காட்டு மிராண்டிகள்) என்று குறிப்பிட்டு வந்தார்கள். பொதுவாக, கிரேக்க, இலத்தீன் மொழியினர் தவிர்த்த ஏனைய மொழியினர் அனைவரையும், குறிப்பாக எகிப்தியரையும், பாரசீகரையும், பினீசியரையும் அவர்கள் “காட்டுமிராண்டிகள்’ என்று குறிப்பிட்டார்கள். இதுவே barbarian, barbaric, barbarism, barbarity, barbarize, barbarous ஆகிய ஆங்கிலச் சொற்களின் தோற்றுவாய். அதேவேளை கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹோமர் ((Homer), கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேல்ஸ் (Thales) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிதாகரஸ் (Pythagoras), கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளேட்டோ ((Plato) எவருமே “காட்டுமிராண்டிகள்’ என்னும் சொல்லாட்சியை ஏற்றுக் கொள்ள வில்லை. ஹோமரைத் தவிர மற்றைய அனைவரும் எகிப்து சென்று கல்வி கற்றதுண்டு. (அவர்கள் எகிப்தியரை”காட்டுமிராண்டிகள்’ என்று கொள்வது எங்ஙனம்?) எனினும் கி.பி.529ஆம் ஆண்டு உரோம மாமன்னன் யஸ்டினியன் (Justinian கி.பி. 527&565) “அஞ்ஞான மெய்யியலுக்கு’ (pagan philosophy)) விதித்த தடையுத்தரவு, ஓராயிரம் ஆண்டுகளாக ஓங்கிய முறைசார் கிரேக்க மெய்யியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது!

ஆரியர் ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் மேல்மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய அந்நியர் என்று வரலாறு கூறுகிறது. மனுவின் நிலைப்பாடோ அதற்கு நேரெதிர்மாறானது: “ஆரியர் அல்லாதோர் காட்டுமிராண்டி மொழிகளைப் பேசினால் என்ன, ஆரிய மொழிகளைப் பேசினால் என்ன, அவர்கள் அனைவரும் அந்நியராகக் கொள்ளப்படல் மரபு’ (மனுநீதி 10:45). ஏனெனில், ஆரியர் அல்லாதோரும், வடமொழி பேச முடியாதவர்களும் மிலேச்சர்கள் ஆவர் (10:23).

ஆரியர் என்பதற்குத் “தூயவர்’ என்று பொருள் கொள்ளும் மனு, ஆரியர் அல்லாதோரை “தஸ்யூ’ என்றும் குறிப்பிடுகிறார். “தஸ்யூ’ என்பது ஆங்கிலத்தில் aliens என்று பெயர்க்கப்பட்டுள்ளது ((Wendy Doniger, The Laws of Manu, Penguin Books, London, 1991, p.113). அந்த “அந்நியருள்’ அடங்குவோர் யார் என்னும் வினாவுக்கு மனு தரும் விடை: “தெற்கர் (10:22), மிலேச்சர் (10:23), சோழர் (10:44), காட்டுமிராண்டிகள், பிசாசுகள், அடிமைகள், கொலைஞர், கொள்ளையர், சண்டாளர், தீண்டத்தகாதவர்.’

மனுநீதியால் ஆட்கொள்ளப்பட்ட மேல்நாட்டு மெய்யியலாளர்களுள் தலையாயவர்: நீட்சே (Nietzsche 1844&1900).). மனு இவ்வுலக வாழ்வியலை குறிப்பாக, அன்றாட வாழ்வியலை வகுத்துக் கொடுத்த விதம், நீட்சேயைப் பெரிதும் கவரவே செய்தது. மனுநீதிக்கு, விவிலியம் ஈடாகாது என்றும் நீட்சே அடித்துக் கூறியுள்ளார். நீட்சேயின் எழுத்துகள் ஹிட்லரை ஈர்த்ததாகவும், அவற்றின் பிரதிகளை அவர் (ஹிட்லர்) முசோலினிக்கு வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

ஒருபுறம், நீட்சே, மனுநீதியைச் சரிவரமட்டுக் கட்டியிருக்கலாம். மறுபுறம் ஹிட்லரும், முசோலினியும் நீட்சேயைத் தவறாக மட்டுக் கட்டியிருக்கலாம். எவ்வாறாயினும், மக்களாட்சிவாதிகளையும், பொதுவுடைமைவாதிகளையும் யூதரையும், நாசிச, பாசிசவாதிகள் கோடிக்கணக்கில் தீர்த்துக் கட்டியதில் விந்தை இல்லை.

