சந்திரன்தான் குற்றவாளி – அ.முத்துலிங்கம்

Mar 15th, 2013 | எழுத்தாளர்: | பகுப்பு: இதழ் 40, பத்தி

சமீபத்தில் நான் ஒரு தகவல் படித்தேன். சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் விபத்துக்கான உண்மைக் காரணத்தை சில வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். காரணம் சந்திரன்தான். சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் வந்திருந்தான். கடந்த 1400 வருடங்களில் சந்திரன் பூமிக்கு ஆகக் கிட்ட வந்தது விபத்து நேர்ந்த வருடத்தில்தான். அத்துடன் பூமியும் அதன் பாதையில் சூரியனுக்கு கிட்டவாக அணுகியிருந்தது. இவை எல்லாம் சேர்ந்து மிகப்பெரிய ஆழி அலைகளை உருவாக்கி அவை என்றுமில்லாத விதமாக பனிப்பாறைகளை உடைத்து தெற்கு நோக்கி நகர்த்தியிருக்கின்றன. கப்பல் பாதையில் மிதந்த பனிப்பாறையில் டைட்டானிக் கப்பல் மோதி 1500 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் சந்திரன்தான் என்று நிபுணர் குழுவின் தலைவர் டொனால்ட் ஒல்சன் அறிவித்திருக்கிறார்.
இதைப் படித்தபோது எனக்கு சில மாதங்களுக்கு முன்னர் படித்த ஜிம் ஹாரிஸனின் Songs of Unreason என்ற கவிதை நூல் நினைவுக்கு வந்தது. அவருடைய ஒரு கவிதை இப்படிப் போகிறது.

சந்திரனைத்தான் சந்தேகிக்கிறேன்
அதனால் என்ன பிரயோசனம்.
வெள்ளைப் புகை வெளிச்சத்தை
அது வீசுகிறது.

இது எனக்கு ஆல்பெர் காம்யுவை நினைவுக்கு கொண்டு வந்தது. அவருடைய அந்நியன் நாவலின் கதாநாயகன் மெர்ஸோ கொலைசெய்துவிட்டு சூரியன்தான் குற்றவாளி என்று சொல்வான்.
ஜிம் ஹாரிஸனின் இன்னொரு கவிதை இப்படியிருக்கிறது.

ஒரேயொரு மேகம்
எதிர் திசையில் நகர்கிறது
ஆகாயத்தில்
ஞாயிறு காலையில்.

அமெரிக்காவின் அரிஸோனா மாநிலத்தில், ஜிம் ஹாரிஸன் என்ற கவிஞர் மற்றவர்கள் இலகுவில் அணுக முடியாத தூரமான வீட்டில், இயற்கைச் சூழலுக்கு மத்தியில் வாழ்கிறார் என்று இவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இவர் ஓர் இயற்கை பிரியர். தள்ளாத வயதிலும் இவர் ரசித்து எழுதுவது இயற்கை பற்றியே. இவருடைய இன்னொரு கவிதை.

ஒக்டோபர் கடைசி
இப்பொழுது நான் கம்பளி தொப்பி அணிகிறேன்.
இரவும் பகலும்,
நாளுக்கு மூன்று தடவை தூங்குகிறேன்.
ஏன் இப்படி நடக்கிறது?
எனக்கு நினைவில் இல்லை,
பூமி அச்சில் சரிந்துபோய்
சுழல்வதால் இருக்கலாம்.
நேற்று 23 சாண்ட்ஹில் நாரைகள்
வடக்கு நோக்கி பறந்தன.
ஏன்?