கந்தபுராணம் ஒரு பேரண்டப் போரை எடுத்தியம்புகிறது. அது, முருகன் தலைமையில் தேவர்களுக்கும், சூரன் தலைமையில் அசுரர்களுக்கும் இடையே நிகழ்ந்த போர்! இராமாயணத்தைப் பொறுத்தவøμ இராமன் விஷ்ணுவின் அவதாரம், ஈழவேந்தன் இராவணனோ அரக்கன். அது அவதார புருஷர்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையே இடம்பெற்ற போர்!

அடிப்படையில், ஓர் உள்நாட்டுப் போரை எடுத்துரைக்கும் மகாபாரதத்தின் கருவூலமாக விளங்கும் பகவத் கீதையிலும் அதே பாகுபாடு முன்வைக்கப்பட்டுள்ளது: குருசேத்திரத்தில் தன் குருவரையும், குடும்பத்தவரையும், நண்பர்களையும் எதிர்கொள்ளும் அருச்னன் திடீரென நிலைகுலைந்து புலம்புகிறான்: “..போரினால் நன்மை விளையப் போவதுமில்லை, என்னால் போரில் வென்று வாழவும் முடியாது. என் குடும்பத்தவர்களும், நண்பர்களும் எனக்குக் கெடுதிநினைத்தாலும், என்னால் அவர்களைக் கொல்ல முடியாது. போரில் எஞ்சுவது அழிவும், அனாதைக் குழந்தைகளுமே..’

கிருஷ்ணன் குறுக்கிட்டு, “உள்ளம் விழுமிய ஆரியனே!’ என்று அருச்சுனனை விளித்து இடித்துøμக்கிறான்: “தற்பெருமை, இறுமாப்பு, முரட்டுத்தனம், அறியாமை கொண்ட அசுரகளே கௌரவர்கள். எது செய்யவேண்டும், எது செய்யக்கூடாது என்பது அசுரர்களுக்குத் தெரியாது. தூய்மையோ, வாய்மையோ, நன்னடத்தையோ அற்றவர்கள் அசுரர்கள்..’

பாண்டவர்களும், கௌμவர்களும் ஒன்றுவிட்ட சகோதரர்கள். எனினும் கிருஷ்ணனோ பாண்டவர்களை ஆரியர், அறவோர், அவதார புருஷர் என்றும், கௌரவர்களை அசுரர்கள் என்றும் பாகுபடுத்துகிறான்! எதற்காக இந்தப் பாகுபாடு? அருச்சுனனைப் போராட ஏவு வதற்காக! “மறவனே நீ தயங்காதே! நீதிக்காகவே போராடுகிறாய். போரிடுவது மறவர் பணி. போராடாவிட்டால், மானம் கெடுவாய். உன் பேடிமை நிலைக்கும். இறப்பைவிட மோசமானது இகழ்ச்சி. மறம்புரிய உனக்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணி இன்புறு. விளைவுகளைப் பொருட்படுத்தாது போரிடு. களத்தில் மாண்டு சுவர்க்கம் செல் அல்லது போரில் வென்று உன் அμசை மீட்டுக்கொள். அறப்போரில் வெற்றி மட்டுமே கிட்டும்..’

ஒரு தடவை மாமன்னன் அலெக்சாந்தர் (ஆட்சிக்காலம்: கி.மு.336-323) முன்னிலையில் ஒரு கடற்கொள்ளையன் நிறுத்தப்பட்டான். அவனிடம், “கடற்சூறையாட உனக்கென்ன துணிச்சல்?’ என்று கேட்டான் மாமன்னன். அதற்குக் கடற்கொள்ளையன் கொடுத்த பதிலடி: “உலகத்தைச் சூறையாட உமக்கென்ன துணிச்சல்? என் கப்பல் சிறியது. அதனால் என்னை ஒரு கடற்கொள்ளையன் என்று சொல்லுகிறார்கள். உம்முடையதோ மாபெரும் கடற்படை. அதனால் உம்மை ஒரு மாமன்னன் என்று சொல்லுகிறார்கள். ஆனால் நீர் முழு உலகத்தையுமே சூறையாடுகிறீர். உம்முடன் ஒப்பிடுமிடத்து, நான் எங்கே?

மேற்படி சம்பவத்தைச் சுட்டிக்காட்டும் நோம் கொம்ஸ்கி, “அதெல்லாம் அப்படித்தான் நடக்கும். மாமன்னன் உலகத்தைச் சூறையாடலாம். எனினும் கடற்கொள்ளையனே மாபெரும் குற்றவாளியாகக் கொள்ளப்படுவான்!’ என்று சீறுகிறார். அவருடைய நூலின் தலைப்பில் அவர் சீற்றம் புலப்படுகிறது: ‘நாங்கள் சொல்வது செல்லும்’ (Noam Chomsky, What We Say Goes, Metropolitan Books, New York, 2007).

சின்ன மீன் பெரிய மீனுக்கு இரையாகுவதை கௌடில்யர் (கி.மு.350-283) ‘மச்சநியாயம்’ என்று குறிப்பிட்டுள்ளார் ( ‘அர்த்த சாத்திரம்’ – 1413). அதற்கு நேரொத்த ஆங்கிலப் பழமொழி: Might is right. எனினும், கிரேக்க மொழியே இதன் தோற்றுவாய் என்று தெரிகிறது. Thrasy machus (கி.மு.459-400) என்னும் ஆசான் சாக்கிரட்டீசுடன் வாதிடும் வேளையில் Might is right என்னும் கூற்றை முன்வைத்த்தாக பிளேட்டோ குறிப்பிட்டுள்ளார் (Plato, Republic 1&338).

இனி நாம் விடை காணவேண்டிய வினா: “அவர்களை’ அசுரர்கள், அரக்கர்கள், மிலேச்சர்கள், சண்டா ளர்கள், தீண்டத்தகாதவர்கள், காட்டு மிராண்டிகள், அவிசுவாசிகள், எதிர்ப் புரட்சியாளர்கள், பயங்கரவாதிகள், தீவிர வாதிகள்… என்றெல்லாம் “நாங்கள்’ சாடுவது எதற்காக?

ஒன்றில் அவர்களை அழித்தொழிப்பதற்காக அல்லது அவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக: அவர்களுடைய நிலபுலங்களை அபகரிப்பதற்காக, அவர்களுடைய வீடுவளவுகளைச் சுவீகரிப்பதற்காக, அவர்களுடைய பொருள்வளத்தைச் சூறையாடுவதற்காக, அவர்களுடைய சமூகக் கட்டுக்கோப்பினைத் தகர்ப்பதற்காக, அவர்களுடைய மக்களாட்சி உரிமைகளை மறுப்பதற்காக, அவர்களுடைய மனித உரிமைகளை மீறுவதற்காக. அவர்களை விசாராணையின்றி அடைத்துவைப்பதற்காக, அவர்களைக் கொன்று குவிப்பதற்காக, அவர்களுக்கு நீதியோ நியாயமோ வழங்கும் கடப்பாட்டிலிருந்து தப்புவதற்காக, அவர்களுக்கு வெளியுலக ஆதரவு கிடைப்பதைத் தடுப்பதற்காக, ஊடகங்களை வெருட்டுவதற்காக, வெளியுலகத்தை மிரட்டுவதற்காக,மனித உரிமை அமைப்புகளை விரட்டுவதற்காக, அதாவது: “நாங்கள் அவர்களுக்கு’ இழைக்கும் அநீதிகளை நியாயப்படுத்துவதற்காகவே “நாங்கள் அவர்களை அசுμர்கள்… என்றெல்லாம் சாடி வருகிறோம்.