எல்லா மேகங்களும் ஒரு பக்கம் நகர்கின்றன ஆனால் ஒரேயொரு மேகம் மட்டும் எதிர் திசையில் போகிறது. அது ஏன்? எல்லாப் பறவைகளும் பனிக்கால ஆரம்பத்தில் தெற்கு நோக்கி பறக்கும். ஆனால் இவருடைய நாரைகள் வடக்கு நோக்கி பறக்கின்றன. இது ஏன் என்று மனம் குழம்புகிறார். எங்கேயோ வானவெளியில் 240,000 மைல்கள் தூரத்தில் இருக்கும் சந்திரனை மனம் சந்தேகிக்கிறது. இப்படி இவர் கவிதைகளில் நடக்க முடியாதவை நடந்தபடியே இருக்கின்றன.
அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெய்ன் ஒரு முறை இப்படி எழுதினார். ‘கடந்த இரவு சந்திரன் சறுக்கிக் கொண்டு கீழே விழுந்து மறைந்தது.’ கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் சந்திரனை விட்டு விலகமுடியாது போல. இன்னொரு கவிதையில் ஜிம் ஹாரிஸன் இப்படி சொல்கிறார்.

பல்கேரியர்கள் சொல்வதுபோல,
சந்திரன்தான் குற்றவாளி.
யோசிக்கும்போது அதுதான் சரி.
சந்திரன் சமுத்திரம் போன்ற வலிய அலைகளால்
என்னை அலைக்கழித்து குற்றம் புரியத் தூண்டினான்.
அவன் பிரம்மாண்டமாய் இருந்தான்.
நான் நிரபராதி.

ஜிம் ஹாரிஸன் கடைசியாக எழுதிய மூன்று கவிதை தொகுப்புகளும் பிரபலமானவை. இவர் எழுதிய இரண்டு நாவல்கள் திரைப்படமாக்கப்பட்டு வெற்றிபெற்றிருக்கின்றன. இவருடைய கவிதை தொகுப்பை படித்துவிட்டு அந்த உத்வேகத்தில் இவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் வரவில்லை. அவருடைய நண்பரிடம் காரணம் விசாரித்தபோது அவர் சொன்னது புதுமையாக இருந்தது. ’அரிஸோனா மாநிலத்தில் ஜிம் இருக்கிறார். அவருடைய உதவியாளர் இன்னொரு மாநிலத்தில். ஜிம்முக்கு கம்புயூட்டர் இயக்கத் தெரியாது. உங்களுடைய மின்னஞ்சல் அவருடைய உதவியாளருக்கு போகும். அவர் அதைக் கையினால் எழுதி உறையிலிட்டு தபால் மூலம் ஜிம்முக்கு அனுப்புவார். ஜிம் படித்துவிட்டு சிலவேளை கையினால் பதில் எழுதுவார். பல சமயம் எழுதமாட்டார். பதிலை அவர் தபாலில் உதவியாளருக்கு அனுப்புவார். உதவியாளர் உங்களுக்கு மறுபடியும் தட்டச்சு செய்து மின்னஞ்சலாக அனுப்புவர். பதில் வர ஆறு மாதம் எடுக்கும்’ என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நவீன தொழில்நுட்பம் அவரை எட்டிக்கூடப் பார்ப்பதில்லை போலிருந்தது.

நண்பர் சொன்னது உண்மைதான். ஜிம்மிடமிருந்து பதில் ஆறு மாதம் கழித்து வந்தது. என்னுடைய முழுப்பெயரான ’அப்பாத்துரை முத்துலிங்கம்’ என்பதை ஜிம் தன் விருப்பத்துக்கு சுருக்கியிருந்தார்.

அன்புள்ள அப்பா,
உங்கள் பெயர் எந்த நாட்டைச் சேர்ந்தது. நீங்கள் இந்தியாவைச் சேர்ந்த இந்தியனா? கடிதங்களுக்கு பதில் எழுதுவதில் நான் திறமைசாலி அல்ல. எனது பணிகளில் மூழ்கிவிடுவதால் இந்த கஷ்டமான காலங்களில் வாழ்வதே பெரும் துன்பமாகிவிட்டது. உங்கள் கடிதம் பரிவான வார்த்தைகள் கொண்ட அழகன கடிதம். இந்த தள்ளாத வயதில் என்னுடைய ஒரே ஆர்வமும் ஆறுதலும் The Logic of Birds and Fishes என்ற சூஃபி நூல்.
உங்களுடைய

ஜிம் இந்தக் கடிதத்தை அவர் கையினால் எழுதி தபாலில் உதவியாளருக்கு அனுப்ப அவர் அதை மின்னஞ்சலாக மாற்றி எனக்கு அனுப்பியிருந்தார்.