நாங்கள்அவர்கள் என்னும் பாகுபாடுவென்றோர் நீதி (victor’s justice) என்னும் அநீதிக்கு இட்டுச்செல்லல் திண்ணம். அதற்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு, கொலம்பசின் (Christopher Columbus 1451-1506) வழித் தோன்றல்களால் கொன்றொழிக்கப் பட்டகாட்டுமிராண்டிகள். அவர்களின் தலைமகன் சியாட்டில், (Seattle 1786 – 1866), தோல்வியின் விளிம்பில் நின்று ஆற்றிய வரலாற்றுப் புகழ்வாய்ந்த உரையில்”நாங்கள்’ கொண்ட வாழ்வியலையும், “அவர்கள்’ கொண்ட வாழ்வியலையும் ஒப்பிட்டுக் காட்டியுள்ளான்:

“எங்கள் நிலத்தைத் தாங்கள் வாங்க விரும்புவதாக வாசிங்டனிலிருந்து பெருந்தலைமகன் சேதி அனுப்பியிருக்கிறார் வானத்தையும், நிலத்தின் நேயத்தையும் எப்படி உங்களால் வாங்கவோ, விற்கவோ முடியும்? எங்களுக்கு இது ஒரு விசித்திரமான எண்ணமாகவே தென்படுகிறது. காற்றின் தூய்மையும், நீரின் பளபளப்பும் எங்கள் சொத்துகள் ஆகா என்றால், அவற்றை எப்படி உங்களால் வாங்க முடியும்? எனது மக்களைப் பொறுத்தவரை இந்த மண்ணின் ஒவ்வொருறும் புனிதமானது. சவுக்கு மரத்தில் ஒளிரும் ஊசி இலை ஒவ்வொன்றும், மணலோரம் ஒவ்வொன்றும், இருண்ட தோப்புகளைச் சூழும் புகார் ஒவ்வொன்றும், வெட்டை வெளி ஒவ்வொன்றும், இரைந்து திரியும் புழுபூச்சி ஒவ்வொன்றும் எனது மக்களின் உள்ளத்திலும் அனுபவத்திலும் ஒரு புனிதச் சின்னமாய் பதிந்துள்ளது. “மரங்களில் உள்ளூரப் பாயும் சாறு’கூட செங்குடி மக்களின் நினைவை ஏந்திச் செல்கிறது.’

“எம்மவர்கள் இறந்தாலும், இந்த அழகிய நிலத்தை மறக்கப் போவதில்லை. ஏனெனில், இது செங்குடிமக்களின் தாய்நிலம், நாங்கள் இந்த நிலத்தின் அங்கம், இந்த நிலம் எங்கள் அங்கம். நறுமண மலர்கள் எங்கள் சகோதரிகள். மானும், குதிøμயும், மாபெரும் கழுகும் எங்கள் சகோதμர்கள். பாறைச் சிகμங்கள், பசும் புல்வெளிகள், மட்டக்குதிரையின் உடற் சூடு, மனிதர் எல்லாத் தμப்புகளும் ஒரே குடும்பத்தின் அங்கங்கள். எனவே, எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாக வாசிங்டனிலிருந்து பெருந்தலைமகன் சேதி அனுப்பும்பொழுது, அவர் எங்களிடம் நிறையவே கேட்கிறார்.

“இது எங்கள் புனித நிலம். ஆறுகளிலும், ஓடைகளிலும் ஒளிவீசிப் பாயும் இந்த நீர் வெறும் நீரல்ல, இது எங்கள் மூதாதையரின் குருதி. நாங்கள் இந்த நிலத்தை உங்களுக்கு விற்றால், இது புனிதமான நிலம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இது புனிதமான நிலம் என்பதையும், ஏரிகளின் தெளிந்த நீரில் புலப்படும் சாயை ஒவ்வொன்றும் எங்கள் மக்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொண்ட நிகழ்வுகளையும், நினைவுகளையும் இயம்புவன என்பதையும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் புகட்ட வேண்டும்.’

“இந்த நீரின் சலசலப்பில் எனது பாட்டனாரின் குரலை நான் செவிமடுக்கின்றேன். இந்த ஆறுகள் எங்கள் சகோதμர்கள். எங்கள் விடாயை அவை தீர்ப்பவை, எங்கள் படகுகளை ஏந்திச் செல்பவை, எங்கள் பிள்ளைகளை ஊட்டி வளர்ப்பவை. நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், இந்த ஆறுகள் எங்கள் சகோதரர்கள் உங்கள் சகோதரர்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதனை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் புகட்ட வேண்டும். ஒரு சகோதரனுக்கு நீங்கள் காட்டும் அதே கனிவை, இந்த ஆறுகளுக்கும் நீங்கள் காட்ட வேண்டும்.’

‘காலையில் எழும் கதிμவனைக் கண்டு, மூடுபனி மலைகளைவிட்டு ஓடுவது போல, முன்னேறிவரும் வெள்ளையரைக் கண்டு, செங்குடி மக்கள் என்றுமே பின்வாங்கி வந்திருக்கிறார்கள். எனினும், எங்கள் தந்தையரின் சாம்பல் புனிதமானது. அவர்களுடைய இடுகாடுகள் எங்கள் புனிதவலயங்கள். இவை எங்கள் புனிதமான குன்றுகள், மரங்கள், நிலபுலங்கள்.’

எங்கள் போக்கு வெள்ளையருக்குப் புரியாது என்பது எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு முன்பின் தெரியாத வெள்ளையர், இரவில் இந்த நிலத்துக்கு வந்து, தங்களுக்கு வேண்டியதை எடுத்துச் செல்வர். ஆதலால் அவர்களுக்கு ஒரு நிலபுலமும், அடுத்த நிலபுலமும் ஒன்றே. நிலம் அவர்களுக்கு சகோதμன் அல்ல. நிலம் அவர்களுக்கு எதிரி. அதனைக் கைப்பற்றிய பிறகு அவர்கள் அப்பால் நகர்கின்றனர். தமது தந்தையரின் இடுகாடுகளைப் பொருட்படுத்தாது, கைவிட்டுச் செல்கின்றனர். தமது தந்தையரின் இடுகாடுகளையும், தமது பிள்ளைகளின் பிறப்புரிமையையும் அவர் கள் மறந்துவிடுகின்றனர். தமது தாய் நிலத்தையும், சகோதர வானத்தையும் ஆடுகளைப்போல் அல்லது ஒளிரும் மணிகளைப் போல் வாங்கியோ, கொள்ளையடித்தோ, விற்கும் பண்டங்களாகவே அவர்கள் கருதுகின்றனர். அவர்களின் பசி, நிலத்தை விழுங்கி, வெறும் பாலைவனத்தையே ஈயும். எனக்குத் தெரியாது. எங்கள் போக்கு, உங்கள் போக்கிலிருந்து வேறுபட்டது.’

“உங்கள் நகரங்களைக் காண்பதே எங்கள் கண்களைப் புண்படுத்துகிறது. செங்குடிமக்கள் வெறும் காட்டுமிராண்டிகள் என்பதால், அவர்களுக்கு எதுவும் புரியாது என்பதால், அப்படி நேர்கிறது போலும். வெள்ளையரின் நகரங்களில் அமைதிக்கு இடமில்லை. வசந்த காலத்தில் இலைகள் விரிவதையோ, புழுபூச்சிகளின் சிறகுகள் சரசரப்பதையோ செவிமடுப்பதற்கு அங்கு இடமில்லை. நான் ஒரு காட்டுமிராண்டி என்பதால், எனக்கு எதுவும் புரியாது என்பதால் அப்படி நேர்கிறது போலும். உங்கள் நகμத்து இரைச்சல் எங்கள் காதுகளை இகழ்வது போலவே கேட்கிறது. அல்லிப்புள்ளின் ஒற்றைக் கூவலையோ, அந்திப்பொழுதில் ஒரு தடாகத்தைச் சூழும் தவளைகள் புரியும் வாதங்களையோ ஒருவரால் செவிமடுக்க முடியவில்லை என்றால், அவர் வாழ்வில் என்னதான் உண்டு? நான் ஒரு செங்குடி மகன். எனக்குப் புரியவில்லை.’