எப்பொழுதுமே ஒன்று படிக்கும்போது இன்னொன்று நினைவுக்கு வந்துவிடுகிறது. ஜிம்முடைய கவிதைகளைப் படிக்கும்போது மகிழ்ச்சி கிட்டாது. அதீதமான சோகமும் கிடைக்காது. உங்கள் மனதை அவை அமைதியில்லாமல் ஆக்கிவிடும். காரணம் இல்லாத தவிப்பு ஏற்படும்.

ஒரு நாள் நாரை ஒன்று
கதவுக் கண்ணாடியில் எட்டிப் பார்த்தது.
அது நாரையா?
அதனுடன் இன்னும் ஏதோவும்
நின்றதா?

இதைப் படித்தவுடன் மனுஷ்ய புத்திரனின் கவிதையொன்று ஞாபகத்துக்கு வந்தது.

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டாயா?
எனக் கேட்டபடி
எதையோ முடிவற்று
தேடிக்கொண்டிருந்தாய்.

இரண்டு கவிதைகளும் எதையோ தேடின? என்னவென்பது தெரியாது. கவிஞர்கள் பாதிக்காட்சியை காட்டிவிட்டு நிறுத்திவிடுகிறார்கள். சங்கிலியை கதவில் கொழுவியபடி கதவை கொஞ்சம் திறப்பதுபோல. நீக்கல் வழியாக ஏதோ தெரிகிறது, ஆனால் முழுவதும் தெரிவதில்லை. கவிதை முடிந்தாலும் உங்கள் மனம் தேடுவதை நிறுத்துவதில்லை.
ஜிம் ஹாரிசனுடைய உவமைகளும் சில இடத்தில் பிரமிப்பூட்டும். ஒரு கவிதையில் இப்படி சொல்கிறார்.

கொன்று தின்னும்
சிறு விலங்கின்
பழுதாய்ப்போன பற்கள் போல
காய்ந்துபோன டோர்டோன்
குட்டிக் காளான்கள்.

வழக்கமாக பற்களுக்குத்தான் உவமை சொல்வார்கள். இங்கேயோ காய்ந்துபோன குட்டிக் காளான்களுக்கு உவமையாக பற்கள் சொல்லப்படுகின்றன. உடனேயே சிறுபாணாற்றுப்படை வரிகள் ஞாபகத்துக்கு வரும். ’மடவோர்/ நகா அர் அன்ன/ நளிநீர் முத்தம்/ வாள்வாய் எருந்தின்/ வயிற்று அகத்து அடக்கி.’ ’பெண்கள் தங்கள் செறிவான பற்களைப் போன்ற முத்துக்களை அகன்ற வாய் உடைய பைகளில் நிரப்பி’ என்று பொருள். வழக்கமாக முத்துக்கள் போன்ற பற்கள் என்று சொல்லும் உவமை இங்கே பற்கள் போன்ற முத்துக்கள் என்று மாறிவிடுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பெயர் தெரியாத புலவரால் எழுதப்பட்ட சங்க இலக்கியக் கவிதை வரிகள் தற்காலத்து அமெரிக்க கவிஞர் ஒருவரின் வரிகளோடு ஒத்துப் போவது அதிசயம்தான்.