“ஒரு தடாகத்தின் மேற்பμப்பை வருடிவீசும் காற்றின் மெல்லொலியையும், நண்பகலில் விழும் மழையில் குளித்து வீசும் காற்றின் மணத்தையும் அல்லது சவுக்குமர வாசம் கமழ்ந்து வீசும் காற்றின் மணத்தையுமே செங்குடிமக்கள் நயக்கின்றனர். செங்குடி மக்களைப் பொறுத்த வரை காற்று விலைமதிப்பற்றது. ஏனெனில் மμமும், விலங்கும், மனிதரும் எல்லாத் தμப்புகளும் ஒரே காற்றையே பகிர்கின்றன. வெள்ளையரோ தாங்கள் சுவாசிக்கும் காற்றைக் கவனிப்பதாகத் தெரியவில்லை. எவ்வாறு இறந்து நாட்பட்டு மரத்த ஒருவனுக்கு எதுவுமே மணக்காதோ, அவ்வாறே வெள்ளையருக்கு எதுவுமே மணக்காது. எனினும் நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், எங்கள் காற்று விலைமதிப்பற்றது என்பதையும், தான்துணைநிற்கும் உயிரினங்கள் அனைத்துடனும் தன் உணர்வை அது பகிர்கின்றது என்பதையும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். எங்கள் பாட்டனாரின் முதல்மூச்சை அவருக்கு ஈந்த அதே காற்றே அவருடைய இறுதிப் பெரும்மூச்சையும் ஏந்தியது. எங்கள் பிள்ளைகளுக்கு வாழும் உணர்வை வழங்க வேண்டியது காற்றே. நாங்கள் எங்கள் நிலத்தை உங்களுக்கு விற்றால், நீங்கள் அதனைப் புனித நிலமாக ஒதுக்கிவைக்க வேண்டும். வெள்ளையரை சென்று பசும்புல்வெளி மலர்களின் இனிமை கமழும் காற்றைத் துய்க்கும் இடமாக அதனை நீங்கள் ஒதுக்கிவைக்க வேண்டும்.

“எனவே, எங்கள் நிலத்தை வாங்கும் உங்கள் எண்ணத்தை நாங்கள் கருத்தில்கொள்வோம்.  உங்கள் எண்ணத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டால், நான் ஒரு நிபந்தனை விதிப்பேன்: வெள்ளையர் இந்த நிலத்து விலங்குகளை தமது சகோதரர்களாக நடத்த வேண்டும். நான் ஒரு காட்டுமிμõண்டி. எனக்கு வேறு வழி எதுவும் புரியவில்லை.’

விரையும் தொடருந்திலிருந்து வெள்ளையரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஓராயிரம் எருமைகள் எங்கள் புல் வெளிப்புலத்தில் கிடந்து அழுகுவதை நான் பார்த்திருக்கிறேன். நான் ஒரு காட்டுமிராண்டி. நாங்கள் உயிர் வாழ்வதற்காக மட்டுமே கொன்று, உண்ணும் எருமையைவிட, புகைகக்கும் அந்த இரும்புக் குதிரை எப்படி முக்கிய மானதாய் இருக்கமுடியும் என்பது எனக்குப் புரியவில்லை. விலங்குகள் இல்லையேல், வெள்ளையர் என்னாவது? எல்லா விலங்குகளும் அழிந்தொழிந்தால், மாபெரும் தனிமையுணர்வினால் மானிடர் மாண்டு போவர் அன்றோ! விலங்குகளுக்கு எது நேர்கிறதோ, அதுவே விரைவில் மனிதருக்கும் நேரும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை.’

‘உங்கள் பிள்ளைகள் மிதிக்கும் நிலம் எங்கள் பாட்டன்மாரின் சாம்பலே என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் புகட்ட வேண்டும். இந்த நிலத்தை அவர்கள் மதிக்கும் வண்ணம், இது எங்கள் மக்களின் வாழ்வினால் நிறைந்த நிலம் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். நிலம் எங்கள் தாய் என்று எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் புகட்டியதை, உங்கள் பிள்ளைகளுக்கும் நீங்கள் புகட்டுங்கள். நிலத்துக்கு நேர்வதே நிலத்தின் புதல்வருக்கும் நேரும். நிலத்தில் உமிழும் மனிதர் தம்மீது உமிழும் மனிதரே’

‘நிலம் மனிதருக்குச் சொந்தமல்ல, மனிதரே நிலத்துக்குச் சொந்தம். ஒரே குருதியால் இணைக்கப்பட்ட குடும்பத்தைப் போல, எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. நிலத்துக்கு நேர்வதே நிலத்தின் புதல்வருக்கும் நேரும். வாழ்க்கைவலையை மனிதர் பின்னவில்லை. அந்த வலையில் மனிதர் ஓர் இழை மட்டுமே. அந்த வலைக்கு அவர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே அவர்கள் தமக்குச் செய்கிறார்கள். எனினும், எனது மக்களுக்கு நீங்கள் ஒதுக்கிய புலத்துக்கு நாங்கள் செல்லலாம் என்று நீங்கள் முன்வைத்த எண்ணத்தை நாங்கள் கருத்தில் கொள்வோம். நாங்கள் புறம்பாகவும், அமைதியாகவும் வாழ்வோம். எங்கள் எஞ்சிய நாட்களை நாங்கள் எங்கு கழிப்போம் என்பது அத்துணை முக்கியமில்லை.’

“தங்கள் தந்தையர் தோல்வியுறச் செய்யப்பட்டு, அடிபணிய வைக்கப்பட்டுள்ளதை எங்கள் பிள்ளைகள் கண்டுள்ளார்கள். எங்கள் போராளிகள் வெட்கித் தலைகுனிந்து நிற்கின்றார்கள். தோல்வியை அடுத்து சோம்பித் திரிந்து, இனிக்க உணவுண்டு, வெறிக்க மதுவுண்டு, உடலைக் கெடுத்து, பொழுதைக் கழித்து வருகின்றார்கள்.’

“எங்கள் எஞ்சிய நாட்களை நாங்கள் எங்கு கழிப்போம் என்பது அத்துணை முக்கியமில்லை. அது பல நாட்களுக்குமல்ல. இன்னும் ஒரு சில நாழிகளே. இன்னும் ஒரு சில மாரிகளே. முன்னொரு காலத்தில் உங்களைப் போலவே வலிமையுடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்த ஒரு மக்கள் திரளின் இடுகாடுகளை நினைந்துருகுவதற்கு, அன்று இந்த நிலத்தில் வாழ்ந்த அல்லது இன்று இந்தக் காடுகளில் சிறு குழுமங்களாகத் திரியும் மகத்தான குலத்தவரின் பிள்ளைகளுள் எவருமே எஞ்சப்போவதில்லை. எனினும், எனது குலத்தவர் மறைவதை நான் ஏன் நினைந்துருக வேண்டும்? குலங்கள் மனிதரால் ஆனவை. அவ்வளவுதான். கடலின் அலைகளைப் போல மனிதர்கள் வருவார்கள், போவார்கள்.’

“நண்பருடன் நண்பர் கதைப்பது போல், வெள்ளையரின் கடவுள் வெள்ளையருடன் உலவி, உøμயாடுவதுண்டு. அத்தகைய வெள்ளையர்கூட பொது விதிக்கு விலக்கானோர் அல்லர். எவ்வாறாயினும், நாங்கள் எல்லோரும் சகோதரர்கள் ஆகலாம். பொறுத்திருந்து பார்ப்போம். எங்கள் கடவுளும் அதே கடவுளே. அதனை வெள்ளையர் ஒருநாள் கண்டுபிடிக்கக் கூடும். எங்கள் நிலத்தை நீங்கள் சொந்தமாக்க விரும்புவது போல், கடவுள் உங்களுக்கே சொந்தம் என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் கடவுளை உங்கள் சொத்தாக்க முடியாது. அவர் மனிதரின் கடவுள். அவர் செங்குடியினருக்கும் வெள்ளையருக்கும் சரி நிகராகவே கருணை காட்டுபவர். அவரைப் பொறுத்தவரையும் இது விலைமதிப்பற்ற நிலமே. இத்தகைய நிலத்துக்கு தீங்கு விளைவிப்பது, அதனைப் படைத்தவரை அவமதிப்பதற்கு நிகர். இனி, வெள்ளையர் கூட மறையவே வேண்டும் ஒருவேளை மற்றைய குலத்தவர் அனைவரையும்விட வேகமாக மறையவே வேண்டும். எனினும், நீங்கள் மாளும் வேளையில் ஒளிவீசுவீர்கள் உங்களை இந்த நிலத்துக்குக் கொண்டுவந்து, ஏதோவொரு விசேட நோக்கத்துக்காக, இந்த நிலத்தையும், மக்களையும் உங்கள் ஆட்சிக்கு அடிப்படுத்திய கடவுளின் லிமையால், நீங்கள் மாளும் வேளையில் ஒளிவீசுவீர்கள். அந்த விதி எங்களுக்கு ஒரு புதிதாகவே தென்படுகிறது.