ஜிம் ஹாரிஸனின் எழுத்தை வில்லியம் ஃபாக்னர், ஏர்னஸ்ட் ஹெமிங்வே போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களுடன் ஒப்பிடுவார்கள். இவர் இதுவரை 34 நூல்கள் எழுதியிருக்கிறார். அவை 24 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் மிகவும் முக்கியமான விசயம் என்னவென்றால் ஜிம் ஹாரிஸன் American Academy of Arts and Letters என்ற அமைப்பில் அங்கத்தவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் என்பதுதான். ஓர் எழுத்தாளருக்கோ கலைஞருக்கோ கிடைக்கக்கூடிய ஆகக்கூடிய கௌரவம் இதுதான். அமெரிக்காவின் தலை சிறந்த எழுத்தாளர்களாலும் கலைஞர்களாலும் உருவாக்கப்பட்ட இந்த அவையில் 250 பேர் மட்டுமே அங்கம் வகிக்கலாம். அதில் ஒருவர் இறந்துபோனால் அவரின் இடத்தை நிரப்ப அங்கத்தவர்கள் கூடி முடிவெடுத்து இன்னொருவரை அழைப்பார்கள். எந்த நேரத்திலும் அங்கத்தவர் எண்ணிக்கை 250 ஐ தாண்டுவது கிடையாது.

இவருடைய கவிதைகளை படிக்கும்போது இவருக்கு சடங்குகள், பழைய நம்பிக்கைகள் ஆகியவற்றில் நம்பிக்கை இருப்பதுபோல தோன்றும். சில கவிதைகளை படித்து முடித்த பிறகு சிரிக்க வேண்டுமா அல்லது துயரப்படவேண்டுமா என முடிவெடுக்க முடியாமல் போகும். மொழியை வைத்து இவர் விளையாடுவதில்லை. சிறிய சிறிய சம்பவங்களை இணைத்து சிறப்பான காட்சிப்படுத்தலை தந்துவிடுவார். நெகிழ்ச்சியான கவித்துவ அனுபவம் உங்களைத் தேடி வரும்.

நான் ஒரு பெண்ணை நடனத்துக்கு அழைத்துச் சென்றேன்
அவள் இன்னொருவனுடன் திரும்பினாள்.
மன்னித்தேன்.
வேறொரு பெண்ணை நடனத்துக்கு அழைத்துச் சென்றேன்
அவள் இரண்டு ஆண்களுடன் வீடு திரும்பினாள்.
அவளை மன்னித்தேன்.
ஒரே மாதிரியாக இது தொடர்ந்தது.
நான் மன்னித்தேன்.
வெறுப்பு புழுக்களால் என் மூளை
அரிக்காமல் இருக்க.

ஜிம் ஹாரிஸனுடைய கவிதைகள் அநேகமாக நீங்கள் நினைப்பதற்கு எதிராகவே இருக்கும். பழமையில் பற்றும், இயற்கையின் நேசிப்பும் கொண்ட கவிதைகள் உங்கள் இருப்பை கேள்வியாக்கும். காரணம் இல்லாமல் மனம் அமைதி இழந்து தவிக்கும்.
கவிதைகள்தான் அப்படி இருக்கும். இவருடன் நேரில் பழகியவர்கள் இவரை நகைச்சுவை உள்ளவர் என்று சொல்கிறார்கள். இவருக்கு ஒரு கண்தான் உண்டு. மற்றக் கண் பார்வையை சிறு வயதிலேயே இழந்துவிட்டார். ஒருமுறை இவருடைய நண்பர் ஒருவரை பார்க்கச் சென்றார். அவர் வல்லூறுகளை பயிற்றுவிப்பவர். புறாவை பறக்கவிட்டு அதை வேட்டையாட வல்லூறுக்கு பயிற்சி அளித்துக்கொண்டிருந்தார். வல்லூறு புறாவை துரத்தியபோது புறா பறந்துவந்து ஜிம்மின் பின்னால் பதுங்கியது. இவர் உருண்டு விழுந்து வல்லூறிடம் இருந்து தப்பினார். நண்பர் என்ன நடந்தது என வினவ இவர் ’உன்னுடைய வல்லூறு புறாவை தேடி வரவில்லை. என் கண்ணை அல்லவோ குறிவைத்தது. அதுவும் என்னுடைய நல்ல கண்’ என்றாராம்.