“எருமைகள் எல்லாம் எப்பொழுது கொன்றொழிக்கப்படும், காட்டுக் குதிரைகள் எல்லாம் எப்பொழுது வீட்டுக் குதிரைகளாக்கப்படும், மானுட மணம் கமழும் காட்டின் மூலைமுடுக்குகளும், முற்றிய குன்றுகளின் கண்கவர் தோற்றமும் தந்திக் கம்பிகளால் எப்பொழுது கறைப்படுத்தப்படும் என்பது எங்களுக்குப் ரியவில்லை. புதர் எங்கே? ஒழிந்து போயிற்று. கழுகு எங்கே? ஒழிந்து போயிற்று. வேட்டைக்கும், வேகம் கொண்ட மட்டக்குதிரைக்கும் விடை கொடுப்பது என்பது என்ன? அதுவே வாழ்வின் முடிவு, அதுவே பிழைப்பின் தொடக்கம்.

“எனவே, எங்கள் நிலத்தை வாங்கும் உங்கள் எண்ணத்தை நாங்கள் கருத்தில்கொள்வோம். அதற்கு நாங்கள் உடன்படுவோம் என்றால், நீங்கள் உறுதியளித்த ஒதுக்குப்புலத்தை ஈட்டிக்கொள்வதற்காகவே உடன்படுவோம். ஒரு வேளை, அந்த ஒதுக்குப்புலத்தில் எங்கள் குறுகிய வாழ்நாளை நாங்கள் விரும்பியவாறு கழிக்கலாம். பிறந்த குழந்தை அதன் தாயின் இதயத்துடிப்பை நேசிப்பது போல, இந்த நிலத்தை நாங்கள் நேசிக்கின்றோம்.

“ஆதலால், இந்த நிலத்திலிருந்து இறுதிச் செங்குடிமகன் மறைந்த பின்னரும், எங்களைப் பற்றிய நினைவு என்பது எங்கள் புல்வெளிப்புலத்தைக் கடந்து செல்லும் ஒரு முகிலின் நிழலாய்மாறிய பின்னரும், இந்தக் காடுகளும் நீர்நிலையோரங்களும் எனது மக்களின் ஆவிகளைப் பேணிக் காக்கும். எனவே எங்கள் நிலத்தை நாங்கள் உங்களுக்கு விற்போம். நாங்கள் நேசித்தவாறு அதனை நேசியுங்கள். நாங்கள் பராமரித்தவாறு அதனைப் பராமரியுங்கள். இந்த நிலத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளும்பொழுது, அது எப்படி இருக்கிறதோ, அப்படியே அதனைப் பற்றிய நினைவை உங்கள் உள்ளத்துள் பேணி வைத்திருங்கள். எங்கள் அனைவரையும் கடவுள் நேசிப்பது போல, உங்கள் பிள்ளைகளுக்காக, இந்த நிலத்தை இதயபூர்வமாக நேசித்துப் பேணுங்கள்.’

எங்கள் கடவுளும் அதே கடவுளே. அவரைப் பொறுத்தவரையும் இது விலை மதிப்பற்ற நிலமே. வெள்ளையரும் பொதுவிதிக்கு விலக்காக முடியாது. எவ்வாறாயினும், நாங்கள் அனைவரும் சகோதரர்களாக விளங்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்’ (Seattle 1854).

Tags: , , ,

Comments are closed.