இவருடைய எந்த ஒரு கவிதையை எடுத்துப் படித்தாலும் அது மனதை குலைத்துவிடும். அதில் என்ன சொல்லியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முன்னரே மனம் எதையோ இழந்துவிட்டதுபோல தவிக்கத் தொடங்கும். சில சமயங்களில் இசை ஓடிக்கொண்டே இருக்கும். நின்றவுடன்தான் அது அத்தனை நேரமும் ஒலித்தது தெரியவரும். அப்படித்தான் இவரது கவிதையும். ஏற்கனவே இருந்ததை திரும்பவும் கண்டுபிடிப்பது. ஓர் இடத்தில் இப்படிச் சொல்கிறார். ’எப்படி சுயசரிதை எழுதலாம். உன்னுடைய மண்டைக்குள் உள்ள வலியையும் வேதனையையும் தவிர்த்து. என்னுடைய கடவுச்சீட்டு முடிவு தேதி என்னுடைய முடிவு தேதியை தாண்டி இருக்குமா?’ இன்னொரு இடத்தில் சப்பாத்து தொழிலாளி செய்த சப்பாத்தை நிராகரிக்கிறார். அவருக்கு இன்னொரு கவிஞன் செய்த சப்பாத்துதான் தேவை என்கிறார்.

கவிஞர்கள் எத்தனைதூரம் இரவுகளை விரும்புகிறார்களோ அத்தனை தூரம் அவற்றை வெறுக்கிறார்கள். ‘இரவுப் பயங்கள்’ என்ற கவிதையை ஜிம் இப்படி தொடங்குகிறார். ’உனக்கு என்ன பயம் இரவு என்றால்?’ இந்த ஆரம்ப வரிகள் கிழக்கிலங்கை கவிஞர் அனாரை உடனே நினைவுக்கு கொண்டு வருகின்றன.
கடக்கவே முடியாமல்
என்முன்னே தொங்குகிறது
தணல் நதியாய் இரவு.

உலகத்து கவிஞர்கள் எல்லோருடைய உணர்வுகளும் ஒரே மாதிரி இருப்பது ஆச்சரியம்தான்.

* * *
ஜிம்முடைய கடிதத்துக்கு நான் ஒரு பதில் எழுதினேன். நான் எந்த நாட்டவன் என்பதை சொல்லிவிட்டு என்னுடைய மொழியைப் பற்றியும் எழுதினேன். வேற்று நாட்டு எழுத்தாளர்களுக்கு எழுதும்போது ஒரு வழக்கம் வைத்திருந்தேன். ஏ.கே ராமானுஜனின் Poems of Love and War நூலை கடிதத்துடன் அனுப்புவது. அப்படியே செய்தேன். அந்த நூலைப் படித்தால் அவருக்கு தமிழ் மொழி பற்றி ஓரளவுக்கு தெரிய வரும் என்பது என் அபிப்பிராயம். ஆறுமாதம் சென்றுவிட்டது. ஜிம்மிடமிருந்து பதில் இல்லை. ஆனாலும் ஒவ்வொருநாளும் கணினியை திறந்ததும் பதில் வந்திருக்கிறதா என்று பார்ப்பதை நிறுத்த முடியவில்லை. நவீன தொழில் நுட்பம் வளர்ந்து எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. இவரோ தொழில் நுட்பத்தை இப்படி பின்னுக்கு தள்ளிக்கொண்டு போகிறாரே என்று நினைப்பேன்.

ஜிம்மை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர் தொலைபேசியில் அழைத்து அடிக்கடி ’பதில் வந்துவிட்டதா?’ என்று கேட்பார். நான் இல்லையென்று சொல்வேன். ஒரு நாள் அவர் கேட்டார், ‘என்ன காரணமாயிருக்கும்?’

நான் ‘வேறு என்ன? சந்திரன்தான் குற்றவாளி’ என்றேன்.

Comments are closed.